தற்கொலை சுற்றுலா என ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுவிட்சர்லாந்து நாட்டில்தான் தற்கொலை சுற்றுலா எனும் முறை உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகருக்கு சென்று தற்கொலை செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அங்கு தற்கொலை கிளினிக் என ஒன்று உண்டு. அங்கு சென்று நீங்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். இதுபோன்ற தற்கொலைகளை அந்நாட்டின் சட்டம் தடுப்பதில்லை. இதைத்தான் தற்கொலை சுற்றுலா என அழைக்கிறார்கள்.
ஆனால் இந்தியா அப்படியல்ல. தற்கொலைகள் இங்கு சட்ட ரீதியாகவும், சமுதாய கண்ணோட்டத்திலும் அனுமதிக்கப்படுவதில்லை. தற்கொலை முயற்சிகளும் கூட இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. சட்டரீதியாக நீங்கள் தற்கொலைக்கு முயன்றாலோ அல்லது யாரையாவது தற்கொலைக்கு தூண்டினாலோ நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதுதான் நம் நாட்டின் தற்போதைய நிலை. ஆனால் தற்கொலைகளின் எண்ணிக்கை இங்கே குறைந்தபாடில்லை. சாதாரண வயிற்று வலியில் துவங்கி உடல் உபாதைகள், பணப்பிரச்னை, உறவு பிரச்னை, பயம், குற்ற உணர்ச்சி என தற்கொலைகளுக்கு ஏகப்பட்ட காரணங்கள் இங்கு குவிந்து கிடக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் 25 வயது வாலிபர் ஒருவர் வேலையின்மையால் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்காக அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309ன் படி அவர் மீது வழக்கு தொடர்ந்தனர் காவல்துறையினர். "எனக்கு வேலை கிடைக்கலை. என்னால வாழ முடியலை. அதுக்காக சாகறேன். என் மேல எதுக்கு சார் கேஸ் போடறீங்க?" என காவல்துறையினரை பார்த்து அவர் கேட்ட கேள்விக்கு அவர்களால் சரியா விளக்க முடியவில்லை.
'இந்திய தண்டனை சட்டத்தின் படி (309) தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குரிய குற்றம்' இதை மட்டும் தான் காவல்துறையினர் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆனால் அந்த சட்டத்தை மக்களுக்கு புரியும் வகையில், காவல்துறையினரால் சொல்ல முடியவில்லை. சொல்லவும் முடியாது. ஏனென்றால் இந்த சட்டம் ஒரு பொருந்தாத சட்டம்.
நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் படி, ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையும், அதிகாரமும் அவருக்கு வழங்கப்படுவதில்லை. அதனால் தற்கொலை முயற்சி என்பது நம் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம். அதன்படி ஓராண்டு வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது சட்டம். 'அட தற்கொலைக்கு முயற்சி செய்யுறதே பெரிய தண்டனைதான். இதுக்கு ஜெயில் வேறயா?'னு கேக்கறீங்களா? ஆமாம். அப்படித்தான் சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த தற்கொலை முயற்சி வழக்குகள் பெரும்பாலும் போடப்படுவதில்லை. ஒரு அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக தினமும் 5 பேர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்குகள் போடப்படுவதில்லை.
இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்திய பகுதிகளில்தான் தற்கொலைகள் அதிகம். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் தற்கொலைகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளதாக சொல்கின்றன புள்ளி விவரங்கள். ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், 5 முதல் 10 பேர் தற்கொலைக்கு முயன்று, பின்னர் உயிர் பிழைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் இத்தனை பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடுவது என்பது சாத்தியமில்லைதான்.
அரசு அலுவலகங்களில் வேலை நடக்கவில்லை என்றோ அல்லது அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தியோ, பொது இடங்களிலோ நடக்கும் தற்கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே பதியப்படுகின்றன.
இதனை நீதிமன்றங்களும் சில நேரங்களில் உணர்ந்து கொண்டன. பஞ்சாப்பில் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றில், ‘தற்கொலை முயற்சிக்கு தண்டனை என்பது கட்டாயமல்ல. அதை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ளும்' என நீதிமன்றம் தெரிவித்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. இன்னொரு வழக்கில் 'தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கச் சொல்லும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 நம் அரசியலமைப்புக்கு எதிரானது' என சொன்னது நீதிமன்றம். இது உச்ச நீதிமன்றத்தால் ஏற்கபடவில்லை என்றாலும் கூட, தற்கொலை முயற்சிப்பவர்களுக்கு தண்டனை அவசியமல்ல. அதனால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்த்தவே செய்தது.
இதன் அடுத்தக்கட்டம்தான், 'தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது'என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருப்பது. தற்கொலை முயற்சிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 இயற்கைக்கு பொருந்தாத சட்டம். அந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
"பொதுவாக மன வேதனையில் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு மேலும் தண்டனை விதிப்பது என்பது சரியாகாது. அவர்களின் துயரை துடைக்க வேண்டுமே தவிர, தண்டனை தரக்கூடாது. எனவே இது பொருந்தாத சட்டம். இதை நீக்க வேண்டும்" என தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட கமிஷனே கடந்த 2008ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவை நீக்க பரிந்துரைத்தது. இந்த கோரிக்கைகளும், பரிந்துரைகளும்தான் இப்போது சட்டப்பிரிவு 309 நீக்கப்பட உள்ளதற்கு முக்கிய காரணம்.
மத்திய அரசின் இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "ஏற்கனவே தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலை முயற்சிகளுக்கு தண்டனை இல்லை என்றால் அது தற்கொலைகளை அதிகரிக்குமே என்று சிலர் கேட்கக்கூடும். நிச்சயம் இல்லை. ஏனென்றால் தண்டனை ஒருவரை தற்கொலை முயற்சியில் இருந்து நிச்சயம் தடுக்காது. ஒருவர் மனரீதியாக சிக்கலுக்கு உள்ளாவது தான் தற்கொலை முயற்சிகளுக்கு காரணம். தன் உயிரையே இழக்க துணிந்து விட்டவர், நிச்சயம் தண்டனைக்கு பயந்து தற்கொலை முயற்சியை தள்ளிப்போட வாய்ப்பில்லை. எனவே இந்த சட்டம் நீக்கப்படுவது வரவேற்கத்தக்கது," என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
அதே நேரத்தில் தற்கொலைகள் தடுப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்கொலைகள் ஏன்? எதற்கு நடக்கிறது என்பதை ஆய்வு செய்து, அதனடிப்படையில் தற்கொலை செய்து கொள்ள முயலுபவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் தற்கொலைகளை தடுக்கும். தற்கொலைக்கு முயல்பவர்களையும், தற்கொலைக்கு முயல ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் அது எதுவும் தற்கொலை முயற்சியை நியாயமாக்கி விடாது.
தற்கொலை முயற்சிகள் கண்டிக்கத்தக்கது. ஆனால் தண்டிக்கத்தக்கதல்ல!
- ச.ஜெ.ரவி
No comments:
Post a Comment