Wednesday, December 10, 2014

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு அந்தஸ்து: நாக் கமிட்டி வழங்கியுள்ளது

Dinamani

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு (கிரேடு) வழங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ள 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து மூன்று தினங்கள் பல்கலைக்கழக அனைத்துபுலங்கள் மற்றும் துறைகளையும் ஆய்வு செய்தது.

பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது.1920-ல் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் தனது தாயார் பெயரில் மீனாட்சி கல்லூரி ஒன்றை தொடங்கினார். பின்னர் 1927-ல் தமிழ் மொழி மற்றும் வடமொழி கல்லூரிகளையும் நிறுவினார். 1929-ல் இசைக்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். பின்னர் அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து அப்போதைய சென்னை கவர்னர் அனுமதியோடு 4.3.1929-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது 85 ஆண்டுகளை கடந்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 9 புலங்கள், 50 துறைகளுடன் இயங்கி வருகிறது. நேரடியாக மேலும் 1979-ம் ஆண்டு தொலைதூரக்கல்வி சேவையை இப் பல்கலைக்கழகம் தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசு கடந்த ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு தனது முழுக் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து நடத்தி வருகிறது. அதன் நிர்வாகியாக தமிழகஅரசு முதன்மை செயலாளரான ஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டு பல்வேறு நிதி, நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு முறைகேடுகள் இன்றி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நன்கொடை இன்றி, தகுதி அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் அனுமதி சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு வழங்குவதற்காக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஷெட்டி தலைமையிலான 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு கடந்த நவம்பர் மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கு வருகை தந்தது. இக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பி.ஏ.பிரஜாபதி, பேராசிரியர் பி.பசுல்ரஹ்மான், பேராசிரியர் சைலேஷ்லேலி, பேராசிரியர் பி.கீதா,, பேராசிரியர் அனுபம் மஹாஜம், டாக்டர் சுபேத்குமார்பட்நாகர், ராம.ராமநாத், டாக்டர் என்.எஸ்.டோங்கா, டாக்டர் ஜேக்கப்ஜான் கட்டாகாயம், பேராரிசிரியர், பி.என்.ராய், பேராசிரியர் என்.அழகுமூர்த்தி, நாக் துணை ஆலோசர் எம்.எஸ்.ஷியாம்சுந்தர் ஆகிய 13 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்துவிட்டு சென்றது. இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு (3.09) அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது பல்வேறு துறைகளில் குறிப்பாக கடல்வாழ் உயராய்வு மையம், மொழிப்புல உயராய்வு மையம் மற்றும் மருத்துவம், பொறியியல், வேளாண், கல்வி, உடற்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெருமளவு மாற்றமும், வளர்ச்சியும் அடைந்துள்ளது.

ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளியிடுவதில் தேசிய அளவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில், அண்ணாமலைப் பல்கலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் 10 இடங்களுக்குள் அண்ணாமலைப் பல்கலை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024