Wednesday, December 10, 2014

ஹலோ, 'மன்னார் அண்ட் கம்பெனி'யில இருந்து பேசுறோம்.. உங்க ஏடிஎம் பின் நம்பர் சொல்லுங்க!

Oneindia Tamil

வங்கி ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் (பின் நம்பர்) தெரிவிக்குமாறு செல்போனில் வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு கேட்கும் மர்ம அழைப்புகளால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. ஏ.டி.எம் தொடர்பான எந்தத் தகவலையும் வங்கியிலிருந்து கேட்பதில்லை. ஏ.டி.எம் குறித்த விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏ.டி.எம் கார்ட், கிரெடிட் கார்ட் வசதியை அளித்துள்ளன. வங்கிச் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கிக்குச் சென்று காத்திருப்பதைத் தவிர்க்க ஏ.டி.எம் சேவை பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு மர்ம அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் நபர் தான் வங்கி அதிகாரி என்றும் உங்களின் ஏ.டி.எம் கார்டு சேவையை நீடிக்க வேண்டும். ஆகவே ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் தெரிவியுங்கள் என்றும் கேட்கிறார். அவரது பேச்சில் சந்தேகமடைந்து அவரது பெயர், விவரங்களைக் கேட்டால் அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்து விடுகிறார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டின் எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை தொலைபேசியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024