Thursday, December 11, 2014

வாடகை தாய்கள்

உலகிலேயே பெரிய செல்வம் குழந்தை செல்வம்தான். இல்லற வாழ்க்கையின் இனிய பரிசான அரிய பேறு குழந்தைகள்தான். அத்தகைய குழந்தை பாக்கியம் சில தம்பதிகளுக்கு இயற்கை கொடுக்காமல் இருக்கலாம். அத்தகையவர்கள் தங்களுக்காக ஒரு குழந்தையை தத்து எடுப்பது வழக்கம். அவர்களுக்கு பிறக்கவில்லையென்றாலும், தத்து எடுத்த நாளில் இருந்து அந்த குழந்தை அவர்கள் குழந்தைதான். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பெயரை மறக்கமுடியாத திட்டம் அவர் கொண்டுவந்த ‘தொட்டில் குழந்தை திட்டம்’. இந்த திட்டத்தின்கீழ் ‘பெண் குழந்தை வேண்டாம்’ என்று நினைப்பவர்கள் அதற்காக அந்த குழந்தையை கொன்றுவிடவேண்டாம், அரசிடம் தாருங்கள், அதை அரசின் செல்ல குழந்தைகளாக வளர்க்கிறோம் என்று உருவாக்கிய திட்டத்தின்கீழ், இதுவரையில் 4,500–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளனர். இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் தத்து எடுக்கப்பட்டு, பாசமான பெற்றோரின் அரவணைப்பில் சுகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

சில தம்பதிகள் தங்கள் கருவில் உருவான குழந்தைவேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், இயற்கையாக கருத்தரிக்க அந்த பெண்ணின் உடலில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பை இல்லாமல் இருக்கும், சிலருக்கு கருவை தாங்கும் அளவில் கருப்பை வலுவில்லாமல் இருக்கலாம், சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் கோளாறு இருக்கலாம், சிலருக்கு கருத்தரித்த பிறகு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படலாம், சிலருக்கு கருத்தரிக்கக்கூடாது என்ற அளவில் இதயநோய், சிறுநீரக கோளாறு இருக்கலாம். இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கருவில், தங்கள் கணவனின் உயிர் அணுவில் பிறக்கும் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்களின் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில், ‘வாடகை தாய்’ மூலம் தங்கள் சொந்த குழந்தையைப் பெறும் மருத்துவமுறை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வழியாக இந்தியாவுக்குள் எட்டிப்பார்த்தது. ஆணின் விந்தணுவையும், பெண்ணின் சினை முட்டையையும் வெளியே எடுத்து, சோதனை கூடத்தில் கருவாக உருவாக்கி, அதை குழந்தைபெறும் அளவுக்கு அனைத்து உடல்நலமும் பெற்றுள்ள மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி, வழக்கமாக ஒருபெண் கருத்தரிக்கும் காலம்போல வயிற்றில் சுமந்து பிரசவமாகும் முறைதான் இது. இவ்வாறு நடக்கும் கருவூட்டலைத்தான் ‘செயற்கை தாய்’ மூலம் பிரசவிக்க வைப்பதால், அப்படி அடுத்தவர்களின் கருவை, தன் வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்துக்கொடுக்கும் பெண்களைத்தான் ‘வாடகை தாய்’ என்று கூறுகிறார்கள்.

இத்தகைய வாடகை தாய்கள், திருமணமாகி ஒரு குழந்தையாவது உள்ள 25 வயது முதல் 34 வயது வரையுள்ள பெண்களாக இருக்கவேண்டும், கணவனின் சம்மதம் இருக்கவேண்டும் என்று விதி இருக்கிறது. இவ்வாறு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்களுக்கு, ரூ.4 லட்சம் வரை கிடைப்பதால் பலர் முன்வருகிறார்கள். சென்னையில்தான் இந்த மருத்துவம் முதலில் தொடங்கியது. இப்போது வாடகை தாய்மூலம் குழந்தை பெறுவதற்கான மையமாகிவிட்டது. மேலை நாடுகளில் இதற்காக ரூ.70 லட்சம்வரை செலவாகும் நிலையில், சென்னையில் ரூ.13 லட்சம்தான் ஆவதால், இந்தியா முழுவதிலும் இருந்து, ஏன் வெளிநாடுகளில் இருந்தும் படையெடுத்து வருகிறார்கள். பாராளுமன்றத்தில் இந்த மருத்துவமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் வாடகை தாய் மூலம் தங்களுக்கு குழந்தைபெற விரும்பும் பெற்றோர்கள் 50 வயதைத்தாண்டிய நிலையில் இருக்கவேண்டும் என்று ஒருபிரிவு இருக்கிறது. அதை அரசாங்கம் மறு பரிசீலனை செய்து, இந்த வயதுவரம்பை குறைக்கவேண்டும். ஏனெனில், தங்களுக்கு இயற்கையாக குழந்தைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடனேயே, இவ்வாறு குழந்தையை பெற்றுக்கொள்வதில் எதற்கு தாமதம்வேண்டும்?. மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்காகும் கட்டணம் சாதாரண ஏழை–எளிய, நடுத்தர மக்களால் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பதால், அரசாங்கத்தின் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவமனைகளில் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் நல்லது. ஏனெனில், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல நவீன சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவமனைகளில் இது நிச்சயமாக இயலாத ஒன்று இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025