நோய் ஏற்படும்போது, பெரும்பாலான மிருகங்களும் பறவைகளும் தங்களுக்குத் தாங்களே சிகிச்சை செய்து அந்த நோயைக் குணப்படுத்தும் அறிவு பெற்றிருக்கின்றன.
காட்டில் உள்ள மருத்துவக் குணமுள்ள தாவரங்களைப் பற்றி முதலில் மனிதன், நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் நடவடிக்கையைப் பார்த்துதான் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே சிகிச்சையளித்துக் கொள்ளும் பறவைகளையும் மிருகங்களையும் உற்றுக் கவனித்து புதிய புதிய மூலிகைத் தாவரங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.
ஒரு குரங்கு இருந்தது. ஒரு நாள் திடீரென்று அதற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. பிறகு அது விளையாடவில்லை. சிரிக்கவும்கூட இல்லை. சோர்ந்துபோய் அது ஒரு மூலையில் அமர்ந்து தூங்கி விழுந்துகொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான் விஷயம் என்னவென்று புரிந்தது. அது, ஈரமான சேற்றுக் கட்டியைக் கன்னத்தோடு வைத்து சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது. எதற்காக அது அப்படிச் செய்கிறது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட பல் வலியைப் போக்குவதற்காகத்தான்.
நமக்கு உடல் நிலை சீர் கெட்டால் நாம் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்ப்போம். அவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை உண்போம். ஆனால் நோய் வந்த மிருகங்கள் என்ன செய்யும்? அவை தனக்குத் தானே சிகிச்சையளித்துக்கொள்ளும். இதுபோன்ற திறமை பெரும்பாலான மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
அந்தக் குரங்கு தனக்குக் குளிர்ச்சி கிடைப்பதற்காக ஈர மண் கட்டியைக் கன்னத்தோடு சேர்த்துவைத்துப் பிடித்திருப்பது என்பது, தனக்குச் செய்துகொள்ளும் சிகிச்சையின் ஒரு பகுதிதான். மலேஷியாவில் உள்ள ஒரு மனிதக் குரங்குதான் இப்படிச் செய்தது. சில நாட்களுக்குப் பிறகு, பல் வலிக்குக் காரணமான அந்தக் கெட்டுப்போன பல்லை, அது தானே பிடுங்கி எடுத்துவிட்டது. அதோடு நில்லாமல் தான் பிடுங்கி எடுத்த தன் பல்லை எடுத்துக்கொண்டு வந்து மிகவும் பெருமையுடன் மிருகக் காட்சி சாலையின் பாதுகாவலரிடம் காட்டவும் செய்தது.
ஒரு காட்டு விலங்கிற்கு காய்ச்சல் வந்தால் அது முதலில் என்ன செய்யும்? மிகத் தனிமையான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும். காய்ச்சல் வந்தால், முதலில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அதற்குத் தெரியும். அதற்காக அது காற்றும் வெளிச்சமும், தாராளமாகத் தண்ணீரும் கிடைக்கின்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும். அங்கே மிகக் கொஞ்சமாக உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நன்றாக ஓய்வெடுக்கும். அப்போது சிறுகச் சிறுக அதன் காய்ச்சல் குணமடைந்துவிடும்.
சில நேரங்களில் நாயும் பூனையும் புற்களுக்கிடையில் மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில சமயம் அவை சில வகையான புற்களைப் பறித்துத் தின்பதும் உண்டு. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலியையோ, மற்ற உடல் நலப் பிரச்சினைகளையோ குணப்படுத்துவதற்காகத்தான் அவை இவ்வாறு செய்கின்றன. பூனையும் நாயும் மாடும் மட்டுமல்ல, முற்றிலும் அசைவ உணவையே விரும்பி உண்ணும் மிருகங்கள்கூட, தங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது இதுபோன்று மூலிகைப் புற்களைத் தேடித் தின்பதுண்டு. எந்த நோய்க்கு எந்தப் புற்களைத் தின்ன வேண்டும், அல்லது எந்த மூலிகை இலைகளைத் தின்ன வேண்டும் என்று அவற்றிற்கு நன்றாகத் தெரியும்.
நெடுநாட்கள் குளிர்கால உறக்கத்தில் இருக்கின்ற கரடியும் மற்ற மிருகங்களும், தாங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உடனே முதலில், வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்காக சில வகைக் காய்களையும் கனிகளையும் சாப்பிடும்.
பல நாட்களாக வயிற்றில் தங்கியிருந்த அழுக்கெல்லாம் அகற்றப்பட்டு வயிறு சுத்தமாகும் அல்லவா?
அடிபட்டு ரத்தக் காயம் ஏற்பட்டால் "கிப்பன்' எனும் மனிதக் குரங்குகள், மருத்துவக் குணமுள்ள ஒரு வகைச் செடிகளைத் தேடிப்பிடிக்கும். பிறகு அந்தச் செடிகளின் இலைகளை வாயிலிட்டு நன்றாக மெல்லும்.
மென்ற இலைச் சக்கையை அப்படியே பந்துபோல சுருட்டி அடிபட்ட இடத்தில் அழுத்தி வைக்கும். சில தினங்களுக்குள் காயம் ஆறிவிடும்."கொரில்லா'க் குரங்குகளும், பிரத்தியேக வாசனை உள்ள சில பச்சிலைகளைத் தங்களின் காயங்களில் அழுத்தமாகப் பதித்து வைக்கும்.
நம் கைகால்களில் ஏதாவது முறிவு ஏற்பட்டால் நாம் சில காலம் மாவுக் கட்டுப்போட்டுக்கொண்டிருப்போம் அல்லவா? மிருகங்களுக்கிடையிலும் இதுபோன்ற ஒரு சிகிச்சை முறை உண்டு. ஒரு முறை "மூர்ஹென்' எனும் இனத்தைச் சேர்ந்த காட்டுக் கோழி இதுபோன்று செய்தது. நாம் செய்வதுபோன்று அது மாவுக் கட்டுப் போட்டுக்கொள்ளவில்லை. அது, முறிவு ஏற்பட்ட காலில் கொஞ்சம் சேற்றைப் பூசி பற்று போட்டுக் கொண்டது, அவ்வளவு தான். "வுட் கோக்' எனும் பறவையும் இது போன்று செய்யும். தன் காலில் அடிபட்டால் இந்தப் பறவை, சேற்றையும் ஒரு வகைப் புற்களையும், ஒருவகை வேர்களையும் சேர்த்து பற்று போட்டுக் கொள்ளும்.
தங்களுக்குள் மருத்துவ உதவி செய்து கொள்வதில் எறும்புகள் மிகவும் திறமையானவை. எறும்புக் குடியிருப்பில் உள்ள எந்த எறும்பிற்காவது கால் ஒடிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே மற்ற எறும்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட எறும்பின் காலைத் துண்டித்துவிடும். பிறகு அந்த எறும்பை ஒரு பிரத்தியேக அறையில் வைத்து காயம் ஆறும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்.
தங்கள் காயங்களில் சிலந்தி வலைகளை வைத்து சிகிச்சை செய்து கொள்கின்ற சில மிருகங்களும் இருக்கின்றன. ரத்தக் குழாய்களைச் சுருக்கி, ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கான குணம் சிலந்தி வலைகளுக்கு உண்டு என்பது தான் அதற்குக் காரணம். சில பிராணிகள், சில வகையான ஈக்களின் லார்வாக்களை நூற்றுக் கணக்கில் அள்ளிப் பூசி தங்கள் காயங்களை ஆற்றிக் கொள்ளும். இந்த லார்வாக்கள், காயத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
சில பறவைகள் எறும்புப் புற்றிற்கு மேலே இறக்கை விரித்துப் படுத்துக் கிடக்கும். எறும்புகளில் உள்ள "போர்மிக் ஆஸிட்' என்பதைப் பயன்படுத்தி தங்கள் இறக்கைகளை வலுப்படுத்திக் கொள்வதற்காகத் தான் இது போன்று செய்கின்றன என்று சில விஞ் ஞானிகள் கருதுகிறார்கள். காக்கைகள், வீடுகளில் உள்ள புகைக் குழாய்களின் அருகே அமர்ந்து "புகைக் குளியல்" நடத்தும். யானைகளுக்கு "புழுதிக் குளியல்' நடத்துவது தான் பிடிக்கும். உட லைத் தாக்குகின்ற சிறு பூச்சிகளைத் துரத்துவது தான் இது போன்ற குளியல்களுக்குக் காரணம்.
சில வகை மான்கள் சுண்ணாம் புச்சத்து உள்ள தண்ணீர் குடிப்பதற்காக பல கிலோ மீட்டர் பயணம் செய்யும். அவற்றின் கொம்புகள் சீக்கிரம் வளர சுண்ணாம்புச் சத்து மிகவும் ஏற்றது. பெண் கோவேறு கழுதைகள் கர்ப்ப காலத்தில் குறிப்பாக ஒரு வகை உணவை மட்டுமே உண்ணும். ஆரோக்கியமான குட்டிகள் பிறப்பதற்காகத்தான் அது இது போன்று செய்கிறது.
கொரில்லாக் குரங்குகள் வழக்கமாக மாலை நேரங்களில் தங்கள் பற்களைச் சுத்தப் படுத்திக் கொள்ளும். "சிம்பன்ஸி' குரங்குகள் தங்கள் பற்களை சுத்தப்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் குட்டிகளின் பற்களையும் சுத்தம் செய்யும். சில சமயம் கொரில்லாக் குரங்குகள், தங்கள் இனத்தில் எந்தக் குரங்கிற்காவது பல் வலி வந்தால், அந்தக் குரங்கை தரையில் மல்லாந்து படுக்க வைக்கும். பிறகு சிறு கம்புகளைக் கொண்டு அதன் கெட்டுப் போன பல்லைப் பிடுங்கி எடுக்கும். ஏறத்தாழ இது ஒரு அறுவை சிகிச்சை தான்.
சில முதலைகள் தங்கள் பற்களின் இடையில் சிக்கிக் கொண்ட உணவுத் துணுக்குகளை அகற்றுவதற்காக சிறிய பறவைகளைச் சார்ந்திருக்கும். தங்கள் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துணுக்குகளை பறவைகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, எவ்வளவு தான் பசியாக இருந்தாலும் இந்த முதலைகள் அந்தப் பறவைகளை உண்பதில்லை.
வளர்ப்பு யானைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அப்போது யானைப் பாகன்கள் அவற்றைக் காட் டிற்குக் கொண்டு செல்வார் கள். காட்டிற்குச் சென்றவுடன் அந்த யானைகள் மூலிகைச் செடிகளைத் தேடிப் பிடித்துத் தின்னும்.
காட்டில் உள்ள சில மூலிகைச் செடிகள் மிருகங்களின் பெயரில் அறியப்படுகின்றன. வடக்கு அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்கள், கரடிகள் நோய் வாய்ப்படும் போது வழக்கமாகத் தின்கிற ஒரு செடிக்கு "கரடி மருந்து' என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள் என்பது குறிப்பிடத்தக்து.
SOURCE:
No comments:
Post a Comment