கிறிஸ்தவ மதப்படி, இறைவனால் தரப்பட்ட உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை மனிதர்களுக்கு கிடையாது. அதனால், விக்டோரியா மகாராணி காலத்தில் பிரிட்டனில் தற்கொலை முயற்சி ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்தியாவில் தண்டனைச் சட்டம் அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்டபோது, இங்கேயும் தற்கொலை முயற்சி தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய சட்ட ஆணையம் 1971 ஜூன் மாதம் தாக்கல் செய்த தனது 42-ஆவது அறிக்கையில், தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் என்கிற சட்டப் பிரிவை அகற்றப் பரிந்துரைத்திருந்தது. 1985-இல் தில்லி உயர்நீதிமன்றமும், 1987-இல் மும்பை உயர்நீதிமன்றமும், 1994-இல் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டபோது, சட்டப் பிரிவு 309 அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கருத்துத் தெரிவித்தன.
2008-இல் சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தற்கொலை முயற்சியை கிரிமினல் குற்றமாகக் கருதுவது கூடாது என்று மீண்டும் பரிந்துரைத்தது. தற்கொலை முயற்சி என்பது பரிவுடனும், மனோதத்துவ சிகிச்சையுடனும் அணுக வேண்டிய ஒன்றே தவிர, தண்டனைக்குரியதாகக் கருதுவது மனிதநேயமாகாது என்று சட்ட ஆணையம் கருதியது.
சட்ட ஆணையத்தின் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் மாநில அரசுகளின் கருத்தைக் கோரியது. தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களும், நான்கு யூனியன் பிரதேசங்களும் தண்டனையியல் சட்டப் பிரிவு 309 அகற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய அரசு தற்கொலையை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்க இருக்கிறது.
அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரப்படி 2012-ஆம் ஆண்டில் 1,35,445 பேரும், 2013-ஆம் ஆண்டில் 1,34,799 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 24% பேர் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்றும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 39.8% பேர் தூக்குப் போட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேசிய அளவில், 2013-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாளொன்றுக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது. மகாராஷ்டிரத்தை (16,622) தொடர்ந்து தற்கொலையில் அதிகமாக ஈடுபடுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (16,601) என்கிறது புள்ளிவிவரம். மேலே குறிப்பிட்டதெல்லாம், தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் இதைப்போல பல மடங்கு அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மும்பை உயர்நீதிமன்றம் கூறியதுபோல வாழ வழியில்லாமல் அல்லது பிடிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒருவரை, தற்கொலை முயற்சி என்கிற பெயரில் தண்டிப்பது மனிதாபிமானமாகாது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், தற்கொலை சட்டப்படி குற்றமில்லை என்றாகிவிட்டால், இன்றைய சமூக, பொருளாதாரச் சூழலில் சாதாரணமான பிரச்னைகளுக்குக்கூட மனிதர்கள், குறிப்பாக மாணவ - மாணவியரும், இளைஞர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டார்களா என்கிற கேள்வி எழுகிறது.
அரசியல் தலைமையின் பார்வை படுவதற்காக அல்லது அரசியல் காரணங்களால் உணர்ச்சி மேலெழுந்து தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்டப்படி பாதுகாப்புடன் நடக்கத் தொடங்குமே, அப்போது என்ன செய்யப் போகிறோம்?
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டவர்கள் மிகமிகக் குறைவு. பொதுவாக நீதிமன்றங்கள் அப்படிப்பட்டவர் களைக் கண்டித்து விடுதலை செய்வதுதான் வழக்கமாக இருக்கிறது.
தற்கொலை முயற்சிக்குத் தண்டனை என்பது மனிதாபிமானமற்றதுதான். ஆனால், தண்டனையே இல்லாமல் இருப்பது, தற்கொலை முயற்சிகளுக்கு ஊக்கமளிக்குமே, அதுதான் பயமாக இருக்கிறது.
No comments:
Post a Comment