மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்த தவறாத கவிஞர் மருதகாசி ‘கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே’ என்று காதலின் ஆரம்பத்தையும் ‘எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே’ என்று காதலின் மடிவையும் எழுதிக் காட்டியவர்தான் கவிஞர் மருதகாசி.
பிறப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார்.
தந்தை: அய்யம்பெருமாள் உடையார்
தாய்: மிளகாயி அம்மாள்:
கல்வி: உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.
திருமணம்: 1940 இல் தனக்கோடியை மணந்தார். இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
நாடகப் பணி: அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புகளுக்குப் பிறகு குடந்தையில் தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். மு.கருணாநிதி எழுதிய மந்திரகுமாரி போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்தார்.
திரைப்படப்பாடல்கள்:
தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.
1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.
மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.
1950 இல் வெளிவந்த பொன்முடி படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.
""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.
1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர்,
எம்.ஜி.ஆரால் மீண்டும் திரையுலகில் மருதகாசி:
சொந்த ஊருக்கே திரும்பிச் சென்ற மருதகாசி மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே என்ற பாடலை எழுதினார்.
தேவர் பிலிம்ஸின் "விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். "கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற "விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.
இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம் படத்தின் மருதகாசி பாடல்கள் அரசுடைமை.
டி.எம்.செளந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.
குரு: உடுமலை நாராயணகவியை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர்.
என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள் கவிஞரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது எனக் கூறியவர்.
பட்டம்: திரைக்கவித் திலகம் என்னும் பட்டம்
அரசுடைமை:
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
மனதை விட்டு மறையாத பாடல்கள்:
-"மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு வூட்டி வயக்காட்டை உழுதுபோடு சின்னக் கண்ணு"
-"வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்"
-"மாசில்லா உண்ணைக் காதலே"
-"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா...
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா"
-"சமரசம் உலாவும் இடமே - நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"
-"ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை"
-"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி, விவசாயி"
- ஆளை ஆளைப் பார்க்கிறார்
-சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு
-கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
-ஆனாக்க அந்த மடம்…
-கோடி கோடி இன்பம் பெறவே
-ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே
-கடவுள் என்னும் முதலாளி
-வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
-முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல
-காவியமா? நெஞ்சின் ஓவியமா?
இப்படி திரைப்பட உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்தக் கவிஞரும் இவரே.
திரைப்பட பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர் மருதகாசி.
மறைவு: தமிழ் திரைப்பட உலகில் காதலுக்கும் பாட்டு. கல்யாணத்துக்கும் பாட்டு. உழவர்க்கும் பாட்டு. உழைப்பாளிக்கும் பாட்டு என இவர் தொடாத துறையில்லை. எழுதாத பாட்டில்லை. அதாவது 1949–ல் ‘மாயாவதி’ என்ற படத்தில் தொடங்கி 1983–ல் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ திரைப்படம் வரை தொடர்ந்த கவிஞரின் திரையுலக சகாப்தம் 29.11.1989 இல் தூங்கியது.