Friday, May 1, 2015

தினத்தந்தி – டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் வழி காட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் நாளை நடக்கிறது

சென்னை,

தினத்தந்தியும் டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி? என்பதை அவர்களே அறிந்துகொள்வதற்கு வசதியாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற சிறப்புமிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, ‘ தினத்தந்தி’ நாளிதழ் நிறுவனம் ஏற்கனவே 13 ஆண்டுகள் நடத்தி முடித்து விட்டது. இந்த ஆண்டு 14–வது ஆண்டாக தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொள்ளும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ்.கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படுகிறது. தினத்தந்தி நிறுவனம், டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

இலவசமாக பங்கேற்கலாம்

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி ஏ.சி.எஸ்.மருத்துவக்கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம். மாணவர்களுடன் பெற்றோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ள கல்லூரி, கல்லூரியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் வெற்றிநிச்சயம் புத்தகம் முற்றிலும் இலவசமாக தினத்தந்தி வழங்குகிறது. புத்தகத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளது. இது மாணவ–மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

ஐ.பி.எஸ்.அதிகாரி மு.ரவி

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு காவல்துறை தலைவர் முனைவர் மு.ரவி தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக தலைவர் என்ஜினீயர் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகிக்கிறார். துணைத்தலைவர் (நிர்வாகம்) இராம.வாசகம் வரவேற்று பேசுகிறார். கல்விப்பணியில் தினத்தந்தி என்ற தலைப்பில் தினத்தந்தியின் தலைமைபொதுமேலாளர்(புரமோசன்ஸ் ) ஆர்.தனஞ்செயன் பேசுகிறார்.

இதையடுத்து பல்வேறு துறை வல்லுனர்கள், பல்வேறு துறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்.

பொறியியல் துறை பற்றி டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக டீன் பேராசிரியர் டாக்டர் சிரில்ராஜ் பேசுகிறார். அதே பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா உசேன் மருத்துவத்துறை பற்றி விளக்கம் அளிக்கிறார்.

சிவில் சர்வீசஸ் படிப்பு குறித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (நெல்லை கவிநேசன்) பேராசிரியர் டாக்டர் எஸ்.நாராயணராஜன் பேசுகிறார்.

சட்டத்துறை

சட்டத்துறை குறித்து சேலத்தை சேர்ந்த வக்கீல் பிஆர்.ஜெயராஜன் விளக்கம் அளிக்கிறார். பட்டய கணக்கியல் துறை குறித்து மதுரை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி பேசுகிறார். கல்விப்பணியில் ஏ.சி.எஸ்.கல்வி நிறுவனங்கள் என்ற தலைப்பில் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ரமா வைத்தியநாதனும், அதே பல்கலைக்கழக துணைத்தலைவர்(கல்வி) டாக்டர் பி.டி.மனோகரன் கலை மற்றும் அறிவியல் குறித்தும் பேசுகிறார்கள்.

ஓட்டல் நிர்வாகத்துறை பற்றி புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முன்னாள் முதல்வர் எஸ்.முத்தானந்தமும், விளையாட்டுத்துறை பற்றி தமிழ்நாடு உடல்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமியும் விளக்கம் அளிக்கிறார்கள்.

முடிவில் சென்னை தினத்தந்தியின் மேலாளர் டி.ராக்கப்பன் நன்றி கூறுகிறார்.நிகழ்ச்சியை புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார்.

இலவச பஸ் வசதி

‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சிக்கு வரும் மாணவ–மாணவிகளுக்காக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எங்கெல்லாம் இருந்து வரும் என்ற விவரம் வருமாறு:–

அயனாவரம் பஸ்நிலையம், முகப்பேர் பஸ்நிலையம், வடபழனி பஸ்நிலையம் எதிரில், கோயம்பேடு ரோகினிதியேட்டர் அருகே, பொன்னேரி பஸ்நிலையம், செங்குன்றம் பஸ்நிலையம் எதிரில், அம்பத்தூர் சிங்கப்பூர் ஷாப்பிங் மையம் அருகே, பெரம்பூர் ரெயில்நிலையம், மூலக்கடை சிக்னல் அருகே, திருவொற்றியூர் பஸ்நிலையம் மேடவாக்கம் பஸ்நிலையம், தாம்பரம் வசந்தபவன் ஓட்டல், வேளச்சேரி பஸ்நிலையம் எதிரில், கிண்டி சப்–வே அருகே உள்ள பெட்ரோல் பங்க், அடையாறு டெப்போ, பட்டினம்பாக்கம் பஸ்நிலையம், தியாகராயநகர் கிருஷ்ணவேணி தியேட்டர், வள்ளுவர் கோட்டம் சிக்னல், படப்பை பஸ்நிலையம், காஞ்சீபுரம் அபிராமி ஓட்டல், திருவள்ளூர் பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம், செங்கல்பட்டு பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து காலை 7.30 மணி முதல் 15 நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் புறப்படும்.

நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பி செல்ல இலவச பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது.

பஸ்களுக்காக மேலும் தொடர்பு கொள்ளவேண்டிய செல்போன் நம்பர்கள் 9176374333, 9952950282, 9841835609, 9445343658, 9003174679, 8122934384

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024