Sunday, May 24, 2015

நீங்கள் 1980க்கு பின் பிறந்தவரா?

ஒவ்வொரு தலைமுறையும் எதாவது ஒரு விஷயத்தில் சிறப்பாக சிறந்து விளங்குவார்கள். உதாரணமாக 1960களில் பிறந்தவர்கள் வங்கி துறையில் உயர்பதவிகளில் இருப்பதையும், 1970க்கு பின் பிறந்தவர்கள் நிர்வாகத்தில் உயர்பதவிகளையும் சென்றடைந்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் 'மில்லினியல்கள்' என்ற ஒரு தலைமுறைதான் நாளைய உலகில் அனைத்து பிரிவுகளையும் ஆளும் என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. யார் இந்த மில்லினியல்கள்...?இவர்களால் எப்படி நாளைய உலகை ஆளமுடியும் என்ற கேள்விகள் பலருக்கு எழுவது நியாயமே. இந்த கேள்விகளுக்கு பதிலை தேடுவோம்...



யார் இந்த மில்லினியல்கள்?

1980க்கு பின் பிறந்த தலைமுறையினறைதான் 'மில்லினியல்கள்' என்கிறோம். இவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கக்கூடிய திறன் வாய்ந்தவர்களாக கூறப்படுகிறார்கள். இதற்கு காரணம் உலகின் கண்டுபிடிப்புகளும், தொழிநுட்பமும் இந்த ஆண்டுக்குள் ஓரளவுக்கு நிறைவான நிலையை அடைந்ததுதான் என்கின்றனர் நிபுணர்கள். இந்த தலைமுறைக்கு கற்றல் என்பது எளிமையாக இருந்துள்ளது. உலகின் அனைத்து பகுதியில் உள்ள மக்களும் 1980களுக்குள் தங்களை உலகின் மற்ற பகுதிகளோடு தொடர்புபடுத்த துவங்கிவிட்டனர். இவர்களுக்கு சென்ற நூற்றாண்டின் வரலாறு துவங்கி இன்றைய செல்ஃபி வரை அனைத்துமே பழக்கப்பட்ட விஷயமாக மாறிவிட்டன என்பதுதான் இதற்கு காரணம்.

மில்லினியல்கள் வெற்றிக்கு உதவும் 3 விஷயங்கள்:

தொழில்நுட்பம்!

'மில்லினியல்கள்' பெரிதும் பேசப்பட காரணம் தொழில்நுட்பம்தான். 1980களுக்கு முன் இருந்தவர்களிடம் இன்டெர்நெட் பற்றி பேசினால் ஓரளவுக்குதான் தெரியும், ஆனால் மில்லினியல்கள் அனைவருக்கும் இன்டெர்நெட் நன்கு பரிட்சயமான விஷயமாக மாறிவிட்டது. உலகின் தகவல்களை விரல் நுனியில் தரும் இன்டெர்நெட் மூலம் உலகை கவனிக்கக்கூடியவர்களாக இந்த மில்லினியல்கள் இருக்கிறார்கள். அதேபோல் இன்றைய தலைமுறை மறந்து போன ரேடியோ, மிகப்பெரிய கணினி இவற்றை பற்றிய அறிவும் இவர்களிடத்தில் உள்ளது. கீபேடு உள்ள போன்கள் துவங்கி இன்றைய ஸ்மார்ட்போன்கள் வரையிலும், 1ஜி துவங்கி 4ஜி வரை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு தெரியாத தொழில்நுட்பமே இல்லை என்ற நிலையில் உள்ள தலைமுறையினர்.



கலாச்சாரம்!

கலாச்சாரங்களை கற்றுக்கொள்ளுவதில் இன்றைய இளைஞர்களுக்கு நிகர் அவர்கள்தான். கலாச்சாரம் என்பது உலக அளவில் பெரிய அளவில் பேசப்படும் விஷயம். ஒரு நாட்டில், கலாச்சாரத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலை பலருக்கு இருக்கும். ஆனால் இந்த மில்லினியல்கள் அனைவரும் எளிதாக கலாச்சாரங்களை கற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றனர். இந்தியர் ஒருவர் அமெரிக்காவுக்கு சென்று, அங்குள்ள கலாச்சாரத்தை எளிதில் ஏற்றுக் கொண்டுவிட முடியும். அதேபோல் அமெரிக்கர் ஒருவர் இந்தியா வந்தால், இங்குள்ள கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொள்வது சற்றுக் கடினம். ஏனெனில் வட இந்தியாவில் இருப்பது போல், தமிழ்நாட்டில் கலாச்சாரம் இருக்காது. ஆனால் ஒரு அமெரிக்க மில்லினியலால் இந்த மாறுபாடுகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறது ஆய்வுகள்.

மாற்றத்தை துவங்கி வைப்பவர்கள்!

ஒரு நிறுவனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நிர்வாகம் முடிவெடுக்கிறது என்றால், அதில் இவர்களது பங்களிப்பு அதிகமாக உள்ளது. பழமை வாய்ந்த நிறுவனங்கள் அனைத்தும் பழைய முறைக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும். அது புதிய முறையில் இயங்க இந்த மில்லினியல்களின் உதவி அதிகம் தேவைப்படுகிறது. ஒரு அலுவலகம் அல்லது நிர்வாகத்தில் மாற்றத்துக்கான துவக்க புள்ளி இவர்களிடமிருந்து துவங்குகிறது. அதனாலேயே இவர்கள் மாற்றத்தை துவக்கி வைப்பவர்களாக உள்ளனர். அதேபோல மாற்றத்துக்கு தங்களை எளிமையாக பழக்கப்படுத்திக் கொள்பவராகவும் இருக்கிறார்கள்.

ஏன் மில்லினியல்கள்?

இந்த விஷயங்களை 1980க்கு முன் பிறந்தவரோ அல்லது நாளை பிறக்க போகும் தலைமுறையோ செய்து விடலாமே. இவர்கள் ஏன் முக்கியம் என்றால் இவர்களால் மட்டுமே நாளைய தலைமுறைக்கு நேற்றைய விஷயங்களையும், நாளைய புதுமைகளையும் புரிய வைக்கவும், சொல்லி கொடுக்கவும் முடியும். 1980க்கு முன் பிறந்தவர்கள் மாறுதலுக்கு உட்படுவது சற்று கடினமான ஒன்று என்பதால், இந்த விஷயங்களை அடுத்த தலைமுறையினரிடம் அவர்களால் அவ்வளவு எளிதாக கொண்டு சேர்க்க முடியாது.

சில உதாரணங்கள்:

இந்த மில்லினியல்கள் உண்மையிலேயே ஜெயிக்கிறார்களா என்றால் ஆம். அதற்கு சில உதாரணங்கள் உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை பல மேலாண்மை கல்லூரிகள் பாடமாக பார்க்கின்றன. விளம்பரம், தலைமை பண்பு, விளையாட்டு, உத்திகள் என பல விஷயங்களிலும் தோனிக்கு நிகர் தோனி தான்.

அதேபோல விளையாட்டு துறையை சேர்ந்த விராட் கோலி, சாய்னா நெஹ்வால் போன்றவர்களும் தோனியை போலானவர்களே. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஓக்களான சச்சின் மற்றும் பென்னி பன்சால், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் என பட்டியல் நீள்கிறது. இந்த மில்லினியல்கள் ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் ஒருவராவது இடம்பெற வேண்டும். அப்படி இடம்பெற்றால்தான் நவீன உலகிற்கு மாற முடியும்.

நீங்கள் 1980க்கு பின் பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு தோனியாகவோ அல்லது ஜூக்கர்பெர்க்காகவோ ஆகும் திறன் உள்ளது என்பதை புரிந்து, அதற்கேற்ப உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மில்லினியல்களாக இருப்பது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. உங்கள் அறிவுதான், நாளைய உலகை ஆளப்போகிறவர்களுக்காக பரிந்துரையாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

- ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024