Saturday, May 30, 2015

பூனைக்கு நாமே மணி கட்டுவோமே...!

vikatan.com



சென்னைப் பெருநகர வீதிகளில் அலுவல் நிமித்தம் சுற்றித்திரிந்தபோது, என் கண்ணில் கண்ட காட்சி, அதன் அசுர வளர்ச்சியோ, விண்ணை முட்டும் கட்டிடங்களோ, வீதிகளில் உலா வரும் ஆடம்பர கார்களோ, நவநாகரீக மங்கைகளோ, கொட்டி இரைத்த செல்வச் செழிப்புகளோ, ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களோ அல்ல!
என்னை சொல்லொண்ணா வருத்தத்தில் ஆழ்த்தியது - அங்கு குவிந்து இருக்கும் குப்பைகளும், படிந்து இருக்கும் தூசிகளும், அசுத்தமான ரோடுகளும், பார்க்கக்கூட சகிக்காத வியாபாரத்தலங்களும், அதையெல்லாம்விட, இதற்கும் நமக்கும் துளிகூட சம்பந்தமே இல்லையென்று மனித உருவில் நடமாடும் நம் ஜனங்களும்!

இது சென்னைக்கு மட்டுமானது அன்று. தமிழகத்தின் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். எங்கே போகிறது இந்த சமூகம்? தனிமனித கட்டுப்பாடோ, சமுதாய சிந்தனைகளோ, பொறுப்போ, சமூக அக்கறையோ, சுகாதாரம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வோ அற்று, நாம் யாரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எனக்குத் தெரிந்து, வாசல் கூட்டி, கோலம் போட்டு, நமது தெருக்களை சுத்தமாக வைத்து இருந்தோம் ஒரு காலத்தில். நம் வாசல் மீதும், நம் வீதிகளின் மீதுமே அக்கறை இல்லாமல் போய்விட்டதா? வீட்டைப் பெருக்கி ரோட்டில் போடும் கலாச்சாரத்திற்கு எப்பொழுது மாறினோம்? ரோட்டில் மலம் கழிக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அண்டை மாநிலமான கேரளத்தில்கூட இந்த அசிங்கம் அரங்கேறுவது இல்லை. நமக்கு சாலையை அசுத்தம் செய்ய உரிமை இருக்கும்போது, அதே சாலையை பராமரிக்கும் உரிமையும், கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

நம்மைவிட வளர்ச்சியில் பின்தங்கிய ஸ்ரீலங்கா சென்றிருந்தபோது, அவர்களின் தூய்மை என் கண்ணை உறுத்தியது. பொறாமையில் என் நெஞ்சம் குமுறியது. இரக்கமே இல்லாத, அரக்க குணம் பெற்றவன் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தபோதும், அவன் தன் நாட்டைத் தூய்மையாக வைத்து இருந்தான். ஒருவர் சாலையைக் கடக்க வேண்டும் என்று விரும்பினால், அத்தனை வாகனங்களும் பொறுமையாக நின்று அவர் கடக்கக் காத்திருக்கிறது. என்னே ஒரு சமுதாய அக்கறை?
சிங்கப்பூரில் தூய்மை மட்டுமல்லாது, சின்ன மண் தரைகள்கூட அழகிய பூங்காவனங்களாக மிளிர்கிறது. ஒரு காலத்தில் கடத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சிங்கப்பூர், ஒரு மாமனிதரின் முயற்சியால் எப்படி மாறிப்போனது. நம் வீட்டு மொட்டை மாடியில் குப்பை இருந்தால்கூட, வீட்டுக்கு வந்து அபராதம் வசூலித்துவிடுவார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே!

'அரசாங்கம் செய்யும்' என்ற நம்பிக்கையை தயவுசெய்து விட்டுவிடுங்கள். அவர்களில் பலர், அவர்களின் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில நல்ல (அரசியல்வாதிகளையும்) உள்ளங்களையும் அவர்கள் கட்டுபடுத்தி, நடமாடக்கூட விடமாட்டார்கள்.

வழக்கமான ஒரு கேள்வி எழும் உங்கள் மனதில்... 'நீ என்ன செய்தாய்?' என்று. நான் கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியை அடுத்துள்ள பி.என்.ஆர். லே-அவுட்டில் சில வருடங்கள் இருந்தேன், முதல் இரண்டு வருடமும் நானும் அரசாங்கத்தைக் குறைக் கூறிக்கொண்டு, என் வாசலிலே குப்பைக் கொட்டிக்கொண்டு மிக மோசமான இந்திய பிரஜையாகவே இருந்தேன்.

ஒரு நாள் என் மூளையில் மின்னல் ஒன்று தாக்கியது, என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது. ஏதாவது செய்ய வேண்டும் என்று மனது துடித்தது. பிறகென்ன...? எல்லோர் வீட்டு கதவுகளையும் தட்டினேன். அறிமுகம் இல்லாத பலர் வீடுகளும் இதில் அடக்கம். ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். என் வார்த்தைகளில் ஏதோவொன்று அவர்களுக்கு நம்பிக்கை தர, என்னுடன் துணையாகப் போராட சம்மதித்தனர். பிறகென்ன... அடுத்தடுத்து அரங்கேறியது அதிரடி நடவடிக்கைகள்.

முதலில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களை சந்தித்து எங்கள் குறைகளைத் தெரிவித்தோம். 'முதல் ஒரு முறை நீங்கள் சுத்தம் செய்து தாருங்கள். பிறகு நாங்கள் அதைப் பேணிக் கொள்கிறோம்' என்ற எங்கள் உறுதிமொழியை நம்பி அவரும் நடவடிக்கைகள் எடுத்தார்.

மலைப்போல் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது. பல எதிர்ப்புகளுக்கிடையே பல அரசியல் ஆதரவு பெற்றவரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இருபுறமும் மரங்கள் நடப்பட்டது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டது. அதிகாரிகளின் பேருதவியாலும், மக்களின் தளராத முயற்சியாலும் அப்பகுதி மிக அழகிய வசிப்பிடமாகியது.

அப்பகுதியில் இருந்து நான் வெளியேற வேண்டும் என்ற சுழல் வந்தபோது, கண்ணில் நீர்த்திவலைகளோடு வழி அனுப்பி வைக்கப்பட்டேன். அதே பணிகளை இன்று நான் இருக்கும் பகுதியிலும் தொடர்கிறேன் - பல நல்ல நெஞ்சங்களின் பேராதரவுடன். எங்கள் காலனியில் ஏதோ ஒரு மூலையில் யாராவது மரத்தில் இருக்கும் ஒரு கிளையை வெட்ட முற்பட்டால், உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தப்படும், உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து, விஷமிகள் விரட்டி அடிக்கப்படுவர். ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம்.

ஈரோடு கதிர் அவர்களின் காவிரிப் பற்றிய பதிவொன்றில், நமக்கு கிடைக்கும் மழைக்கு முக்கிய காரணிகளாக கேரள மற்றும் கர்நாடகம் வனப்பகுதியைச் சுட்டி காட்டி இருந்தார். இதை படித்த எனக்கு,  வெட்கி தலை குனியத்தான் தோன்றியது. எங்கே போனது நம் காடுகள், சாலை ஓர மரங்கள்..? மொத்தத்தில் இரக்கமற்று துருப்பிடித்துவிட்டதா தமிழர்களின் நெஞ்சங்கள்? 

எனதருமை தமிழ் மக்களே! நம் நாட்டை சுத்தப்படுத்த நாம் களம் இறங்குவோம். நமது வருமானத்தில் இரண்டு சதவிகிதமாவது நமது சுத்தம் சுகாதாரத்திற்காக செலவிடுவோம். முதலில் நம் வீட்டு முன்பகுதியை மட்டும் சுத்தம் செய்வோம். பிறகு அந்த வீதியில் மற்றவர்களை செய்ய வைப்போம். வாய்ப்பு இருந்தால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மரங்களை நட்டுச்செல்வோம். நம் குழந்தைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியம் உணர்த்துவோம். மாற்றங்களை பிஞ்சு நெஞ்சங்களில் விதைப்போம். வரும் சந்ததியினர் வாழட்டும். நாடு சுடுகாடாய் மாறுவதை தவிர்ப்போம்! மூச்சு விடுவதற்காவது சிறிது ஆக்சிஜனை விட்டுச் செல்வோம் இவ்வழி மண்டலத்துக்கு.

பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதான் நமக்குப் பிரச்னை. நாமே மணி கட்டுவோம். நம் தெருவுக்கு நாமே ஹீரோவாக இருப்போமே!

அரசாங்கத்துக்கு ஒர் வேண்டுகோள்! அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்திக் கொடுங்கள். அதற்காக நீங்கள் என்ன கசப்பு மருந்து கொடுத்தாலும் இரு கரம் நீட்டி பெற்றுக் கொள்கிறோம். சட்டங்களை இருக்குங்கள். தவறுவோர்க்கு தண்டனைகளைக் கடுமையாக்குங்கள். மூச்சுத்திணறும் எங்களை காப்பாற்றுங்கள். தனி மனித சுகாதாரத்தைக்கூட பேண முடியாத அந்த ஜனநாயகம் நமக்குத் தேவைதானா? முடிவெடுங்கள் மக்களே! நம் சந்ததி வாழ முடிவெடுங்கள்.

மாற்றம் நம் மனதில் தோன்ற வேண்டும்... அரசாங்கத்திடம் அல்ல!

- டிம்பிள்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024