Wednesday, May 27, 2015

குறள் இனிது: அது இது எது?..by சோம.வீரப்பன்



டிஸ்கவரி சேனலில் ஒரு காட்சி. ஒரு பெரிய மான் கூட்டம். அதை தூரத்திலிருந்து படம் பிடிக்கும் கேமிரா, பின்னர் ஒரு பாறையின் மேல் இரு கால்களை ஊன்றி அந்த மான்களைக் கவனமாகப் பார்க்கும் ஒரு சிறுத்தையைக் காண்பிக்கிறது. மெதுவாகக் கீழிறங்கும் சிறுத்தை, மான் கூட்டத்தை நோக்கி மிக வேகமாகப் பாய்கிறது.

சுமார் 30 மான்கள் அங்குமிங்குமாக பயத்தில் ஓடுகின்றன. ஆனால் சிறுத்தையோ அதில் ஒன்றை மட்டும் குறிவைத்து அதன் பின்னால் விடாமல் துரத்தி ஓடி, கவ்விப் பிடித்து விடுகிறது. அடுத்த காட்சியைப் பார்க்கும் மனநிலை இல்லாததால் டிவியை அணைத்து விடுவோம்.



ஆனால் இந்நிகழ்ச்சி கற்பிக்கும் ஒரு நல்ல பாடம் நம் மனதில் தொடர்ந்து நிழலாடும். அச்சிறுத்தை மான் கூட்டத்தைப் பார்க்கும் பொழுதே எந்த ஒரு மானைப் பிடிப்பது என்று முடிவு செய்து, அந்த ஒரு குறிப்பிட்ட மானை மட்டும்தான் பின் தொடர்ந்தது.

அவ்வேட்டையின் சில தருணங்களில் வேறு சில மான்கள் சிறுத்தையின் அருகில் வந்துவிட்டாலும் அது தன் கவனத்தைத் திசை திருப்பவில்லை. சிறுத்தையின் வெற்றிக்குக் காரணம் அதன் கவனம் மாறாமல் ஒரே குறியாக இருந்ததுதானே. வெவ்வேறு மான்களைத் துரத்தியிருந்தால் பல திசைகளில் ஓடி இரை சிக்காதிருந்திருக்கும்.

ஒரு செயலைச் செய்யுமுன் அது குறித்த தெளிவான சிந்தனை அவசியமாயிற்றே. எதைச் செய்கிறோம் என்பதில் சலனமோ ஏன் செய்கிறோம் என்பதில் சஞ்சலமோ இருப்பது எந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்பதே தெரியாமல் ரயில் வண்டி ஏறுவதற்கு ஒப்பானதாயிற்றே? முடிவு பெறாத செயல்களைச் செய்பவர்கள் ஏளனமாகப் பேசப்படுவர்; அந்த அவப்பெயருக்கு அஞ்சுபவர்கள் தெளிவு இல்லாத செயலைத் தொடங்கவே மாட்டார்கள் என்கிறது குறள்.

ஒரு செயலை மேற்கொள்ளும் முன் நம்பிக்கைக்குரிய வல்லுநர்களுடன் அதை எப்படிச் செய்தால் சாத்தியமாகும், எப்பொழுது எவ்வாறு செய்ய முடியும் என்று ஆராய வேண்டும். அச்செயல் குறித்த குழப்பமில்லாத வரையறை இருந்தால்தானே நன்று. இக்காலத்தில் நிறுவனங்களின் Vision Statement & Mission Statement சொல்வது இவைகளைத் தானே?

நன்றாகக் கட்டப்பட்டிருக்கும் எந்த ஒரு வீடும் தெளிவான திட்டத்துடனும் வரைபடத்துடனுமே தொடங்கப்பட்டிருக்கும் என்பார் நெப்போலியன் ஹில். அலுவலகங்களிலும், வணிகத்திலும் அப்படித்தான். எடுத்த செயல் வெற்றிபெறத் தெளிவான குறிக் கோளும் அதைச் சென்றடைவதற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியும் வேண்டும். Management by Objectives இதற்குப் பெரிதும் உதவும்.

குறிக்கோள்களை எண்களாகச் சொல்வதுதான் பலன்தரும். புரிந்து கொள்வதும் எளிது. “விற்பனையைக் கூட்டுவோம், இயன்றவரை கூட்டுவோம், அதிகமாகக் கூட்டுவோம்” என்றால் என்ன புரியும்? “வரும் நிதியாண்டில் சென்ற ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்து ரூ.122 கோடியை எட்டுவோம்” என்றால் குழப்பமிருக்காதே. வெறும் எண்கள் போதாது. எந்தத் தேதியில் செய்ய வேண்டும் என்று சொல்வது முக்கியம். வள்ளுவரின் தெள்ளத் தெளிவான குறள் இதோ

தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024