Sunday, May 24, 2015

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தகவல்


சென்னை,

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சி.பி.எஸ்.இ, பாடத்திட்டத்தின் சென்னை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொறியியல், மருத்துவம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வருகிற 29–ந் தேதி கடைசி நாள். இதேபோல் மருத்துவ படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவும் 29–ந் தேதிதான் கடைசி நாள் ஆகும்.

மாநில கல்வி வாரிய முறையில் பயின்று பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து அதற்குரிய மையங்களில் வழங்கி வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்

ஆனால் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 12–ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப இன்னும் சில நாட்களே இருப்பதால், சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்து இருக்கும் மாணவர்களால் விண்ணப்பங்களை வாங்கி முழுமையாக பூர்த்தி செய்யமுடியாத நிலை இருந்து வருகிறது.

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 29–ந் தேதி கடைசி நாள் என்பதால், அதற்கு முன் விண்ணப்பிக்க வசதியாக சி.பி.எஸ்.இ, நிர்வாகம் 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்து இருப்பதாக மாணவ, மாணவிகள் கூறினார்கள்.

இது குறித்து சி.பி.எஸ்.இ, பாட திட்டத்தின் சென்னை மண்டல அதிகாரிகள் கூறியதாவது:–

நாளை வெளியாகும்?

2014–2015–ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25–ந் தேதி (நாளை) டெல்லியில் இருந்து சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலதாமதம் இன்றி சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு காலஅவகாசம் இருப்பதால் மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். மாணவ, மாணவிகள் ஏற்கனவே மருத்துவம், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை வாங்கிவிட்டனர். தேர்வு முடிவுகள் வெளியான உடன் அதில் உள்ள மதிப்பெண்களை விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து அதற்கான மையங்களில் வழங்குவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தரவரிசை பட்டியல்

அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும் போது, “சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி போதிய காலஅவகாசத்திற்கு பிறகுதான் பொறியியல் படிப்புக்கான தரப்பட்டியல் வெளியிடப்படும். எனவே சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’’ என்றனர்.

இதேபோல் மருத்துவ கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க வருகிற 28–ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் 29–ந் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதில் மாநில கல்வி வாரியம் முறையில் பயின்ற மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்றோ, சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றோ கூற முடியாது என்றும், தகுதி உள்ள மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024