Wednesday, May 27, 2015

வெற்றி முழக்கமா? வெற்று முழக்கமா?

பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்ற மே மாதத்தின் சில நாள்கள், தமிழகம் தழுவிய அளவில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான வெற்றி முழக்கங்களால் களைகட்டி விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிற மாணவ, மாணவிகள் நம் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்தான். 

ஆனால், இந்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே பள்ளிக் கூடத்தின் பக்கம் போகவே முடியாமல்போன, தப்பித்தவறிப் போனாலும் தங்களது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்குச் சென்று சீர்குலைந்து போய்விடுகிற, நமது நாட்டின் கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பற்றிய எத்தகையக் குரல்களும் நம்மிடமிருந்து பெரிதாக எழுவதில்லை, எழுந்தாலும் எடுபடுவதில்லை.

அனைத்து வகையான ஊடகங்களிலும், அவற்றில் முன்வைக்கப்படுகிற விளம்பரங்களிலும், பள்ளிக் கல்வி நிறுவனங்களின் சுவரொட்டிகளிலும், ஆங்காங்கே லட்சக்கணக்கில் வாரியிறைக்கப்படுகின்ற துண்டறிக்கைகளிலும், பெருமிதங்கள் நிறைந்த நேர்காணல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்ற மதிப்பெண் முழக்கங்களை அறிய நேரும்போது, இந்த நாட்டில் எல்லாப் பிள்ளைகளும் படித்துக் கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம் மின்னுகிறது.

நியாயமாகப் பார்க்கப் போனால் இந்த நாட்டில் படிக்கப் போகாத, பள்ளிப் படிப்பைக்கூடப் பாதியிலேயே கைவிட்டுவிட்ட, பல லட்சக்கணக்கான பிள்ளைகளைப் பற்றிய வேதனை முழக்கங்கள்தான் அதிக அளவில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இங்கே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. 

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றாலும் இந்த உலகத்தையே அழிப்போம் என்று முழங்கிய பாரதியின் அறச்சீற்றம் தனியொரு குழந்தைக்குக் கிடைக்கப் பெறாத கல்விக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். எந்தவொரு துறையிலும் வெற்றிகளை நோக்கிய நமது இந்திய மக்களின் ஓட்டப் பந்தயத்தில் தோற்கடிக்கப்பட்டு துவண்டுபோய்க் கிடப்பவர்களைக் குறித்துச் சிந்திக்க யாருக்கும் நேரமில்லை; அதற்கு விருப்பமும் இல்லை.
சகல துறைகளிலும் தோற்றுப் போனவர்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கே வெற்றிகள் எனப்படுவதெல்லாம் வெற்றிகள்தானா என்றால் அப்படியும் இல்லை.
கல்வி, பொருளாதாரம், வேளாண்மை, விளையாட்டு, அரசியல், சினிமா என்று நமது பல்வேறு துறைகளின் வளர்ச்சிகளும், வெற்றிகளும் இன்றைக்குக் கொடும் சாபங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. கல்வியில் நாம் பெற்றிருக்கும் வெற்றி தாய்மொழிவழிக் கல்விக்கு மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
வேளாண்மையில் பெற்ற வெற்றி மண்ணை மரணிக்கச் செய்துவிட்டன. பொருளாதாரத்தில் பெற்ற வெற்றி கணிசமான அளவில் பசிப் பிரிவினரை உருவாக்கி ஒதுக்கி வைத்திருக்கிறது.

விளையாட்டில் பெற்ற வெற்றி மிகக் கேவலமான சூதாட்டங்களுக்கும், சில சுயநலக் கிருமிகளின் சூறையாடல்களுக்கும் வழிவகுத்திருக்கின்றன. அரசியலில் பெற்ற வெற்றி மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்குரியதாக்கி இருக்கிறது. திரைப்படத் துறையில் பெற்ற வெற்றி மிகவும் இழிவான கலாசாரச் சீர்கேடுகளுக்கு வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது.
விடுதலைக்குப் பிறகான நமது ஜனநாயகத்தில் மிகப் பெரும்பான்மை மக்கள் தாங்கள் பெறவேண்டிய வாழ்வியல் வெற்றிகளை இன்றுவரை பெறவில்லை. இங்கே எந்த வெற்றியும் மக்களுக்கானதல்ல. மக்களை முன்நிறுத்திக் கொண்டிருக்கும் வலிமையான ஒரு சில வணிகர்களுக்கானது.
ஆண்டுதோறும் மே மாதத்தில் போடப்படுகிற பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தொடர்பான கூச்சல்களும் மேற்படி வணிக வெற்றி வகையைச் சேர்ந்தவைதான்.

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு வளமான வணிக வெற்றியைத் தேடித் தருகிறார்கள். ஆனால், அவர்கள் பின்னாளில் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப வாழ்வில் வெற்றியடைய இருக்கிறார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
வணிகத்தில் இரண்டு வகை உண்டு. தானே நேரடியாகச் செய்யும் வணிகம். தன்னைச் சார்ந்தவர்களை முன்வைத்துச் செய்யும் வணிகம். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தது இன்றைய பள்ளி கல்வி வணிகம்.
ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறுகிற பல லட்சக்கணக்கான மாணவர்களும், அவர்களில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் என்று முன்னிறுத்தப்படுகின்ற மாணவர்களும் ஆங்கிலவழிக் கல்வி வணிகத்துக்கான ஊதுகுழல்களாகவும், அவர்களது தாய்மொழியான தமிழ், கல்விக்கு உகந்தமொழி அல்ல என்பதை நிறுவுவதற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறார்கள். 

மதிப்பெண் கூச்சல்கள் மிகுந்து ஆங்கிலவழிக் கல்வி என்பது வணிகமயமாகிப்போன இன்றையக் காலக்கட்டத்தில் சில கேள்விகளை எழுப்பியாக வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
ஆங்கிலவழிக் கல்வி வணிக முறை தலைதூக்கி, மதிப்பெண் கூச்சல்கள் பேரோசையாக ஒலிக்கத் தொடங்கியுள்ள கடந்த முப்பது ஆண்டுகளில், அதிக மதிப்பெண் பெற்றவர்களாக முன்னிறுத்தி விளம்பரப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்றைய வாழ்க்கையில் எந்தெந்த இடங்களில் இருந்து என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அவர்களைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் எந்த வகையிலும் வெற்றியடைய முடியவில்லை என்று நிறுவ முடியுமா? மாணவர்களுக்கிடையிலேயும், கல்வி நிறுவனங்களுக்கிடையிலேயும் நடத்தப்படுகிற ஒரு போட்டியைக் கல்வி முறை என்று சொல்ல முடியுமா?
அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கணிசமான ஊதியத்தில் நல்ல வேலைகளைச் செய்கிறார்கள் எனில், அவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் அவர்களைக் காட்டிலும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களா?

தங்களது பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் தொடர்புடைய பள்ளிகள் எவ்வகையிலேனும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனவா?
கல்வி என்பது அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குக் கைதட்டி, அவர்களுக்கு இனிப்பு ஊட்டுவதா? அல்லது கற்க முடியாமல் இருப்பவர்களைக் கைதூக்கி விடுவதா?
இன்றைய மனப்பாடக் கல்வி முறையில், அதுவும் வேறு ஒரு மொழியிலான கல்வி முறையில் தேர்வுக் காலங்களிலும், தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளிலும் மாணவர்களுக்கு ஏற்படுகிற உளவியல் அழுத்தங்களுக்கும், தாழ்வு மனப்பான்மை உணர்வுகளுக்கும், மாணவர்களின் தற்கொலைகளுக்கும், அவர்கள் சந்திக்க நேரும் ஒப்பீட்டு அவமானங்களுக்கும் யார் பொறுப்பேற்றுக் கொள்வது?

அறிவியல், உளவியல், சமூகவியல், மொழியியல் பூர்வமான கல்வி முறையாக இருக்கக் கூடிய தாய்மொழிவழிக் கல்வி முறையை அறவே ஒழித்துக் கட்டவும், மேற்கூறிய அனைத்துக்கும் புறம்பான ஆங்கிலவழிக் கல்வி முறையை நியாயப்படுத்தவும்தான் மதிப்பெண் கூச்சல்கள் போடப்படுகின்றனவா?
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் அடுத்து மருத்துவம் படிக்கவும், மிஞ்சிப் போனால் ஆட்சி நிர்வாகவியல் படிக்கவும் மட்டுமே ஆசைப்படுகிறார்களே, அது ஏன்?
இவ்விரண்டு வகைப் பணிகளுக்கு மட்டும்தான் நமது சமூகத்தில் பற்றாக்குறை நிலவுகிறதா?

வேளாண்மை, இசை, ஓவியம், சிற்பம், பொதுச்சேவைகள், இலக்கியம், சொற்பொழிவு, விளையாட்டு, சுயதொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பழ உற்பத்தி, பால் உற்பத்தி, பசுமாடு வளர்ப்பு, நீர் நிர்வாகவியல் போன்றெல்லாம் நீளுகின்ற வாழ்வாதாரக் கல்விக் கூறுகள் யாவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கற்கக்கூடாத கல்வி வகையினங்களா?
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெறுகின்றனர். ஆனாலும், இவர்களில் எத்தனை பேர் இந்திய அளவிலான எய்ம்ஸ், ஐ.ஐ.டி. போன்ற அதி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற முடிகிறது?
அப்படியெனில், இந்த மதிப்பெண் வெற்றி முழக்கமெல்லாம் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும்தானா?

உயர்கல்வி பெறும் பொருட்டுத் தமிழ்நாட்டை விட்டுத் தாண்ட முடியாத ஆங்கிலவழிக் கல்வி எதற்காக?

தனித்தனித் திறமைகளைக் கொண்ட மாணவர்கள், அவரவர் தனித் திறமைகளுக்கேற்ப உருவாக்கப்பட வேண்டியவர்களா? அல்லது சுய சிந்தனையற்று அச்சிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுகிற இயந்திரங்களாக மாற்றப்பட வேண்டியவர்களா?
கோடிக்கணக்கான இளைய சமுதாயத் தமிழ் மரபுவழிப் பிள்ளைகளை அவர்களது தாய்மொழியில் இருந்து துண்டித்து, அவர்களைத் தாய்மொழி மறந்தவர்களாக மாற்றியதைத் தவிர, இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

இன்னமும் இவை போன்ற வினாக்கள் விடை சொல்வாரின்றி நீள்கின்றன... நீண்டு கொண்டேயிருக்கின்றன. மனப்பாட மதிப்பெண் முறையும், அதைக் கூவிக் கூவிக் கொண்டாடும் போக்கும் தமிழ்ச் சமூகத்தை மாபெரும் பள்ளத்தாக்கில் வீழ்த்திக் கொண்டிருப்பதை அரசும், அடிப்படைகளற்ற ஆங்கில மோகம் கொண்ட மக்களும் இன்னும் முறையாக உணரவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது மாநிலமெங்கும் ஒரு பரபரப்பும், பதற்றமும் நிலவுகின்றன. தான் தேர்ச்சி பெறாமல் போய் விடுவோமோ என்று அஞ்சிய ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதும், தேர்வு முடிவில் அவர் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த கொடுமையும்கூட அண்மையில் அரங்கேறியிருக்கிறது.
உண்மையான, முறையான தமிழ்வழிக் கல்வி, மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் கல்வி, முழுமையான அரசுப் பள்ளிக் கல்வி, முறையான சமச்சீர் கல்வி, அனைத்துப் பொருளாதாரத் தரப்பினருக்குமான அருகமைக் கல்வி, சுகமான கல்வி, சுமையற்ற கல்வி, கட்டணமில்லாத கல்வி, மாணவர்களுக்கு உளைச்சல் தராத கல்வி, துறைசார்ந்த பணிகளுக்கு உத்தரவாதம் தரும் கல்வி, மாணவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும் கல்வி, மாணவர்களின் பெற்றோரை வதைக்காத கல்வி, தனிப்பயிற்சிக்கு என்று பணத்தை தண்டம் கட்ட வைக்காத கல்வி, விளையாட்டுகளோடும், கலை, இலக்கியங்களோடும் இரண்டறக் கலந்த கல்வி, சூழலியல் கல்வி, வாழ்வியல் கல்வி, அறநெறிகளைப் புகட்டி மாணவர்களை அறவுணர்வு மிக்கவர்களாக உருவாக்கும் கல்வி ஆகியவையே இன்றைய தேவை.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
கோடிக்கணக்கான இளைய சமுதாயத் தமிழ்
மரபுவழிப் பிள்ளைகளை அவர்களது தாய்மொழியில் இருந்து துண்டித்து, அவர்களைத் தாய்மொழி
மறந்தவர்களாக மாற்றியதைத் தவிர,
இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...