Wednesday, May 27, 2015

நம்ப முடிகிறதா?- பிரம்மாண்ட நட்சத்திரம்



மே மாதம் வந்தாலே வெயிலைக் கரித்துக்கொட்டுகிறோம். வெயில் தாங்க முடியவில்லை, வியர்த்துக்கொட்டுகிறது என்று புலம்புகிறோம். ஆனால், சூரியன் இல்லாமல் உலகில் எந்தக் காரியமும் நடக்காது. சூரியன் பற்றி கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா?

பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம். என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான். மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது.

சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதேபோல எரிந்துகொண்டிருக்கும்.

சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன. சூரியனில் இருந்து தான் பூமி அனைத்துசக்திகளையும் பெறுகிறது.

பூமியில் இருந்து ஒரு சாதாரண விமானத்தில், அதன் வழக்கமான வேகத்தில் சென்றால் (மணிக்கு 645 கி.மீ. வேகம்) சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருவது சூரியக் கிரகணம். ஒரு முழு சூரிய கிரகணம் ஏழரை நிமிடங்களுக்கு நீடிக்கும்.

சூரியனின் சில பகுதிகள் கறுப்பாகத் தோற்றமளிக்கும். அவை சூரியப் புள்ளிகள். அப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் அப்படி இருக்கிறது.

சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக நாசாவின் ‘ஸ்கைலாப்’ என்ற முதல் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் 1974 பிப்ரவரியில் சென்றது.

பூமி முட்டை வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், இரண் டுக்கும் இடையிலான தொலைவு 14.7 கோடி கி.மீ. முதல் 15.2 கோடி கி.மீ. என மாறிமாறி இருக்கும்.

பூமியைப் போல 28 மடங்கு அதிகமான புவியீர்ப்பு விசையைக் கொண்டது சூரியன். அதன் காரணமாகத்தான் ஹைட்ரஜன் பிணைவின்போது அது வெடிக்காமல் இருக்கிறது. இல்லையென்றால், ஒட்டுமொத்த சூரியக் குடும்பமே வெடித்துச் சிதறிவிடும்.

வரலாற்றில் இதுவரை மனிதன் பயன்படுத்தியுள்ள மொத்த எரிசக்தியின் அளவு, சூரியன் வெறும் 30 நாள் பயன்படுத்திய அளவுதான்.

பெருவெடிப்பின் ஒரு கட்டத்தில் சுழலும் பெரும் வாயு மேகம் மூலம் சூரியனும், அதன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றக் கோள்கள், நிலவுகள், நூற்றுக்கணக்கான சிறுகோள்கள், எரிநட்சத்திரங்கள், விண்கற்கள் உருவாகின. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெரும் வாயு மேகத்தில் 99.8 சதவீதத்தைச் சூரியன் மட்டுமே உருவாக எடுத்துக்கொண்டது. எஞ்சிய 0.2 சதவீதத்தில்தான் மற்ற அனைத்தும் உருவாகியிருக்கின்றன.

பண்டைய நாகரிகங்களில் பலவும் சூரியனை மையமாகக் கொண்டு இயங்கின. எகிப்தியர்கள் ரா என்றும், மெக்சிகோவின் அஸ்டெக் நாகரிகத்தினர் டோனாடியு என்றும், கிரேக்கர்கள் ஹீலியோஸ் என்றும், இன்கா நாகரிகத்தினர் இன்ட்டி என்றும் சூரியனை அழைத்தனர். ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற வட்டமாக அமைக்கப்பட்ட கற்கள், சூரியனை வழிபடும் வகையில் அமைக்கப்பட்டவையே.

இயற்கையில் உள்ள கச்சிதமான வட்ட வடிவத்துக்குச் சிறந்த உதாரணம் சூரியன். சூரியன் தன் அச்சில் 25.38 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது.

பூமியைவிட, சூரியன் 10 லட்சம் மடங்கு பெரியது. பூமியைப் போல 110 மடங்கு அதிக விட்டத்தைக் கொண்டிருக்கிறது சூரியன்.

சூரியனின் மேற்புற சராசரி வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட். சூரியனின் மையப் பகுதி மிக மிக வெப்பமானது. அதன் வெப்பநிலை 27 லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட்.

சூரியனை பூமி சுற்றி வருவதாக 16-ம் நூற்றாண்டில் நிகோலஸ் கோபர்நிகஸ் கூறினார். புவியீர்ப்பு விசைக் கொள்கையையும், அதன் காரணமாகச் சூரியனை மற்றக் கோள்கள் சுற்றி வருவதையும் ஐசக் நியூட்டன் நிரூபித்த பிறகே சூரியக் குடும்பம் என்ற கருதுகோள் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிரேக்க சூரிய கடவுள் முழு சூரிய கிரகணம் சூரிய தீக்கொளுந்து

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...