Saturday, May 30, 2015

வாழ்வு இனிது: அழைத்தால் வரும் வாகனங்கள்

காலையிலும் மாலையிலும் பேருந்துகளும் புறநகர் ரயில்களும் பிதுங்கி வழியும் கூட்டத்துடன் செல்வது சென்னை போன்ற பெரு நகரில் அன்றாடக் காட்சி. விடுமுறை நாட்களிலோ கேட்க வேண்டாம். எங்கெங்கும் கூட்டம்தான். ஆனால் எல்லோரும் ஏதோ தேவையின் பொருட்டு வெளியே செல்கிறார்கள், திரும்புகிறார்கள்.

இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்து ரயில் போன்றவற்றைத் தவிர ஆட்டோ, வாடகை கார் போன்ற போக்குவரத்து வசதிகளும் இருந்துவருகிறது. ஆனாலும் இதைவிட வசதியான, நியாயமான கட்டணம் வசூலிக்கும் வாகனத்தின் தேவை இருந்துகொண்டிருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது கால் டாக்ஸி. சொந்த கார் இல்லாதவர்கள் ஓரளவு நியாயமான கட்டணத்தில் சொகுசாக காரில் பயணம் செய்ய உதவுபவை கால் டாக்ஸிகள் எனலாம்.

சென்னையைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தனது சேவையைத் தொடங்கிவிட்டது. ஒரு தொலைபேசி இருந்தால் போதும், எங்கே போக வேண்டும், எத்தனை பேர் போக வேண்டும், எப்போது போக வேண்டும் போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டால் அதற்குத் தகுந்தாற்போன்ற வாகனம் சொன்ன நேரத்தில் உங்கள் வீட்டின் முன்னே வந்து நிற்கும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி எனத் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இந்த கால் டாக்ஸிகள் பயணிகளது தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இதே போல் என்.டி.எல். டாக்ஸி நிறுவனமும் தமிழகத்தின் பல நகரங்களில் சேவையைத் தந்துவருகிறது.

மும்பையை மையமாகக் கொண்ட ஓலா கால் டாக்ஸி நிறுவனம் 2011-ல் தனது சேவையைத் தொடங்கியது. இந்தியாவில் சுமார் 19 நகரங்களில் இயங்கிவரும் இந்நிறுவனத்திடம் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன என்கிறது புள்ளிவிவரம்.

அமெரிக்க நிறுவனமான ஊபர் இந்தியாவில் தனது சேவையை 2013-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இந்த நிறுவனத்துக்கென ஒரு வாகனம் கூட இல்லை. கார்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வேலையை மட்டுமே பார்த்துவருகிறது ஊபர். இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன் ஆப்பை அறிமுகப்படுத்தியது. அதன் மூலமே தேவையான காரை புக் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியது.

ஊபரில் கார் புக் செய்தால் காரின் வகை, காரின் எண், டிரைவரின் பெயர், மொபைல் எண் ஆகியவை உடனே வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டுவிடும். இப்போது கிட்டத்தட்ட பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல் ஆப்பை உருவாக்கிவிட்டன. ஓலாவின் புக்கிங்கில் 70 சதவீதம் மொபைல் ஆப் வழியாகவே வருவதாகத் தெரிகிறது.

ஊபர் கால் டாக்ஸியைப் பொறுத்தவரை பணத்தை பே டிஎம் மூலமாகவே செலுத்த இயலும். எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கான கட்டணத்தை அறிந்துகொண்டு அதைச் செலுத்திய பின்னர் தான் வாகனத்தை புக் செய்யவே முடியும். ஊபர் நிறுவனம் கால் டாக்ஸிக்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் வசூலித்து வந்தது. ஆனால் இது ரிசர்வ் பேங்க் இந்தியாவில் விதிமுறைகளுக்கு மாறானது எனும் புகார் வந்ததை அடுத்து தற்போது பே டிஎம் வழியே பணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. ஓலாவிலும் வாலெட் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

பெருகிவரும் போட்டிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது உத்திகளைக் கையாளத் தொடங்கின. கட்டணங்களில் சிறிய அளவு வேறுபாடு அறிமுகமானது. ஒரு கால் டாக்ஸி கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் வசூலித்தால் மற்றொன்று கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் வசூலிக்கத் தொடங்கியது. தங்களது நிறுவனத்துக்குப் புதிய வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தினால் அவரும் புதிதாக அறிமுகமான வாடிக்கையாளருக்கும் இலவச சவாரி போன்ற சலுகையை ஊபர் கைக்கொள்கிறது. இதே போன்ற சலுகையை, ஓலாவும் என்.டி.எல் கால் டாக்ஸியும் அறிமுகப்படுத்தியுள்ளன.

இப்படிப் பல நிறுவனங்கள் பாதுகாப்பான சவாரி, நியாயமான கட்டணம் உள்ளிட்ட பல வசதிகளைத் தந்தபோதும் ஞாயிற்றுக்கிழமைகளிலோ, விடுமுறை நாள்களிலோ கால் டாக்ஸிகள் கிடைப்பது கடினம். ஊபரில் இத்தகைய தருணங்களில் கார் கிடைக்கிறது, ஆனால் அதற்கான கட்டணம் வழக்கமான நேரத்தைவிட மிக அதிகமாக உள்ளது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

கார் என்பது சொகுசு, ஆடம்பரம் என்ற கருத்துகளை கால் டாக்ஸிகள் காற்றில் பரத்திவிட்டன. அவை அநேகருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியதிருக்கிறது. நமக்கான தேவையைப் பொறுத்து எந்த கால் டாக்ஸியை வேண்டுமானாலும் புக் செய்துகொள்ள முடிகிறது. என்பது நிச்சயமாக வசதிதானே?

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...