Monday, May 25, 2015

தற்கொலை செய்வதற்கு முன்பு தன் உடலை தகனம் செய்ய போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வைத்து சென்ற பெண் டாக்டர் கொடுமை செய்த கணவனுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு


சென்னை,

தன் உடலை அடக்கம் செய்ய போலீசாருக்கு கோரிக்கை வைத்ததுடன் செலவுக்கு ரூ.10 ஆயிரத்தை கைப் பையில் வைத்து விட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு ஜாமீன் வழங்க செசன்சு கோர்ட்டு மறுத்து விட்டது.

பெண் டாக்டர்

தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர் அகிலாண்டேஸ்வரி (வயது 32). இவர், எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த 8–ந்தேதி தன் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு போலீசாருக்கு ஒரு உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:–

என் சாவுக்கு நான் பொறுப்பு அல்ல. என் கணவரும், அவரது பெற்றோரும் செய்த கொடுமையால், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னால் முடிந்த அளவுக்கு பொறுமையாக வாழ்ந்து விட்டேன்.

விரும்பவில்லை

ஆனால், என் கணவர் மற்றும் அவரது பெற்றோர், அவர்களது குடும்பத்துக்கு நான் தகுதியானவள் கிடையாது என்று அவதூறாக பேசினர். நான் அவர்களுக்கு பணம் தர மாட்டேன் என்பதால், என்னை சாகச் சொல்லி கொடுமை செய்தனர். நான் செத்து விட்டால், தாங்கள் சந்தோஷமாக இருப்போம் என்றும் அவர்கள் கூறினர். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்.

எனக்கு 3 வயதில் மகள் உள்ளார். தயவு செய்து அவளை என் கணவரிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ ஒப்படைத்து விடாதீர்கள். அவர்கள் என் மகளையும் கொன்று விடுவார்கள். என் மகளை என் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

என் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர், நீங்களே (போலீசாரே) எரித்து விடுங்கள். தயவு செய்து என் உடலை கணவரிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ அல்லது என் பெற்றோரிடமோ ஒப்படைத்து விடாதீர்கள். என் பெற்றோருக்கு மேலும் மேலும் சிரமத்தை கொடுக்க நான் விரும்பவில்லை.

மரண வாக்குமூலம்

நான் ஒரு அனாதை. என் கைப் பையில் ரூ.10 ஆயிரம் வைத்துள்ளேன். என் உடலை எரித்து அடக்கம்செய்வதற்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த கடிதத்தை என் மரண வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளுங்கள். என் சாவிற்கு என் கணவர் மற்றும் அவரது பெற்றோர்தான் காரணம்.

இவ்வாறு அதில் எழுதியிருந்தார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு டாக்டர் அகிலாண்டேஸ்வரி, தஞ்சாவூரில் உள்ள தன் தாயார் இந்திராணியிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன்பின்னர் தன் செல்போனை அனைத்து வைத்து விட்டார். இதனால் சந்தேகம் கொண்ட இந்திராணி, தன் மகள் தங்கியிருக்கும் விடுதியில் உரிமையாளருக்கு போன் செய்து விவரம் கூறியுள்ளார். உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி தங்கியிருந்த அறைக்கு செல்வதற்கு முன்பு, அவர் தன்னுடைய துப்பட்டாவை மின்விசிறியில் மாட்டி தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

மனவேதனை

இந்த சம்பவம் குறித்து விடுதி உரிமையாளர் எஸ்.தனலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அசோக்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அகிலாண்டேஸ்வரியின் கணவர் டாக்டர் ரத்தினகுமார், அவரது பெற்றோர் மகாராஜன், பூங்கோதை ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்யும் ரத்தினகுமாருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது, 50 சவரன் தங்க நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார் வாங்குவதற்கு பணம் ஆகியவைகளை அகிலாண்டேஸ்வரியின் தந்தை கல்யாணசுந்தரம் கொடுத்துள்ளார். ஆனால் அது காணாது மேலும் வரதட்சணை வேண்டும் என்று கொடுமை செய்ததால், மனவேதனையில் அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ஜாமீன் மறுப்பு

மேலும், அகிலாண்டேஸ்வரியின் தந்தை, தன் மகள் ஒரு வாரம் கூட சந்தோஷமாக கணவனுடன் வாழவில்லை. இந்த கொடுமை தாங்க முடியாததால், அவர் மேல் படிப்புக்காக சென்னை வந்தார் என்று போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். பின்னர், அகிலாண்டேஸ்வரியின் உடலை அவரது தந்தையிடம் போலீசார் ஒப்படைத்து விட்டனர்.

இந்த வழக்கில் டாக்டர் ரத்தினகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரது பெற்றோரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரத்தினகுமார், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.கயல்விழி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர அரசு வக்கீல், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...