Thursday, May 28, 2015

இதற்குத்தான் சி.பி.ஐ. கேட்கிறார்கள்

காவல்துறையில் பல பிரிவுகள் இருக்கின்றன. முக்கியமான கொலையோ, திருட்டோ நடந்தால், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக, இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி. அதாவது, குற்றப்பிரிவு ரகசிய போலீஸ் விசாரணைக்கு அனுப்புகிறோம் என்று அரசு சொல்வது வழக்கம். ஆனாலும், சில வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுக்கிறது. சி.பி.ஐ. அதாவது, மத்திய புலனாய்வு பிரிவு என்பது மத்திய அரசாங்க உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். இவ்வளவுக்கும் இருஅமைப்புகளுமே முசோரியில் உள்ள ஒரே அகாடமியில் பயிற்சிபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் இயங்குகிறது. மாநில காவல்துறையில் பணியாற்றிய போலீசார், இன்ஸ்பெக்டர்கள் போன்றவர்கள்தான் அயல் பணியாக சி.பி.ஐ.க்கு பணியாற்ற செல்கிறார்கள். அப்படியிருக்க மாநில போலீசார் மீது நம்பிக்கை வைக்காமல், சி.பி.ஐ. விசாரணை கோருவது தார்மீக அடிப்படையில் நல்லதல்ல என்று கருத்து நிலவுகிறது.

ஆனாலும், சி.பி.ஐ. விசாரணை கேட்பது சரியான முடிவுதான் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் துடிப்பான இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்து, மக்களிடம் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தவர் டி.கே.ரவி. மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்த ரவி, 2009–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, முதலில் குல்பர்காவில் உதவி ஆணையராகவும், பின்பு கோலார் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பணியாற்றினார். மக்கள் சேவையிலேயே தன் முழுநேரத்தையும் செலவிட்ட ரவி, கோலாரில் பணியாற்றியபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், மணல் கொள்ளைக்காரர்கள் அவர்கள் அரசியலில், சமுதாயத்தில் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்றாலும், இவரது அதிரடி நடவடிக்கைக்கு முன்பு நிற்கமுடியவில்லை. அதேநேரத்தில், ஏழை–எளிய பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக எந்த நேரத்திலும் அவரை அணுக முடிந்தது, குறைகளும் நிவிர்த்தியானது. இதனால் அவரை உடனடியாக அந்த பதவியில் இருந்து வணிகத்துறைக்கு மாற்றிய நேரத்தில், கோலார் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். வணிக வரித்துறையிலும் மிகுந்த செல்வாக்குள்ள நிறுவனங்களில் சோதனைகளை நடத்தி, வரி ஏய்ப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இப்படி ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளை சம்பாதித்து, அவர்களின் நிர்ப்பந்தங்களையும் சமாளிக்கமுடியாத ரவி, ஒருநாள் தூக்கில் தொங்கினார். அவரது பிரேத பரிசோதனை முடியாத நேரத்திலேயே, தற்கொலை என்று அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, அதற்கு மாநில போலீசாரால் புதுப்புது காரணங்களும் கற்பிக்கப்பட்டன. அவருடன் ஐ.ஏ.எஸ். பயிற்சிபெற்று அதே கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு அதேநாளில் 44 முறை செல்போனில் பேசினார், ஒருதலை காதல் என்றெல்லாம் கரடிவிட்டார்கள்.

பொதுமக்கள் இதையெல்லாம் நம்பவில்லை. சி.பி.ஐ. விசாரணை கேட்டார்கள். கடைசியில் சோனியா காந்தியும் வலியுறுத்தியவுடன் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இப்போது சி.பி.ஐ.யின் பூர்வாங்க அறிக்கையில், பெண் அதிகாரியுடன் ரவி 44 முறையெல்லாம் பேசவில்லை, ஒரே ஒரு முறைதான் பேசியிருக்கிறார் என்று ஆதாரத்தோடு கூறி மாநில போலீசாரின் கூற்றை தவிடுபொடியாக்கிவிட்டனர். வீணாக மறைந்த அதிகாரிக்கும் அவப்பெயர், ஒரு பெண்ணுக்கும் தேவையில்லாத அவப்பெயரை சி.பி.ஐ. விசாரணை காப்பாற்றிவிட்டது. சி.பி.ஐ.யின் முழுவிசாரணையில் இன்னும் என்னென்ன வெளிவரப்போகிறதோ?, மாநில போலீசார் இனியாவது அரசியல் அல்லது செல்வாக்குள்ளவர்கள் நிர்ப்பந்தத்தால் உண்மையை விட்டு விலகாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கும் நல்லது. இதற்கு அரசுகளும், அரசியல்வாதிகளும் துணை நின்று சி.பி.ஐ.க்கு இணையாக, மாநில போலீசை செயல்பட உறுதுணையாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment

College of Pharmacy at MMC in Chennai staring at losing approval due to lack of qualified teachers

College of Pharmacy at MMC in Chennai staring at losing approval due to lack of qualified teachers Peethaambaran Kunnathoor, Chennai Thursda...