மும்பை:'கள்ளநோட்டு என அறியாமல் கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது குற்றமல்ல' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மும்பையை சேர்ந்த ஒருவர், வங்கியில் செலுத்திய கரன்சி நோட்டுகள், சிலவற்றில் கள்ள நோட்டுகள் இருந்தன. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.விசாரணை நீதிமன்றம் அவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தன் தீர்ப்பில் கூறியதாவது:கள்ளநோட்டு வைத்திருந்த நபருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சரியல்ல. தன் கையில் இருக்கும் நோட்டுகளில், சில கள்ளநோட்டுகளும் உள்ளன என்பதை அவர் அறியாத நிலையில், அவரை குற்றவாளியாக கருத முடியாது.
வங்கியில் அவர் செலுத்திய நோட்டுகள் கள்ள நோட்டுகள் என, வங்கியில் தெரிவித்த பிறகும் அவர் தப்பி ஓடவில்லை என்பதால், அந்த கள்ளநோட்டை அவர் வேண்டுமென்றே வைத்திருக்கவில்லை என்பது புலனாகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி அனுஜா உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நிலையில், கள்ளநோட்டு என தெரியாமல், பிறர் கொடுக்கும் நோட்டுகளை வைத்திருந்ததால், பலர் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.அத்தகையவர்களுக்கு இந்த தீர்ப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment