சென்னையில் வரும், 30ம் தேதி வரை, 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில், ஆண்டு தோறும் மே மாதம் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். நடப்பு ஆண்டில், நேற்று, 108 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. இந்த வெப்பநிலை, வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. சென்னையில் இதற்கு முன், 2003ல், 113 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. பிற ஆண்டுகளில், 110 டிகிரி வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு, சென்னை, வேலூர் நகரங்களில், வெப்பநிலை, 108 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. வரும் நாட்களில், 110 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கான காரணம் குறித்து, வானிலை ஆய்வு மைய முன்னாள் துணை இயக்குனர் ஜெனரல் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், மே, 15ம் தேதிக்கு மேல் தான், கோடையின் தாக்கம் அதிகரிக்கும். இந்த தாக்கம், கேரளாவில், தென் மேற்கு பருவ மழை துவங்கும் வரை நீடிக்கும். மே மாதம் துவங்கி ஜூலை, 23ம் தேதி வரை பகல் நேர அளவு அதிகமாக இருக்கும். இதனால், வெப்பமும் அதிகமாக இருக்கும். இதுதவிர, நாட்டின் வடமேற்கு திசையில் இருந்து, தமிழகத்தை நோக்கி வீசும் காற்றும், வெப்பத்தை கொண்டு வருகிறது. வடமேற்கு காற்று, ஆந்திரா, ராயலசீமா பகுதியில் இருந்து, சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை நோக்கி வருகிறது. ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில், கடும் வெப்பம் இருப்பதால், அங்கிருந்து வரும் காற்றும், வெப்பத்தை கொண்டு வருகிறது. இதனாலும், சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில், வெப் பம் அதிகமாக இருக்கிறது. சென்னையில், ஈரப்பதத்துடன் கூடிய கடல் காற்று வீசத் துவங்கினால், வெப்பத்தின் தாக்கம் குறையும். கடல் காற்றின் தாக்கம், கரையிலிருந்து, 15 - 20 கி.மீ., தூரத்துக்கு இருக்கும். அதுவரை தான், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். நேற்று பகல், 1:00 மணிக்கு மேல், கடல் காற்று சென்னையில் வீசுவது அதிகரித்து உள்ளது. இதனால், காலையில், 42 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பம், மதியத்துக்கு மேல் குறையத் துவங்கி, 36 டிகிரி செல்சியசை தொட்டது. தென் மேற்கு பருவ மழை கேரளத்தில், வரும், 30ம் தேதி துவங்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது. எனவே, பருவமழை துவங்கும் வரை, சென்னையில் வெப்பம் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment