Saturday, May 30, 2015

சாவித்ரி- 4. பாசமலர்



‘கை வீசம்மா கை வீசு’ என்று பிஞ்சுகளிடம் கொஞ்சத் தொடங்கினால், நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ’பாசமலர்’ பூத்துக் குலுங்கி மணம் வீசும். எத்தனை யுகங்கள் கடந்தாலும் திரை இசைத் தாலாட்டுப் பாடல்களில் ‘மலர்ந்தும் மலராத’ தேன் மழையாகப் பொழியும். ’பாசமலர்’ கண்ணதாசன் சூட்டிய காவியப் பெயர்!

பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.

இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக் கலைஞனாகும் கனவுகள் அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.

சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?

ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.

‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’

உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.

’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய் பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.

சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன். அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,

வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய், தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.

‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.

32 வாரங்களைக் கடந்து ஓடியது பாசமலர். 1961 கோடையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 2015ல் இன்னமும் மங்காமல் சின்னத் திரைகளிலும் வியாபித்து நிற்கிறது. வருடம் தவறாமல் அனைத்து சேனல்களிலும் நூறு தடவைகளாவது சலிக்காமல் வாசம் பரப்புகிறது!
அந்த நாளும் வந்தது...

பாசமலர் கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!

அதனுடைய சோக முடிவு என்னை உலுக்கி விட்டது. அது ரீலீஸ் ஆன போது நான் சென்னையில் இல்லை. காஷ்மீரில் இருந்தேன். தேனிலவு ஷூட்டிங்கிற்காக ஜெமினியுடன் நானும் சென்றேன். மே 11ஆம் தேதியே நாங்கள் போய் விட்டோம். பாசமலர் அபாரமான வெற்றி அடைந்திருப்பதாக எனக்குத் தயாரிப்பாளர் தந்தி கொடுத்திருந்தார்.

மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுவது வாடிக்கை. பாசமலர் அப்படியல்ல. நாள் ஆக ஆக அதற்கு வாசம் அதிகம். உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மனம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை.’- சாவித்ரி.

‘அண்ணனுக்கு ஏற்ற தங்கை. சிவாஜிக்கு ஏற்ற சாவித்ரி.’ ‘’ராதா’ பாகத்தைச் சொந்த பாணியிலேயே முழுக்க முழுக்கக் கையாண்டிருப்பது திருமதி கணேஷிற்கு ஒரு சிறப்பு.

‘உங்கள் காலில் என் அண்ணா விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், உங்கள் காதல் எனக்குத் தேவை இல்லை...’ என்று உதறும் இடத்தில், தியாகத்தின் கம்பீரமும் தோல்வியின் சோகமும் நம் உள்ளத்தை அள்ளுவதில் வியப்பென்ன...!’ என சாவித்ரியின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியது குமுதம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024