Tuesday, May 26, 2015

தந்தையின் ஒப்புதல் இல்லாமல் சிறுமிக்கு கடவுச்சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தையின் ஒப்புதல் இல்லாமல் சிறுமிக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆர்.ஜெயபாதுரி தனது 9 வயது மகள் எம்.விஷ்ணுபிரியா சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்.
தற்போது கணவரிடமிருந்து பிரிந்து மகள் விஷ்ணுப்பிரியாவுடன் வாழ்ந்து வருகிறேன். மேலும், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்துள்ளேன்.

இந்த நிலையில், வரும் மே 31-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறும் கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரையைச் சமர்ப்பிக்க உள்ளேன். அதற்காக, எனது 9 வயது மகள் விஷ்ணுப் பிரியாவையும் அழைத்துச் செல்ல இருப்பதால், சென்னையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தட்கல் முறையில் கடவுச்சீட்டு பெற அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தேன்.
இருப்பினும், கடவுச்சீட்டு பெற கணவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறி மண்டல கடவுச்சீட்டு அதிகாரி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கடவுச்சீட்டு வழங்குவதற்காக விதிமுறைகளின்படி மனுதாரரின் தாய் அல்லது தந்தை ஆகியோரில், ஒருவர் ஏதேனும் காரணங்களால் மற்றொருவரின் ஒப்புதலைப் பெற முடியவில்லையெனில் பெற்றோர்களில் ஒருவரது ஒப்புதலைப் பெற்று பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பித்தால் போதும் என தெரிவித்தார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜெயபாதுரி தனது மகள் சார்பில் தாக்கல் செய்த மனுவை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...