பார்ப்பதற்கு விளையாட்டாகத் தெரியும் ஒரு சில விஷயங்கள் உயிருக்கே உலைவைக்கக் கூடியவையாக மாறும் என்பதற்கு ஓர் உதாரணம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணியின் மகன் வெங்கடேசன், ஒன்பதாம் வகுப்பு மாணவர். சில நாட்களுக்கு முன்னர் அளவுக்கு அதிகமான போதைப்பொருளை உட்கொண்டு, இறந்துபோனார். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்... அந்தப் போதைப் பொருள், மதுவோ, அபினோ, கஞ்சாவோ இல்லை!
''எங்க ஊர்ல இருக்கும் பல பசங்களுக்கு ஒயிட்னர் வாசனை இழுக்கிற பழக்கம் இருக்குது. வெங்கடேசனுக்கும் அந்தப் பழக்கம் இருந்துச்சு. ஒரு கட்டத்துல ஒரு நாள்கூட ஒயிட்னர் இல்லாம இருக்க முடியாதுங்கிற நிலைமை அவனுக்கு உண்டாச்சு. தினம் ஒயிட்னரை வாங்கிக்கிட்டு ஏரிக்கரைப் பக்கமாப் போயி உட்கார்ந்திருவான். அன்னைக்கும் அப்படித்தான் உட்கார்ந்திருந்தான்...'' என்கிறார்கள் அவனுடைய நண்பர்கள். இளம் வயதினரிடையே... குறிப்பாகப் பள்ளிச் சிறுவர்களிடம் இதுபோன்ற போதைப் பழக்கங்கள் தற்போது மிகுதியாகிவரும் நிலையில், இது குறித்து சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவர் எம்.கே.சுதாகரிடம் பேசினோம்.
'பெட்ரோல், ஒயிட்னர், தின்னர், பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் ரப்பர் சொல்யூஷன், நெயில் பாலிஷ், ஃபெவிகால், பெயின்ட், க்ரீஸ்... போன்ற பொருட்களில் பெட்ரோலியத்தை அடிப்படையாகக்கொண்ட 'அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்’ (Aromatic hydrocarbon) என்ற ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனத்தில் உள்ள 'இன்டஸ்ட்ரியல் ஸ்பிரிட்’தான் (ஆல்கஹால்) போதைக்கான மூலப் பொருள். ஆவியாவதற்காக இந்த ரசாயனம் மேற்கண்ட பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இதன் பென்சீன் அளவைப் பொறுத்து போதைக்கான அளவும் மாறும்.
இதைச் சுவாசிக்கும்போது ரசாயனமானது மூக்கில் உள்ள 'அல்பேக்டரி நரம்பு’ (Olfactory nerve) வழியாக நேரடியாக மூளைக்குச் செல்லும். இது மூளையில் உள்ள வாசனைப் (Olfaction) பகுதியைத் தூண்டிவிடுகிறது. இதனால், மனம் ஒருவிதமான கிளர்ச்சிக்கு ஆட்படும். இந்த நிலையில், வேறு எதைப்பற்றியும் உணர முடியாமல் மனமும் உடலும் தன்வசத்தை இழந்துவிடும்.
இதே நிலை தொடரும்போது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, கவனக்குறைவு, நினைவுத் திறன் இழத்தல், பார்வைக் குறைபாடு, மது அருந்தியவரைப் போல் நடையில் தள்ளாட்டம், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நாளாக நாளாக மூளையின் செயல்பாட்டில் வேகம் குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் மூளையே சுருங்கிப்போய் அதன் செயல்பாடுகள் முழுவதுமாக நின்றுவிடும் ஆபத்தும் உண்டு. இந்தப் பொருட்களை சுவாசிக்கும்போது, அவற்றில் உள்ள ரசாயனம் நுரையீரல் உள்ளேயும் செல்லக்கூடும். இதனால் ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற சிக்கல்கள் தோன்றலாம். குறிப்பிட்டக் காலகட்டத்துக்குப் பிறகு நுரையீரல் சுருங்கி, இயக்கமே நின்றுபோகும். மேலும், பிற வாசனைகளைப் பகுத்து அறியும் திறனும் குறைந்துவிடும்'' என்கிறார் சுதாகர்.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும், மன நல மருத்துவருமான ஒய்.அருள்பிரகாஷ், 'இதுபோன்ற பொருட்கள் மூலம் போதை ஏற்றிக்கொள்பவர்களை அவ்வளவு எளிதாக நாம் அடையாளம் காண முடியாது. மேலும், இந்தப் பொருட்கள் பள்ளி மாணவர்களுக்குக்கூட எளிதாகக் கிடைக்கும் என்பதால், இவற்றைப் பயன்படுத்துவது சுலபமாக இருக்கிறது. நண்பர்கள் மூலம் மற்றவர்களுக்கும் வெகு எளிதாக இந்தப் பழக்கம் தொற்றிக்கொள்கிறது. விளையாட்டுக்காக ஆரம்பிப்பவர்கள், நாளடைவில் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் அடிமையாகிவிடுகின்றனர். குடிப் பழக்கத்தைவிட மிக மோசமான அடிமைத்தனம் இது.
இவர்களுக்குப் படிப்பில் அதிக நாட்டம் இருக்காது. விளையாட்டு, கலை எதிலுமே ஆர்வம் இல்லாமல் விட்டேத்தியாக இருப்பார்கள்.
போதைக்காக பெற்றோர்களிடம் நிறையப் பொய்கள் சொல்லிப் பணம் கேட்க ஆரம்பிப்பார்கள். கிடைக்காதபோது வீட்டிலேயேத் திருட ஆரம்பிப்பார்கள். ஒயிட்னர், பெட்ரோல் என ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் கஞ்சா, அபின், மார்பின், பெத்தடின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களையும் பயன்படுத்தும் அளவுக்குக்கூட வழிவகுத்துவிடும்.
எனவே, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பழக்கவழக்கங்களைக் கண்காணிக்க வேண்டும். தகுந்த மருந்துகள் மற்றும் மன நல மருத்துவரின் ஆலோசனையுடன் அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை அவர்களுக்கு ஏற்றதுபோல் மாற்றி, எந்த நேரமும் கலகலப்பாக இருக்கும்படி செய்ய வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே, படிப்படியாக அவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும்!' என்கிறார் அக்கறையும் நம்பிக்கையுமாக!
No comments:
Post a Comment