ராஞ்சி: ஜார்க்கண்ட் மின்சார வாரியம் ஒருவருக்கு ரூ.55 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதை அறிந்த அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர் தனது குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவருக்கு ஷாக் அடிக்கும் செய்தி ஒன்று காத்திருந்தது. அது, ரூ.55 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அலுவலகத்திலிருந்து அவருக்கு பில் அனுப்பப்பட்டது. அதை கேள்விப்பட்டதும் கிருஷ்ண பிரசாத்தின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்க சிகிச்சைக்காக உடனே மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.
ராஞ்சியில் உள்ள கத்ரு பகுதியில், இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டில் பிரசாத் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அங்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், அவர் வீட்டில் ஏ.சி.யைக்கூட பயன்படுத்தியதே இல்லை. அதுமட்டுமின்றி அங்கு 7 முதல் 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறதாம். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு ரூ.55 கோடிக்கு மின்சார பில் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ண பிரசாத் கூறுகையில், ''இதனால் என்னுடைய தாயாரின் உயிருக்குகூட ஆபத்து வரலாம். தவறு செய்தவர்களை நான் நீதிமன்றத்திற்கு இழுப்பேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்" என்றார்.
இச்சம்பவத்தை அடுத்து ஜார்க்கண்ட் மின்சார வாரியம், இரண்டு ஊழியர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கிளரிக்கல் தவறு காரணமாக இது நடைபெற்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பாக மின்வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment