Saturday, May 23, 2015

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 4,963 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு:
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 4,693 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 21.12.2014-இல் நடைபெற்றது. இந்தத் தேர்வில் 10 லட்சத்து 61 ஆயிரத்து 45 பேர் பங்கேற்றனர். இவர்களில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 80 தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் ஆகியவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது மதிப்பெண், தரவரிசை ஆகியவற்றை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை, ஜாதி வாரியான தரவரிசை, சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பதிவிட்டு இவற்றை அறிந்துகொள்ளலாம். வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் தரவரிசை நிலை, காலிப் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவர்கள் அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்தத் தேர்வில் பங்கேற்று, குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் மதிப்பெண்ணும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஷோபானா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024