Saturday, May 23, 2015

'கட்- ஆப்' 460; 459 'கெட்- அவுட்' : மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி


கோவை: கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கைக்கு, 460 மதிப்பெண், 'கட்- ஆப்'பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக மதிப்பெண் பெற்றும், விரும்பிய துறையில் சேர முடியாமல், பல மாணவர்கள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மாநில அளவில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில், 43 ஆயிரத்து 659 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில், 95.65 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில், கோவை 11வது இடத்தில் உள்ளது. கேள்வித்தாள் மற்றும் பாடத்திட்ட எளிமை, மனப்பாடம், மதிப்பெண் நோக்கில் கற்றல் கற்பித்தல் முறை காரணமாக மாநில அளவில் சாதாரணமாக, சராசரிக்கு சற்று அதிகமுள்ள மாணவர்கள் கூட, 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.


எதிர்பார்க்காத அளவுக்கு, மாணவர்கள் மதிப்பெண் குவித்துள்ளதன் விளைவாக, 450க்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பயோ- மேக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 400க்கும் குறைவான, மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பதிலும் சிக்கல் நிலவி வருகிறது.

குறிப்பாக, 350க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலை பாடப்பிரிவுகளில் கூட இடம் கிடைக்காமல், ஒவ்வொரு பள்ளியாக பெற்றோர் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கல்பனா என்பவர் கூறுகையில்,''எனது மகள், 430 மதிப்பெண் பெற்றுள்ளாள். ஏற்கனவே படித்த பள்ளியிலேயே, முன்னுரிமை வழங்கவில்லை. எந்த பாடப்பிரிவுகளிலும் இடம் கிடைக்கவில்லை.

''ஒவ்வொரு பள்ளியாக அலைந்து பார்த்தேன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் சேர்க்க முடியவில்லை. கஷ்டப்பட்டு படித்து என் மகள், 430 மதிப்பெண்கள் பெற்றும் பயனில்லை எனும் போது, ஒன்றும் புரியவில்லை,'' என்றார்.

பெற்றோர் நலச்சங்க உறுப்பினர் கவுதம் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் முக்கிய பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. 490க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கே, 'பயோ- மேக்ஸ்', 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' துறைகள் கிடைத்துள்ளன. 450க்கு மேல் எடுத்த பல மாணவர்களுக்கு, இந்த ஆண்டு அறிவியல் பாடப்பிரிவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. கலைப்பிரிவில் சேர்வதற்கும், 400க்கும் மேல் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 200 முதல் 350 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்வது, மிகவும் சிரமாக உள்ளது,'' என்றார்.

கல்வியாளர் பாரதி கூறுகையில்,''புள்ளி விபரங்களை வைத்து சாதனை பட்டியலை தயாரிக்கும் பள்ளிக்கல்வித்துறை, மறைமுகமாக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. இன்றைய கல்வி முறையின் மூலம், மனப்பாடம் செய்வதை ஊக்குவித்து வருகிறோம்; நாட்டின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க முடியவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024