Monday, May 25, 2015

அரசு விளம்பரத்தில் முதல்–அமைச்சர் படம்

மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநில அரசுகள் என்றாலும் சரி, ஆட்சி நடத்துபவர்கள் எல்லோருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். இந்த நிலையில், மாநில அரசுகளோ, மத்திய அரசாங்கமோ, ஏதாவது திட்டங்களை அறிமுகப்படுத்தினாலோ, அல்லது அரசு சார்பில் விழாக்கள் நடத்தினாலோ, பல திட்டங்களின் பலனை மக்கள் அறியவேண்டும் என்றாலோ, அரசு சார்பில் விளம்பரங்கள் கொடுப்பது வழக்கம். இதை மாநில அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசாங்கமும் காலம்காலமாக செயல்படுத்திவருகிறது. இப்படி வெளியிடப்படும் மத்திய அரசாங்க விளம்பரங்களில் பிரதமர், அந்தத்துறை தொடர்பான அமைச்சர்கள் படங்களும், மாநில அரசு விளம்பரங்களில் முதல்–அமைச்சர், மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் படங்களும் இடம்பெறும். மேலும், இந்த விளம்பரங்களில் அந்த கட்சியின் மறைந்த தலைவர்கள் படங்களும் இடம்பெறும். பிறந்தநாள், நினைவுநாள் விளம்பரங்களிலும் தொடர்புடைய தலைவர்கள் படங்கள் இடம்பெறும்.

இப்போது திடீரென உச்சநீதிமன்றத்தில் இத்தகைய விளம்பரங்களில் யார்–யார்? படங்கள்தான் இடம்பெறலாம் என்றவகையில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு, நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தீர்ப்பில் மத்திய, மாநில அரசாங்கங்களின் விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதி படங்களைத்தவிர, மாநில முதல்–அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் படங்களை வெளியிடக்கூடாது, இதை அனுமதித்தால் தனிப்பட்ட புகழை வளர்ப்பதுபோல, ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராக அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளது.

எல்லா மாநிலங்களுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்து இருந்தாலும், உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில்தான் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், இந்த தீர்ப்பு மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஒரு வேறுபாட்டை உருவாக்கியதன் மூலம், கூட்டாட்சி அமைப்புக்கே முரணாக இருக்கிறது. நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என்ற எண்ணத்தை இந்த தீர்ப்பு உருவாக்குகிறது என்பதால், இந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், மாநில அரசின் சாதனைகள் தொடர்பான விளம்பரங்களில் முதல்–அமைச்சர் படங்களை பிரசுரிக்க ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு உரிமை இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

தமிழக அரசின் இந்த கோரிக்கை நியாயமான ஒன்றாகும். ஒரு மாநில அரசு அதிலும், மத்தியில் உள்ள அரசாங்கம் எந்த கட்சி அரசாங்கமோ, அந்த கட்சி இல்லாத மற்றொரு கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில், அந்த அரசு சார்பில் அந்த முதல்–அமைச்சர் மக்களுக்கான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் படம் இல்லாமல், பிரதமர் படத்தைத்தான் பிரசுரிக்கவேண்டும் என்று நிர்ப்பந்தித்தால், எந்த நோக்கமும் நிறைவேறாமல் போய்விடும். மத்தியில் பிரதமருக்குள்ள உரிமை நிச்சயமாக மாநிலங்களில் முதல்–அமைச்சர்களுக்கு இருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு நேர்எதிரானது என்பது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமையையும் பறிப்பதாகும். மேலும், அரசு விளம்பரங்களில் மாநில அரசின் முதல்–அமைச்சர் படத்தையோ, அமைச்சர்கள் படங்களோ இடம்பெறாது என்கிறபோது, தனிப்பட்ட முறையில் அமைச்சர்களோ, கட்சியினரோ அவர்கள் படங்களோடு விளம்பரங்கள் கொடுத்தால் இந்த தடை அந்த விளம்பரங்களுக்கு பொருந்தாது. அப்படி நடக்கும்போது இந்த தீர்ப்பு பயனில்லாமல் போய்விடும். மொத்தத்தில், அரசு விளம்பரங்களில் படங்கள் இருக்கக்கூடாது என்றால், யார் படமும் இருக்கக்கூடாது. அதைதவிர்த்து, பிரதமர் படம் இருக்கலாம், மாநில முதல்–அமைச்சர் படம் இருக்கக்கூடாது என்றால், அந்த பாரபட்சத்தைத்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...