Saturday, May 2, 2015

தமிழ் சினிமாவின் ஜகதலப் பிரதாபன்!- பி.யு. சின்னப்பா

‘குபேர குசேலா’ பட போஸ்டர்

மே 5: பி.யு. சின்னப்பா 99-வது பிறந்த தினம்

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்பவர்களை ‘சகல கலா வல்லவர்’ என்று கூறுவது 80களில் பிரபலம். வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணியின் வேடம் பிரபலமானதால் 90களில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்போது சந்தானத்தின் தயவால் ‘அப்பா டக்கர்’.

ஆனால் 1950களில் இப்படிப்பட்டவர்களை எப்படி அழைத்தார்கள்!? “ ஜகதலப் பிரதாபன்!”. அழைக்கக் காரணமாக இருந்தவர் பி.யு. சின்னப்பா. அடுத்த ஆண்டு (2016) நூற்றாண்டு நாயகராகக் கொண்டாடப்பட இருக்கும் இவர், கலை வாழ்வில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் ஜகதலப் பிரதாபன்தான்.

1944-ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து இயக்கிய படம் ‘ஜகதலப்பிரதாபன்’. இந்தியப் புராணக்கதை மரபில் புகழ்பெற்ற ஒன்று ‘பன்னிரண்டு மந்திரிமார் கதை’. அதில் ஒரு கதைதான் ஜகதலப் பிரதாபனின் கதை.

பூலோக அரசனாகிய பிரதாபன், இந்திரலோகம், நாகலோகம், அக்னிலோகம், வருணலோகம் ஆகிய நான்கு லோகங்களின் ராஜகுமாரிகளைத் தனது அழகாலும் திறமைகளாலும் கவர்ந்து மணம் முடித்து வாழ்பவன். ஒருமுறை தேவலோக ராஜகுமாரியாகிய இந்திராணி கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட அவளை அழைத்துவர இந்திரசபைக்கு வருகிறான் பிரதாபன். மனைவியை அனுப்பிவைக்கும்படி தேவேந்திரனிடம் கேட்கிறான். “ ஆய கலைகளில் உனக்குத் திறமை இருந்தால் இந்த சபையில் அதைக் காட்டிவிட்டு உன் மனைவியை அழைத்துச் செல்” என்று இந்திரன் சவால்விடுகிறார். சவாலை ஏற்கும் பிரதாபன் (சின்னப்பா) “ தாயே பணிந்தேன்” என்ற பாடலைப் பாடிக் காட்டி சவாலில் வெற்றிபெறுகிறார்.

ஜி. ராமநாதன் இசையில் அமைந்த இந்தப் பாடல் காட்சியில் ஐந்து வேடங்களில் அற்புதமாகப் பாடி நடித்தார் பி.யு. சின்னப்பா. பாடும் வித்வானாக நடுநாயகமாக அமந்து பாட, அவரது வலப்பக்கம் வயலின் வித்வான், கடம் வித்வான், இடப்பக்கம் புல்லாங்குழல் வித்வான், கொன்னக்கோல் வித்வான் என்று ஐந்து வேடங்களில் அந்தந்தக் கலைஞர்களுக்கே உரிய உடல்மொழியைக் கச்சிதமாக வெளிப்படுத்தி பி.யு சின்னப்பா நடித்திருந்தார். இந்தக் காட்சியை அந்நாளின் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் மிகத் தந்திரமாகப் படமாக்கியிருந்தார். இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து அவரை ‘ஜகதலப் பிரதாபன்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். 280 நாட்கள் ஓடிய இந்தப் படம், தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ வெளியான பிறகே திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டது.

நீள்வட்ட முகம், காந்தக் கண்கள். நீள மூக்கு, பேசும் உதடுகள், தோள்களில் புரளும் பாகவத சிகையழகு. கொஞ்சம் புஷ்டியான உடல் என்று அந்த நாளின் நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் நாடகம் வழியே சினிமாவுக்கு வந்த இந்த சகல கலா சக்ரவர்த்திக்குத் தெரியாத விஷயங்களே இல்லை.

சின்னப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை. உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இருவருக்கு இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் ஐந்து வயது முதலே நாடக ஆர்வம். அப்பாவிடம் நாடகப் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடத் தொடங்கிய சின்னப்பா ஆறு வயதில் ‘சதாரம்’ என்ற நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

பிறகு எட்டு வயதில் குஸ்தி, சிலம்பம் கற்று, பத்து வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்த்துவிடப்பட்டார். பிறகு பன்னிரண்டு வயதில் புதுக்கோட்டைக்கு நாடகம் போட வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தவருக்கு மாதச் சம்பளம் 15 ரூபாய். பிறகு மதுரைக்கு குழுவுடன் பயணித்த சின்னப்பாவுக்கு 14 வயதில் 75 ரூபாய் சம்பளம் கொடுக்க உத்தரவிட்டார் முதலாளி.

ஒரு நாள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் அனைவரும் தங்கியிருக்கும் வீட்டில் ‘சதி அனுசூயா’ நாடகத்தில் இடம்பெறும் பாடல்களை ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். இவர் சாரீரமும் பாவமும் காற்றைக் கிழித்துக்கொண்டு மேல் மாடியிலிருந்த ஸ்ரீ சச்சிதானந்தப் பிள்ளையின் காதுகளை நிறைத்தது. அவர்தான் கம்பெனி முதலாளி. “இவ்வளவு திறமையான பாடகன் யாரப்பா!?” என்று எழுந்துபோய்ப் பார்த்திருக்கிறார்.

முதலாளி எதிரில் வந்து நின்றாலும் பாடலைப் பாதியில் நிறுத்தாத சின்னப்பாவின் ஈடுபாட்டையும் திறமையையும் பார்த்துச் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்திவிட்டார். இதன் பிறகு சின்னப்பா நாடக உலகில் சிகரம் தொட ஆரம்பித்தார். சாதாரண நடிகராயிருந்த சின்னப்பா ராஜபார்ட்டாக (கதாநாயகன்) உயர்த்தப்பட்டார்.

அதே கம்பெனியில் நடித்துவந்த எம்.ஜி.ஆர். , எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பொன்னுசாமி , அழகேசன், காளி என்.ரத்தினம் என எண்ணற்ற நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். அதிக நண்பர்கள் இருந்தாலும் சின்னப்பாவிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பார்களாம். காரணம் அவர் கொஞ்சம் கோபக்காரர்.

இன்று நமது கதாநாயகர்கள் ‘சிக்ஸ் பேக்’ ‘ எய்ட் பேக்ஸ்’ என்று உடலை முறுக்கேற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 190 பவுண்ட் எடை வரை தூக்கி பரிசுகளை வென்று முறுக்கான வெயிட் லிஃப்டராக விளங்கினார் சின்னப்பா. இந்தியா, பர்மா, பினாங்கு, மலேசியா, ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நடித்து வந்த ‘சந்திரகாந்தா’ நாடகத்தின் புகழ் பிரிட்டிஷ் இந்தியா முழுக்கப் பரவியது. அதை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து 1936-ல் வெளியிட்டது. டெல்லியிலும் கல்கத்தாவிலும்கூட மேடையேறியது.

அதில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் வரவு தமிழ் சினிமாவின் முதல் சகல கலா கதாநாயகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ஆர்யமாலா, ஜகதலப் பிரதாபன், கண்ணகி, குபேர குசேலா, ஹரிச்சந்திரா, மஹாமாயா, பிருதிவிராஜன், மனோன்மணி, உத்தமபுத்திரன் (இரட்டை வேடம்), மங்கயர்க்கரசி, கிருஷ்ண பக்தி என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த கதாநாயகனாகக் கவர்ந்தார்.

தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவித்தார். இதை அறிந்த புதுக்கோட்டை ராஜா, இனி சின்னப்பா இங்கே வீடுகளை வாங்கக் கூடாது என்று தடையே போட்டாராம்.

பிருதிவிராஜன் படத்தில் பிருதிவியாக நடித்த சின்னப்பாவுக்கும், சம்யுக்தையாக நடித்த ஏ.சகுந்தலாவுக்கும் இடையிலான திரைக்காதல் நிஜத்திலும் காதல் மணமாய் முடிந்தது. பாட்டையும் நடிப்பையும் தன்னிரு கண்களெனக் காத்து வந்த பி.யு. சின்னப்பா தனது 35வது வயதிலேயே திடீர் உடல்நலக்குறைவால் பூவுலகை விட்டு நீங்கினார். ஆனால் அவர் நடித்த படங்களும் பாடிய பாடல்களும் இன்னும் மவுசு குறையாமல் கலையுலகின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024