Saturday, May 2, 2015

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்களை அனுமதிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த எம்.முத்துவேல் உள்பட சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் சென்னை, பெங்களூரு உள்பட ஐந்து மாநிலங்களில் மருத்துவக் கல்லூரித் தொடங்கி கடந்த 2010 முதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நிதிச் சுமை காரணமாக மருத்துவக் கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரிகளை நடத்தத் தேவையில்லை எனக் கருதி அவற்றை மூட முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஎஸ்ஐ அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், மருத்துவக் கல்லூரிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை அல்லது அவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றும் வரை கல்லூரிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த முடிவுக்கு மாறாக 2015-16 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க உள்ளதாக கடந்த மார்ச் மாதம் மீண்டும் இஎஸ்ஐ அறிவித்தது.

வரும் கல்வியாண்டில் புதிய மாணவர்களைச் சேர்க்க இஎஸ்இ எடுத்த முடிவு தன்னிச்சையான முடிவாகும்.

காப்பீடு செய்த தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காகவே இஎஸ்ஐ மருத்துவமனைகள் தொடங்கப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மாறாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி அதற்காக இதுவரை ரூ. 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இஎஸ்ஐ நிர்வாகம் தொழிலாளர்களுக்கும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளிப்பதை விடுத்து,கல்லூரிகளை தொடங்கி நடத்தி வருகிறது.

எனவே, வரும் கல்வியாண்டில் அதன் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். மேலும், கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 26-ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024