இனி, எந்நாளுமே தற்கொலை காலங்கள்தான். உழவர்களிடம் இருந்து தொடங்கிய தற் கொலைகள், இப்போது அரசு அதிகாரி களைத் தொற்றிக்கொண்டது. தற்போது கல்வி கற்று இந்நாட்டை மேம்படுத்த அனுப்பப்பட்டவர்கள் தற்கொலை செய்து மாண்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தற்கொலைகளின் பின்னாலுள்ள அரசியலையும் அதற்கானத் தீர்வையும் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. சிந்தித் துத் தீர்வை உருவாக்க வேண்டிய ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் தீர்வை உருவாக்குவது தங்களுடைய கடமை இல்லை என நினைக்கிறார்கள்.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண் சாதனை புரிந்தவர்களின் படங்களின் அருகே தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலையில் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவர்களின் படங்களையும் நாளேடுகளில் காண்பது பற்றிய கவலை ‘தற்காலிகமானது’ என நினைக்கிறோம்.
மதிப்பெண்கள்தான் வாழ்வின் முடி வைத் தீர்மானிப்பதாக நினைத்து தற் கொலை செய்துகொண்ட மாணவர் களும், வெற்றி பெற்று பணம் எனும் ஒன்றை மட்டுமே சிந்தனையில் முன்னிறுத்திக்கொண்டு கல்விக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களும்தான் நாம் உருவாக்கி வைத்திருக் கும் கல்வி முறையின் விளைச்சல்கள்.
இந்தப் பள்ளிகள் யாருக்கானவை? ஆசிரி யர்களுக்கா? பெற்றோர் களுக்கா? மாணவர் களுக்கா? அல்லது அனை வரையும் ஆட்சிபுரியும் அரசுகளுக்கா? அவை அறிவுக்கானதாகவும், வாழ்வியலுக்கானதாக வும் இல்லாமல் எதிலும் நம்பிக்கைகளை இழந்த கோழைகளை யும், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் அடிமைகளையும் உருவாக்கு வதால்தான் இந்தக் கேள்விகள்!
கல்வியைக் கற்றுக் கொடுப்பதால் கல்லா கட்ட முடியாது. வெறும் செலவு தான் என்பதால் அதிக வருமானம் வருகிற துறையை மட்டும் ஆட்சியாளர்கள் கையில் வைத்துக்கொண்டார்கள். மக்களின் கேள்வியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் மட்டுமே, மிஞ்சியிருக்கிற அரசுப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ‘அதெல்லாம் இல்லை. சிறந்த கல்வியை அரசுப் பள்ளிகள்தான் தருகின்றன’ எனச் சொன்னால், அரசாங்கத்தை நடத்துபவர்களின் பிள்ளைகள் அங்கே தானே படித்திருக்க வேண்டும்? எது எதற்கோ சட்டம் இயற்றுபவர்கள், அரசு ஊதியம் பெறுகிறவர்களின் பிள்ளை களும் அரசின் கல்விக் கூடங்களில்தான் பயில வேண்டும் என்கிற சட்டத்தை உட னடியாக இயற்றியிருக்க வேண்டும் அல் லவா? கல்வித் துறையில் அரசாங்கத்தின் வேலை என்பது தேர்வை நடத்தி முடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது.
கோழிச்சண்டைக்காக வளர்க்கப் படும் கோழிகள் என்னென்ன முறைகளில் வளர்க்கப்படுகிறதோ. அவ்வாறேதான் இங்கு பயிலும் மாணவர்களும் உருவாக் கப்படுகிறார்கள். மாணவர்களுக்குள் ளேயே போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மனப்பாடம் செய்ய வைத்து, அதனை மீண்டும் தேர்வுத் தாளில் வாந்தி எடுக்கும் தலைமுறைகள்தான் இவர்களால் உருவாக்கப்படுகின்றன.
எதிலும் நம்பிக்கையற்ற, அடிமைத் தனமும் கோழைத்தனமும் கொண்ட, போர்க்குணம் அற்ற, கேள்வி கேட்காத தலை முறைகளை உருவாக்கிக் கொண்டு இந்நாட்டை சீரழித்துக் கொண்ச்டிருக் கிறோம் என்கிற குற்றவுணர்வு பெற்றோர் களுக்கும் இருப்பதில்லை; நிறுவனங் களுக்கும் இருப்பதில்லை; அரசுக்கும் இருப்பதில்லை.
இந்த எல்லாக் குறைபாடுகளை யும் களைந்து, வளமான முன்னேற் றப் பாதைக்கு இந்நாட்டைக் கொண் டுச் செல்ல இனி எங்கிருந்து, யார் வரப் போகிறார்கள்? அரசியலை தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்ட, அரசியல்வாதிகளிடமா நாம் தீர்வையும், விடுதலையையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறோம்?
ஒருவேளை யாராவது வந்தால் சத்தியமாக அவர்கள் அடிமைகளையும் கோழைகளையும் உருவாக்கும் ஆங்கிலக் கல்வி புகட்டும் தனியார்ப் பள்ளியில் இருந்து வர மாட்டார்கள். யாருமே கண்டுகொள்ளப்படாத, கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் கஞ்சி இல்லாததால் காய்ந்த தலையுடன், புழுதிக் கால்களுடன் நடந்து சென்று படிக்கிற, ஒவ்வோர் ஆண்டும் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்துதான் வருவார்கள். எல்லா இடர்பாடுகளையும், தடைகளையும் கடந்து வளரும் அந்தக் காட்டுச் செடிகள்தான் நம் நாட்டுக்கு ஒரே நம்பிக்கை. ஆனால், நாம் அனைவரும் ஒருநாள் கவனிக்காமல்கூட போனால், வாடி வதங்கி பட்டுப்போகும் எந்தப் பலனையும் தராத, வெறும் காட்சிப் பொருளான குரோட்டன் செடிகளைத்தான் தனியார் பள்ளிகளில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
மதிப்பெண்களே கல்வி என்பதனையும் கடந்து மதிப்பெண்களே வாழ்க்கை என கற்பித்து மாணவர்களின் உயிரை காவு கொள்ளும் பள்ளிகள்தான் இந்நாட்டின் புற்று நோய்கள். மதிப் பெண்களை குறைவாகப் பெற்றதற் காகவும், தேர்வில் தோல்வி அடைந்த தற்காகவும் நிம்மதியை இழந்து ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் உழலும் மாணவர்களை உருவாக்கும் போக்கு நீடிக்கத்தான் வேண்டுமா? என்றைக்காவது இந்தக் கல்வி ---முறை சரியில்லை எனச் சொல்லி நாம் போராடியிருக்கிறோமா? ஊதிய உயர்வுக்காகவும், பிற தன்னலத் தேவைக் காகவும் போராடும் ஆசிரியர்கள் இந்தக் கொடுமைகளில் இருந்து இம் மாணவர்களை காப்பாற்ற வேண்டும் எனப் போராடியிருக்கார்களா?
ஆசிரியர்களின் ஒடுக்குமுறைகளுக் கும், அதிகாரத்துக்கும் பயந்து நடுங்கி அடையாளத்தை இழந்து, உடன் பயிலும் தோழமையை எதிரியாகக் கருதும் எண்ணத்தில் வளர்ந்து, ஆராய்ச்சி மற்றும் ஆய்ந்தறியும் மனநிலையை இழந்து, கோழைகளாகவே கறிக் கோழிகள் போல் வெறும் பணம் சம்பாதிக்கவே வளர்க்கப்படும் நம் தலைமுறைகளின் நிலை யார் கண்களுக்கும் தெரியவில்லையா?
மாநில அளவில் சாதனைபுரிந்து மதிப் பெண்களை வாரிக் குவித்தவர்களின் தற் போதைய வாழ்க்கை என்னவாக இருக் கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றவர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக் கிறார்கள்? யாருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
எதற்கும் விளங்காதவர், யாருக் கும் பயன்படாதவர் என பெற்றோர் களாலும், ஆசிரியர்களாலும் இகழப் பட்ட மாணவர்கள்தான் இம்மக்களுக் காக, இம்மொழிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக் காலில் நின்று பெரும் தொழில் செய்யும் முதலாளிகளாக, உற்பத்தியாளர்களாக, சூழலியல் செயல்பாட்டாளர்களாக, மக்கள் செயல்பாட்டாளர்களாக, அரசி யல் தலைவர்களாக, திரைப்பட இயக்குநர்களாக, மக்கள் கொண்டாடும் நடிகர்களாக, எழுத்தாளர்களாக, ஓவியர் களாக, சிற்பிகளாக, இசைக் கலைஞர் களாக இவை எல்லாவற்றையும்விட நமக்கெல்லாம் உணவை உற்பத்தி செய்து தரும் யாரும் கண்டுகொள்ளாத உழவர்களாக இந்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போதுகூட அடிபட்டால் ஓடிவந்து தூக்கி உதவிசெய்து காப்பாற்று பவர்கள் அதிக மதிப்பெண்களை பெறத் தெரியாதவர்கள்தான். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதுதான் நம் கல்வி!
இதனை மாற்றாமல் இங்கு எந்த அரசியல் மாற்றமோ, சமூக மாற்றமோ, புரட்சியோ நடக்கப் போவதில்லை. சண்டைக் கோழிகளையும், கறிக் கோழிகளையும் உற்பத்தி செய்துத் தருகினற நம் கல்விமுறை இருக்கும் வரை நாம் வெறும் இனப்பெருக்கத்தை உற்பத்தி செய்யும் கூட்டம்தான்.
- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com