'இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், நீதிமன்றம் சென்றுள்ளதால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
நிதிச்சுமை:
தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகள் உள்ளன. நிதிச்சுமையால் திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நிறுத்தி விட்டு, கல்லூரிகளை மூடும் முடிவுக்கு வந்தது. 'மாநில அரசுகள் விரும்பினால், மருத்துவ கல்லூரிகள் ஒப்படைக்கப்படும்' எனவும், அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்ப்பு அதிகமானதால், கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டதோடு, 'நடப்பு ஆண்டில் வழக்கம்போல் மாணவர் சேர்க்கப்படுவர்' என, அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், 'தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும்; மருத்துவக்கல்வி தருதல் என்ற தவறான முடிவு எடுத்ததால், நிதி நெருக்கடியில் சிக்கியது. மாணவர் சேர்க்கை எனும், தவறை மீண்டும் செய்யக்கூடாது' என, இ.எஸ்.ஐ.,க்கு பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள் ஒன்றிணைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மாணவர் சேர்க்கை நடந்தாலும், அது நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என, அறிவித்துள்ளது. மேலும், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கழகத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால், மீண்டும் மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற, கேள்வி எழுந்து உள்ளது.
அனுமதி கிடைக்கும்:
இதுகுறித்து, இ.எஸ்.ஐ., இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு எதிரான வழக்கு விசாரணையில் உள்ளது. ஆனால், நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. நிச்சயம் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம்' என்றனர்.
-நமது நிருபர் -
No comments:
Post a Comment