Sunday, May 10, 2015

சிவகங்கை அருகே:என்ஜின் பழுதால் நடுவழியில் ராமேசுவரம் ரயில் நிறுத்தம்; பயணிகள் அவதி

சிவகங்கை அருகே சனிக்கிழமை என்ஜினில் ஏற்பட்ட பழுதால் ராமேசுவரம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.40 மணிக்கு புறப்பட்ட ராமேசுவரம் விரைவு ரயில் சிவகங்கை அருகே உள்ள பனங்குடி என்ற இடத்தில் வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவஇடத்துக்கு வந்த அதிகாரிகள், திருச்சியிலிருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரயிலை பனங்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி, அதன் என்ஜினைக் கொண்டு ராமேசுவரம் விரைவு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில், திருச்சியிலிருந்து வந்த பயணிகள் அனைவரையும் ஏற்றி ராமேசுவரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இதையடுத்து, மதுரையிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பனங்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி ரயிலுடன் இணைக்கப்பட்டு மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024