Friday, May 8, 2015

பிளஸ் 2 ரிசல்ட்டே வரவில்லை, எப்படி பெயிலாவேன்‍: சொல்கிறார் லட்சுமிமேனன்


சென்னை:  பிளஸ் 2 தேர்வில் நான் ‘பெயில்’ ஆகவில்லை என்று நடிகை லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமிமேனன் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார்.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கேரளாவிலும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதாகவும், இதில் நடிகை லட்சுமிமேனன் ‘பெயில்’ ஆகிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் லட்சுமிமேனன். அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் இருந்த லட்சுமிமேனனிடம், சமூகவலைத்தளங்களில் பரவிய தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சி.பி.எஸ்.இ.யில் (மத்திய பாடத்திட்டம்) படித்தேன். சி.பி.எஸ்.இ-யில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதினேன்.

அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20ஆம் தேதிக்கு மேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். நான் பிளஸ் 2 தேர்வில் ‘பெயில்’ ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024