Friday, May 8, 2015

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.மணியன் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் துணைவேந்தராக பேராசிரியர் முனைவர் எஸ்.மணியனை தமிழக ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டது. அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா என்ற ஐஏஎஸ் அதிகாரியை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அப்போதிருந்த துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக அரசு இடஒதுக்கீடு அடிப்படையிலும், பிளஸ்டூ மதிப்பெண்கள் அடிப்படையிலும் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ், எம்டி, பிடிஎஸ். பிபிடி, பிஇ, பிஎஸ்சி வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் எவ்வித நன்கொடை அளிக்காமல் பயனடைந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழகஅரசு ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவினர் மூவரை பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு கோப்புகளை அனைப்பி வைத்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தாவரயியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ்.மணியனை நியமனம் செய்து தமிழக கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர் விரைவில் பொறுப்பார் என பல்கலைக்கழக வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த இரு ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தை சிறப்பாக நிர்வகித்து வந்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி, ஸ்ரீமாலினி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் புதிய துணைவேந்தரிடம் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024