Saturday, May 9, 2015

நாடு முழுவதும் 17 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு ஒப்புதல்

புதுடெல்லி,

நாடு முழுவதும் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைத்தல் மற்றும் 70 மருத்துவ நிறுவனங்களின் தரம் மேம்பாட்டுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச சுகாதார திட்டம்

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சர்வதேச தரத்திலான சுகாதார திட்டம் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச தரத்திலான சுகாதார திட்டத்தை எட்டுவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டத்தை எட்டுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை படிப்படியான முறையில் மத்திய அரசு வழங்கும்.

9 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

இந்த திட்டப்படி 9 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதைப்போல மருத்துவ கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள் என 70 நிறுவனங்கள் தர மேம்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சர்வதேச தரத்திலான சுகாதார திட்டத்தை நோக்கிய எங்கள் பயணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 22 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் 17 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

உதவிகள் வழங்கப்படும்

மாநிலங்கள் சர்வதேச சுகாதார திட்டத்தை உறுதி செய்வதற்கு வலுவான கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதை எட்டுவதற்காக மாநிலங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுமோ? அவற்றை மத்திய அரசு வழங்கும்.

இலவச அல்லது மலிவு விலையிலான சுகாதார திட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைவேற்றும்.

ஆர்.எஸ்.பி.ஒய் திட்டம்

மேலும் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உதவியை இலவசமாக பெறும் ‘ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா (ஆர்.எஸ்.பி.ஒய்)’ திட்டமும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024