Saturday, May 9, 2015

இலவச அழைப்பு திட்டத்தை பயன்படுத்த ரூ.500 செலுத்தி எஸ்.டி.டி., வசதி பெறலாம்

எஸ்.டி.டி., வசதி இல்லாத இணைப்புகளுக்கு, 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால், அந்த வசதி அளிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.

முடியவில்லை:

'இரவு, 9:00 மணியில் இருந்து, அடுத்த நாள் காலை, 7:00 மணி வரை, பி.எஸ்.என்.எல்., தரை வழி போனில் இருந்து, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நெட்வொர்க் தரை வழி போன், மொபைல் போன்களுக்கு, தொடர்பு கொள்வது இலவசம்' என, அந்நிறுவனம் அறிவித்தது. நாடு முழுவதும் இந்த திட்டம், மே, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், எஸ்.டி.டி., வசதி இல்லாத போனில் இருந்து, பிற மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, ஏற்கனவே பி.எஸ்.என்.எல்., இணைப்பு வைத்துள்ளவர்கள், எஸ்.டி.டி., இணைப்பு கேட்டு, விண்ணப்பம் செய்தனர். 'இலவச திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், புதிய வசதிகள் வழங்குவதில்லை' என, அவர்களிடம் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், 'எஸ்.டி.டி., வசதி வேண்டுவோர், 500 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி, எஸ்.டி.டி., வசதி பெற்றுக் கொள்ளலாம்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

'பாஸ்வேர்டு':

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், மாநிலத்துக்குள் தொடர்பு கொள்ள, தனியாக எஸ்.டி.டி., வசதி தேவையில்லை. அவர்கள் சார்ந்துள்ள, பி.எஸ்.என்.எல்., இணைப்பகத்தை தொடர்பு கொண்டு, 'டயனமிக் லாக்' அகற்றி, தனி, 'பாஸ்வேர்டு' பெற்றுக் கொண்டு பேசலாம். ஆனால், பூஜ்ஜியம் சேர்ந்து தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களுக்கு, எஸ்.டி.டி., வசதி பெற வேண்டும். இதற்கு, திருப்பி பெறத்தக்க வைப்புத் தொகையாக, 500 ரூபாய் செலுத்தினால், எஸ்.டி.டி., வசதி அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024