Sunday, May 10, 2015

ஆதார்' எண்ணை ஏற்க வருமான வரித்துறை மறுப்பு


'பான்' கார்டு வழங்க, ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக ஏற்க, வருமான வரித்துறை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனி நபரின் குடும்ப விவரங்கள் உட்பட, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, 'ஆதார்' எண், அனைத்து விதமான விண்ணப்பங்களுக்கும் சான்றாக ஏற்கப்படுகிறது. ஆனால், 'பான்' கார்டு வழங்க, 'ஆதார்' எண்ணை, அடையாளச் சான்றாக, வருமான வரித்துறை ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், முகவரி, வயது ஆகியவை உள்ள ஆவணத்தைத் தான், அடையாளச் சான்றாக ஏற்க முடியும். ஆனால், 'ஆதார்' எண்ணில், விண்ணப்பதாரரின் பெயர் உள்ளது. தந்தை பெயர் என்ற இடத்தில், இனிஷியல் தான் உள்ளது. உதாரணத்துக்கு, எஸ்.மணிவேல் என்ற விண்ணப்பதாரருக்கு, 'எஸ்' என்ற இனிஷியலுக்கு, விரிவாக்கம் தேவை. 'எஸ்' என்ற எழுத்தில், பல ஆயிரம் பெயர்கள் உள்ளன. விண்ணப்பதாரர் கூறும், 'எஸ்' என்ற எழுத்துக்கான விரிவாக்கம், ஆதார் எண்ணில் இல்லை. இதனால், பெயரில் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, இனிஷியலுக்கு, விரிவாக்கம் இல்லாத, 'ஆதார்' எண்ணை, அடையாளச் சான்றாக ஏற்க முடியாது. அரசின் விதிகளுக்கு உட்பட்ட சான்றுகளையே அங்கீகரிக்க முடியும். அரசு விதிகளுக்கு உட்படாத சான்றுகளை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, ஆதார் திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் கூறியதாவது: 'ஆதார்' எண் உருவாக்க சேகரிக்கப்படும் தகவல்களில், தனி நபரின் முழு விவரங்கள் இருக்கும். எனினும், 'ஆதார்' எண் அட்டையில், இனிஷியல் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இனிஷியலுக்கான விரிவாக்கம் குறிப்பிடுவதில்லை. இனிஷியல் விரிவாக்கம் வேண்டும் எனக் கூறினால், விரிவாக்கம் சேர்த்து வழங்கப்படும். ஏற்கனவே, 'ஆதார்' எண் உருவாக்கப்பட்டவர்கள், தங்களின் இனிஷியல் விரிவாக்கம் கேட்டு விண்ணப்பித்தால், அதற்கேற்ப மாற்றித் தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



உடனடி நடவடிக்கை:





தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது: எதிர்காலத்தில், 'ஆதார்' எண்ணை அடிப்படையாகக் கொண்டே, அனைத்து விதமான திட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ள நிலையில், அடையாளச் சான்றாக, ஆதார் எண்ணை ஏற்க முடியாது என, வருமான வரித்துறை கூறுகிறது. குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024