Friday, May 8, 2015

சல்மான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; ஜாமீனும் நீட்டிப்பு!



மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது.

2012ஆம் ஆண்டு வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங் தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான் கான் அன்றைய தினமே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

தண்டனை நிறுத்தி வைப்பு

இந்நிலையில், இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீனும் நீட்டிப்பு

அத்துடன் சல்மான் கான், கீழ்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதி, சல்மான் கான், செசன்ஸ் கோர்ட்டில் 30,000 ரூபாய் மதிப்பிலான உறுதிமொழி பத்திரத்தை அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

அதே சமயம் வெளிநாடு செல்ல விரும்பினால் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டமும், அதிருப்தியும்

இதனிடையே ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சல்மான் கான் வீட்டு முன்பாக திரண்டிருந்த அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே சமயம் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு, ''பணமும், செல்வாக்கும் இருந்தால், நீங்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, வாகனம் ஓட்டலாம்' என்ற ஒரு தவறான செய்தியை நாட்டிற்கு உணர்த்திவிடும்" பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024