Sunday, May 10, 2015

பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாக 10 அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு

சென்னை,

தமிழக பொதுப்பணி துறையில் ரூ.30 கோடி ஊழல் புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு-கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரிகள் பட்டியலை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் நேற்று வழங்கினர்.

45 சதவீதம் கமிஷன்

தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அரசு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதற்கு தங்களிடம் 45 சதவீதம் வரை அதிகாரிகள் கமிஷன் தொகை கேட்டு வற்புறுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டி வந்தனர்.

டெண்டர் முறையில் ஒப்பந்தம் வழங்க வேண்டும். சென்னையில் நடைபெறும் பணிகளுக்கு சென்னையில் உள்ள ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கையையும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், ‘ஊழல் செய்த அதிகாரிகள் பட்டியல் விவரம் விரைவில் வெளியிடப்படும்’ என்று அதிரடி பேனர்களை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வைத்தனர்.

இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகளை நேற்றுமுன்தினம் அழைத்து, 2 நாட்கள் காலஅவகாசம் தாருங்கள். உங்களுடைய கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பட்டியல் வெளியீடு

அதிகாரிகளின் வாக்குறுதியை முதலில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர்கள் திடீரென்று ஊழல் செய்த அதிகாரிகள் பட்டியல் 9-ந்தேதி(நேற்று) லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தனர்.

ஆனால், இது ஊழல் புகார் என்பதால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் குணமணி மற்றும் நிர்வாகிகள் புகார் அளிப்பதற்காக நேற்று காலை வந்தனர்.

அங்கு ஊழல் தடுப்பு-கண்காணிப்பு டி.எஸ்.பி. சுதர்சனை சந்தித்து, பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாக 10 அதிகாரிகளின் பட்டியலை வழங்கினர். அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்களையும், செல்போன் உரையாடலையும் வழங்கினர்.

உயிருக்கு ஆபத்து

புகார் அளித்துவிட்டு வெளியே வந்த குணமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறி 4 முறை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து அலைக்கழித்தனர். எனவே இனியும் தாமதப்படுத்த கூடாது என்ற முடிவின் அடிப்படையில் முதற்கட்டமாக தற்போது 10 அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

பட்டியலை வெளியிடக் கூடாது என்று எங்களுக்கு பலதரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எனவே என்னுடைய உயிருக்கோ, சங்க நிர்வாகிகள் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு புகாரில் கூறப்பட்ட 10 அதிகாரிகள் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

புகாரில் கூறப்பட்ட அதிகாரிகள் கடந்த 2 ஆண்டில் ரூ.30 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளனர். பணியை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி உள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் பதவி விலக...

ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறையின் நீராய்வு நிறுவன செயற் பொறியாளர் தேவராஜன் என்பவரும் வந்திருந்தார். அவர் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார்.

அவர் கூறும்போது, ‘ஒப்பந்ததாரர்கள் கூறும் புகார் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. பொதுப்பணித்துறையில் லஞ்சம்-லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. நேர்மையான அதிகாரிகளால் பணியாற்ற முடிவதில்லை. எனவே புகாரில் கூறப்பட்ட அதிகாரிகளை ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகாருக்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடியாக பதவி விலக வேண்டும்.’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024