Saturday, May 9, 2015

பைக்கை மறித்த காவலர்...கீழே விழுந்த வாலிபர் குடல் சரிந்து பலி...சென்னையில் பயங்கரம்!

சென்னை: சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிலைதடுமாறி சாலையோர தரப்பு சுவரில் விழுந்ததில் வாலிபர் ஒருவர் குடல் சரிந்து பலியானார். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சாலிகிராமத்தில் இன்று நண்பகலில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவர்கள் நிற்காமல் செல்லவே,  லத்தியால் அவர்களை அடித்துள்ளார் காவலர்.

இதில் நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், ஒருவர் தூக்கி வீசப்பட்டு சாலையோர கம்பியில் விழுந்துள்ளார். வயிற்றில் கம்பி குத்தியதில் அவரது குடல் சரிந்தது. அதிலும், அந்த வாலிபர் வயிற்றில் இருந்து வெளியே சரிந்த குடலை பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.
ஒரு மணி நேரம் வராத 108 ஆம்புலன்ஸ்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அந்த வாலிபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் செல்வம் (18). விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். பிளம்பர் ஆக இருந்தார். காயம் அடைந்து தப்பி ஓடிய மற்ற 2 பேரின் பெயர் விவரங்கள் தெரிய வில்லை.
 
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையோரத்தில் இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தென் சென்னை கூடுதல் காவல்துறை ஆணையர் அருண் தலைமையில் காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலிகிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், "50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு காவலர் அந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். அவர்கள் நிலைமாறி கீழே விழுந்தனர். அவர்கள் தவறு செய்திருந்து ஓடியிருந்தாலும் வாகனத்தின் நம்பரை வைத்து காவலர் வழக்குப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் காவலர் அவர்களை லத்தியால் அடித்தது தவறு. தவறு செய்த காவலர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர், காவலர் இடமாற்றம்!

இதனிடையே, வாலிபர் பலியான விவகாரம் தொடர்பாக கே.கே.நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சற்குணம் மற்றும் காவலர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதோடு, இரண்டு பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் நாகராஜன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024