வெ. சந்திரமோகன்
இளையராஜாவின் இசைக் குழுவில் கிட்டார் இசைக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்த கங்கை அமரன், பின்னர் இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் வளர்ந்தார். அவர் இயக்கிய முதல் படம் ‘கோழி கூவுது’. கிராமம் அல்லது சிறுநகரங்களுக்குள் நடக்கும் கதைகள், எளிய கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு ரசிக்கத் தக்க படங்களை இயக்கினார் கங்கை அமரன்.
மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் மிக விசேஷமானது. உற்சாகம் கொப்பளிக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்களை அத்தனை இயல்பாகப் பாடக்கூடியவர் அவர். மற்றொரு கோணமும் உண்டு. வெளித் தோற்றத்தில் இறுக்கமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பும் ரசனையும் கசிந்துகொண்டே இருக்கும் மனிதர்களுக்கும் பொருத்தமான குரல் அவருடையது. இப்படத்திலும் முரட்டு இளைஞராக வரும் பிரபுவுக்குப் பாடிய ‘பூவே இளைய பூவே’ பாடலில் இறுக்கத்தை உடைத்துக்கொண்டு இனிமையை ரசிக்கும் மனதை வெளிப்படுத்தியிருப்பார்.
பிரபு ஊரை விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்துவிடுவார். கிராமத்தில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத தனது காதலிக்கு (சில்க்), தனது நம்பிக்கைக்குரிய சுரேஷ் மூலம் கடிதம் எழுதுவார். அக்கடித வரிகளிலிருந்தே பாடல் தொடங்கும். பின்னணியில் கிட்டார் ஒலிக்க, ‘தம்பி ராமகிருஷ்ணா(வ்) கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். அதிகாரமும் அன்பும் மிளிரும் குரல் அது.
வயல்வெளிகள், ஓடைகள், தோப்புகள் என்று இயற்கையின் ஆசீர்வாதங்கள் நிறைந்த கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள் தங்கள் வாழ்வுடன் ஒன்றிய அம்சங்களாவே இருக்கின்றன. இந்தப் பாடலின் நிரவல் இசையின் கற்பனை வளம் மனதுக்குள் உருவாக்கும் காட்சிகள் அத்தனை பசுமையானவை.
மெல்ல அழைப்பது போன்ற குரலில் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன். பெருமிதமும், ஏகாந்தமும் நிறைந்த குரலில் ‘எனக்குத் தானே…’ என்று பல்லவியை அவர் முடித்ததும், ‘லலால’என்று பெண் குரல்களின் கோரஸ் ஒலிக்கும். துள்ளலான தாளக்கட்டு, இயற்கையை விரிக்கும் வயலின் இசைக்கோவை, பறவைகளின் இருப்பை உணர்த்தும் புல்லாங்குழல், நீர்நிலைகளைக் காட்சிப்படுத்தும் ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளாலேயே இயற்கையின் ஓவியத்தை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
இப்படத்தில் வரும் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே’ எனும் குழுப் பாடலை சாமுவேல் கிரப், தீபன் சக்கரவர்த்தி, வித்யாதர் ஆகியோர் பாடியிருப்பார்கள். ஊருக்குள் சுற்றித் திரியும் காதல் ஜோடியைப் பற்றி பிரபுவிடம் அரசல் புரசலாகப் புகார் செய்யும் பாடல் இது.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் கிருஷ்ணசந்திரன், எஸ். ஜானகி பாடிய ‘ஏதோ மோகம், மலையாளத் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் அறிமுகமானவர் கிருஷ்ணசந்திரன். ஒப்புமை இல்லாத தனித்தக் குரல் கொண்டவர். ‘ஆனந்த மாலை’ (தூரத்துப் பச்சை), ‘பூவாடைக் காற்று’ (கோபுரங்கள் சாய்வதில்லை), ‘அள்ளி வச்ச மல்லிகையே’(இனிமை இதோ இதோ), ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ (ஒரு ஓடை நதியாகிறது) போன்ற அற்புதமான பாடல்களைப் பாடியவர். ‘ஏதோ மோகம்’ பாடலின் சிறப்பு, மேற்கத்திய செவ்வியல் இசையின் கூறுகளைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் கிராமியக் காட்சிகளை உருவாக்கும் அதன் தனித்தன்மைதான்.
மெல்ல உருக்கொண்டு திடீரென முகிழ்க்கும் எதிர்பாலின ஈர்ப்பைச் சித்தரிக்கும் பாடல். ஒற்றை வயலின், வயலின் சேர்ந்திசை, புல்லாங்குழல், பேஸ் கிட்டார் என்று இசைக் கருவிகளின் மூலம் ஐந்தரை நிமிடங்கள் கொண்ட ‘மினி’ பொற்காலத்தைப் படைத்திருப்பார் இளையராஜா. தேன் சொட்டும் ரகசியக் குரலில் ‘ஏதோ மோகம்…ஏதோ தாகம்’ என்று பாடலைத் தொடங்குவார் ஜானகி.
கூடவே ஒலிக்கும் ஹம்மிங்கையும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலில் வெவ்வேறு சுருதிகளில் பதிவுசெய்யப்பட்ட ஹம்மிங்குகளை ஒருமித்து ஒலிக்கச் செய்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் நீண்டுகொண்டே செல்லும் ஜலதரங்கத்தினூடே ஒலிக்கும் குழலிசையும், அதைத் தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோவையும் மனதை மிதக்கச் செய்யும். இரண்டாவது நிரவல் இசையில் வெள்ளத்தைத் திரட்டிக்கொண்டே முன்னேறிச் செல்லும் ஆற்று நீரின் ஓட்டத்தைப் போன்ற வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் ராஜா. நெல் வயல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட சிம்பொனி இப்பாடல்!
இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணசந்திரனைக் கேட்டேன். “பிரசாத் ஸ்டூடியோவின் 70 எம்.எம். தியேட்டரில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்தார் ராஜா சார். 24 ட்ராக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளுடன் பாடலை உருவாக்கியிருந்தார். அப்போது இருந்த பிரம்மிப்பு இன்று வரை எனக்கு இருக்கிறது” என்றார் சிலிர்ப்புடன்.
கிருஷ்ணசந்திரனின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் இதுதான் (ஆனால், ‘பூவாடைக் காற்று’ பாடல்தான் முதலில் வெளியானது!). தமிழில் மிகக் குறைவான பாடல்களைப் பாடியிருந்தாலும் இதுபோன்ற அபூர்வப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கிருஷ்ணசந்திரன்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in