சென்னைப் புறநகர் டூ மலேசியா! சர்வதேசப் பயணத்தில், போதை பொருள்கள்! ந.பா.சேதுராமன் போதைப் பொருளுக்கு அடிமையானவன் அதற்காக எதையும் இழக்கத் துணிகிறான், எதைச் செய்யவும் தயாராகிறான். இந்தப் பலகீனம்தான் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்குப் பலமாக இருக்கிறது. அரசாங்கமே, 'மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்று சின்னதாய் அச்சிட்டுவிட்டு, அதைவிட நூறு மடங்கு பெரிய எழுத்தில், 'டாஸ்மாக்' போர்டுகளை எழுதிவைத்து மது விற்பனை செய்துவருகிறது.டாஸ்மாக் மதுவுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதைப் போல, பான்மசாலாவுக்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டும்' என்ற குரலும் அண்மைக் காலமாக வலுத்து வருகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் உடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் இந்தப் போதை வஸ்துகள்தான் ஊழலை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. இவைகளைப் போலீசாரால், முழுமையாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியாதா? முடியும், ஆனால், மிகப்பெரும் தொய்வுநிலை இதில் காணப்படுகிறது. 'சிறையிலிருந்து வெளியே வரும் முக்கியக் குற்றவாளிகளின் அடுத்தத் திட்டம் என்ன... வெளியில் இருக்கும் எதிர்கோஷ்டி யார்... அவர்களின் திட்டம் என்ன' என்பது போன்ற அனைத்து விபரங்களும் லோக்கல் போலீசிடம் இருக்கும். உளவுத்துறை (ஐ.எஸ்) போலீசாரிடமும் அதே விபரங்கள் இருக்கும். இருதரப்பு போலீசாரும், ‘சிறைப்பறவை' வெளியில் வருவதற்கு சில நாள்கள் முன்னரே இதுபற்றி பேசி ஒரு முடிவை எடுப்பார்கள். அந்த முடிவால் மீண்டும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுத்துவிட முடியும்.
ஏற்கெனவே, குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களைக் கண்காணிப்பதோடு, குற்றத்துக்கு உதவிய அல்லது அடைக்கலம் கொடுத்த நபர்களும் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார்கள்.இந்த அடிப்படையான விஷயங்கள் காவல்துறையில், இப்போது முற்றிலும் தொலைந்து போய்க் கிடப்பதுதான் நடக்கிற சம்பவங்களுக்கு முழு காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். 'போலீசில் போதுமான ஆட்கள் இல்லை; ஆள் பற்றாக்குறை' என்றப் பொதுவானக் காரணத்தையே, போலீசார் முன்னிறுத்தும் போக்கு இதற்கான தீர்வுகளைச் சொல்லாமல் தப்பித்துக் கொள்ளும் வழியாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. சென்னை, செங்குன்றம் புதூர் ஏரிக்கரைப் பகுதியில், ‘குபேரன் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் ஒரு தொழிற்சாலை(?!) இயங்கி வந்துள்ளது. சோப் ஆயில் தயாரிப்புதான் இங்கு நடக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை (ஐ.டி.என்ஃபோர்ஸ்மென்ட்) அதிகாரிகளுக்கோ, 'இந்த சோப் ஆயில் தொழிற்சாலையிலும், அவர்களின் கிடங்குகளிலும் இருப்பது போதை மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்' என்ற ரகசியத் தகவல் கிடைக்கிறது; உடனே அதிரடியாக சோதனை நடத்துகின்றனர்.
அங்கே, மெத்தாம் பீட்டமின் 11 கிலோ, சூடோ எபெட்ரின் 56 கிலோ, ஹெராயின் 90 கிலோ என வரிசையாகப் போதைப் பொருள்கள் சிக்குகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.71 கோடி. இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் உள்பட 10 பேரும் இதில் சிக்குகிறார்கள். மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இந்த இடத்தைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்த பின்தான் போலீசுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். அதன்பிறகே போலீஸ் வருகிறது... அதாவது 3 ஆண்டுகளாகப் போலீசுக்கேத் தெரியாமல், நடத்தப்பட்டு வந்த போதை தொழிற்சாலையை அன்றுதான் போலீசார் வியந்து பார்க்கிறார்கள். 'எப்படி லீக் ஆச்சு, இந்த மேட்டர்? சோனமுத்தா, எல்லாம் போச்சா... மாசா மாசம் வரும்படியைக் கொட்டிக் கொடுத்த சோப்புக் கம்பெனிக்கே ஆப்பு வைத்தாச்சா?' என்பதுபோல் இருக்கிறது அந்தப் பார்வை.
போதை மருந்துகளைக் குடிசைத் தொழிலாகவும், தொழிற்சாலையாகவும் நடத்துகிற கும்பல்களின் எண்ணிக்கை சர்வ சாதாரணமாகிவிட்டது. மலேசியக் குடியுரிமைப் பெற்ற இருவர், தாங்கள் நடத்திவந்த 'போதை மருந்து' தொழிற்சாலை விபத்தில் சிக்கி உயிரை விட்டுள்ளனர். போலீசாரின் அடுத்தடுத்த ஃபாலோ - அப் விஷயங்கள் இப்போது காணாமல் போயிருப்பதால், இவைகள் தொடர்கதையாகி வருகின்றன. 2014-ம் வருடம், செப்டம்பர் 27-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை, பனையூரில் வசிக்கும் கணேஷுக்கு நண்பர்கள் சரவணன், ரிஷாத் ஆகியோரிடமிருந்து ஒரு போன் வருகிறது. "நாங்கள் இருவரும் நசரத்பேட்டை பைபாஸ் சாலையில் இருக்கிறோம். தலை சுற்றுகிறது, மயக்கமாக வருகிறது... உடனே வரவும்" என்பதுதான் போனில் வந்த தகவல். உடனே பைபாஸுக்குப் போன கணேஷ், அங்கு பாதி மயக்கத்தில் கிடந்த நண்பர்கள் சரவணன், ரிஷாத் இருவரையும் உடனே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பலனளிக்காமல் சரவணன், ரிஷாத் இருவரும் அடுத்த சில நிமிடங்களில் இறக்கின்றனர். 3 மாதங்களுக்கு முன் சுற்றுலா விசாவில், சென்னைக்கு வந்த இவர்கள் இருவருமே மலேசியர். சென்னையில் வசிக்கும் மலேசியக் குடிமகனான நண்பர் கணேசின் வீட்டில்தான் இருவரும் தங்கியிருந்தனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், 'சரவணன், ரிஷாத் ஆகியோரது உடல்களில் காயம் ஏதும் இல்லை. ஆனால், போதைப் பொருள் ரசாயனம் அவர்களின் உடலுக்குள் சென்றதால்தான் இருவரும் இறந்துள்ளனர்' என்றது. அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேரடி ஆலோசனையில், நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், தனிப்படை போலீசார் இதில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சரவணன், ரிஷாத் இருவரும், சென்னை புறநகர்ப் பகுதியான அயனம்பாக்கத்தில், சோப்புத் தயாரிக்கும் கம்பெனி என்ற பெயரில், போதைப் பொருளைத் தயாரித்து வந்துள்ளனர். ‘மீத்தேல் ஆப்டிமைன்’ என்ற போதைப் பொருளைத் தயாரிக்கும்போது தவறு ஏற்பட்டு போதைப் பொருளானது பட்டாசு வெடிப்பது போல் வெடித்துள்ளது. வெடியிலிருந்து வெளியேறிய போதைப்புகையை நேரடியாக சுவாசித்ததால், சரவணன், ரிஷாத் இருவரும் இறந்துள்ளனர்.
மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து குறிப்பாக, தமிழகத்தைத் தேர்வு செய்யும் போதைப் பொருள் தயாரிப்புக் கூட்டத்தில், சரவணன், ரிஷாத், கணேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள்; மலேசிய அரசால் தேடப்படும் குற்றவாளிகளும் கூட. இந்தத் தகவல்கள் எல்லாமே அப்போதைய கமிஷனர் ஜார்ஜூக்கு அதிர்ச்சியாக இருந்தன. சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இருந்து மலேசியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் இந்த
போதைப் பொருள்கள் பல ஆண்டுகளாக போக்குவரத்தில் இருக்கிறது என்கிறார்கள்... இவர்கள் மூவருக்கும் லீடர் யோகேஷ். இவர் மும்பை போலீஸ் கஸ்டடியில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த யோகேஷூக்கு வலதுகரமாக தியானேஷ் என்பவரும் அதே 'செல்'லில் தனி விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது.
சென்னைப் போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று அவர்களை விசாரணைக்காக அழைத்து வந்தனர். மலேசிய அரசால் தேடப்படும் குற்றவாளிகளான இவர்கள், வெளிநாட்டுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அரசின் உரிமத்தை, மிகச் சாதாரணமாக வாங்கி வைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிலேயே பிறந்து, காவல்நிலையக் குற்றப் பதிவேட்டில் ஒரு வழக்குக் கூட பதியப்படாமல் இருந்தாலும் 'பாஸ்போர்ட், வெரிஃபிகேஷன்' கள் பலரை மனநோயாளி களாக்கி விடுவதையும் இங்கே பல இடங்களில் பார்க்க முடிகிறது. சோப்பு, சீப்பு, கண்ணாடிகளை மட்டுமே தயாரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு எந்த வகைப் போதைப் பொருள்களையும் எளிதாகத் தயாரித்து விற்கலாம், கடத்தலாம் என்ற நிலை இங்கிருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருள்களை நேரடியாகக் கடத்திவந்தால், விமான நிலைய சோதனையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதனால், சாதாரண பிஸ்கெட், சாக்லெட் போன்ற பொருள்களோடு ஹெராயின் போன்ற விலையுயர்ந்த போதைப் பொருள்களை மறைத்துவைத்து எடுத்து வந்தால் தப்பித்துவிடலாம் என்பதே இந்தப் போதை சோப்புக் கம்பெனிகளின் கான்செஃப்ட் ஆகும். பள்ளி மாணவர்களுக்கும் இது பரவிக் கொண்டிருப்பது மிக மோசமான போக்கு என்றே கூறலாம். சென்னை ஆர்.கே.நகர் தண்டையார் பேட்டையிலுள்ள பள்ளி மாணவன் ஒருவன், (ஜூலை-4 2016) பள்ளிக் கூடம் அருகிருந்த கடையில் சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டதும் மயங்கி விழுந்தான். அது சுரேஷ்பகதூர் என்ற வட இந்திய ஆசாமி கடையில் விற்கப்பட்ட போதை சாக்லெட். போலீசாரிடம் சுரேஷ்பகதூர் அளித்த வாக்குமூலத்தில், " பீகாரில் இருந்து மார்க்கெட்டிங் செய்கிறார்கள், நாங்கள் இதை ‘பாங்கு’ என்றுதான் சொல்வோம்." என்றிருக்கிறார். அதேபோல் தண்டையார் பேட்டையில் ‘போதை’ சாக்லெட் விற்ற பீம், அதே பகுதி சுந்தரம் நகரில் மோதிலால் ஆகியோரும் போதை சாக்லெட் விற்ற வகையில் சிக்கியவர்கள். போலீசாரின் பாலோ அப் பட்டியலில் இருக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் உண்டு.இளைஞர் சமுதாயத்தை முடக்கிப் போடும் இந்தப் போதை விவகாரத்தில், உள்ளூர் போலீஸும் ஆளுகின்ற அரசும் முழுமையாக விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போதைகளின் தலைநகரம் சென்னை என்கிற தீராப்பழி வந்து சேரும்!