Wednesday, June 21, 2017

மாவட்ட செய்திகள்
சென்னை மாநகருக்கு 20 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும்




சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை கொண்டு சென்னை மாநகருக்கு 20 நாட்களுக்கு வினியோகம் செய்ய முடியும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
ஜூன் 21, 2017, 05:30 AM
சென்னை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பருவ மழை பொய்த்து விட்டதால் சோழவரம் ஏரி ஏற்கனவே முற்றிலும் வறண்டுவிட்டது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சொற்ப அளவு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் தேங்கி உள்ள தண்ணீர் மோட்டார் பம்புகள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர கல்குவாரி தண்ணீர், நெய்வேலி சுரங்க தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் மையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

20 நாட்களுக்கு மட்டும்

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏரிகளில் இருந்து போதுமான அளவு தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 113 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது.

தற்போது ஏரிகளில் தேங்கி உள்ள தண்ணீரை 20 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும். அதனை மோட்டார் பம்புகள் மூலம் எடுக்கும் பணியில் இறங்கி உள்ளோம்.

கடல் நீரை குடிநீராக்கும்...

இதுதவிர 22 கல்குவாரிகள், நெய்வேலி சுரங்கம், நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கல்குவாரிகளில் இருந்து தொடர்ந்து 100 நாட்களுக்கு தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுதவிர போரூர் ஏரியில் இருந்து 100 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் முடிந்த அளவு சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம்

சென்னையில் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

காலை, மாலை வேளைகளில் மட்டும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமான ஆழத்தில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024