Wednesday, June 21, 2017

இன்று சர்வதேச யோகா தினம் லக்னோவில் 51 ஆயிரம் பேருடன் மோடி யோகா பயிற்சி



இன்று சர்வதேச யோகா தினம். இதையொட்டி லக்னோவில் நடக்கிற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் 51 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சி செய்கிறார்கள்.

ஜூன் 21, 2017, 06:30 AM

புதுடெல்லி,

உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் உதவுகிற யோகா கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி, 7.50 மணிக்கு நிறைவுபெறுகிற வகையில், 51 ஆயிரம் பேர் கலந்துகொள்கிற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில கவர்னர் ராம்நாயக், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்கிறார்கள். இதை தொலைக் காட்சி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

லக்னோவுக்கு பிரதமர் மோடி வருகிறபோது, பாதுகாப்பு வளையத்தை மீறிவிடக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதை மூத்த போலீஸ் சூப்பிரண்டு தீபக் குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் சமாஜ்வாடி கட்சியின் இளம் தலைவர்களும் அடங்குவார்கள்.

கடந்த 7-ந் தேதி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், லக்னோ பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது அவரது வாகன அணிவகுப்பினுள் மாணவர்கள் புகுந்து, கோஷங்களை முழங்கியது நினைவுகூரத்தக்கது. அதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுஜான்பூர்திராவிலும், சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரிலும், மனித வள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மணிப்பூரிலும், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு மும்பையிலும் நடக்கிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகா பயிற்சி செய்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024