Tuesday, June 20, 2017

மருத்துவ சீட் மோசடி... சிபிஐ விசாரணை கோரும் கிரண்பேடி!

ஜெ.முருகன்



“மருத்துவக் காலியிடங்கள் நிரப்புவதில் நடந்த முறைகேடுகள், அரசியல் - நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவை கூட்டாகத் தோல்வியடைந்ததையே உணர்த்துகிறது” என்று புதுச்சேரி அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கவர்னர் கிரண்பேடி.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் மாணவர்களும் இறுதித் தீர்வுக்காகக் கிரண்பேடியையே நாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே நேரடி மோதல் நடந்துவரும் நிலையில், இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது ஆட்சியாளர்களைப் பீதியடையச் செய்திருக்கிறது.

புதுச்சேரியில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தேர்வான மாணவர்களிடம் கட்டணக் குழு நிர்ணயித்ததைவிடக் கூடுதல் கட்டணத்தைக் கேட்டன தனியார் கல்லூரிகள். இதை எதிர்த்து வழக்கறிஞர் மேனன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், “மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும்; மாணவர் சேர்க்கையை நேற்றுடன் (19.06.2017) முடிக்க வேண்டும்; சென்டாக் மூலம் தேர்வான மாணவர்கள் 10 லட்சம் ரூபாயை கட்டணக் குழுவிடம் செலுத்த வேண்டும்; கட்டணக் குழு நிர்ணயித்ததைவிடக் குறைவாக இருந்தால் மாணவர்களும், அதிகமாக இருந்தால் கல்லூரி நிர்வாகமும் திருப்பித் தந்துவிட வேண்டும்” என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி 10 லட்சம் ரூபாய்க்கு டி.டி எடுத்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். ஆனால், சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வுசெய்த இடங்கள் 31-ஆம் தேதியே நிரப்பப்பட்டுவிட்டது என்று கல்லூரி நிர்வாகங்கள் கைவிரித்ததால் அதிர்ச்சியடைந்தனர் மாணவர்கள். சென்டாக் மூலம் நாங்கள் தேர்வுசெய்த இடங்களை எப்படி வேறு மாணவர்களுக்கு வழங்க முடியும் என்ற கேள்வியுடன் மீண்டும் கவர்னர் கிரண்பேடியை அணுகினார்கள் மாணவர்கள்.



இதுகுறித்து, வாட்ஸ்அப்பில் கிரண்பேடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மருத்துவப் பட்டமேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடான மோசடி, ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் மற்றும் பெரிய அளவிளான ஊழல் அரங்கேறியுள்ளது. எனவே, இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் சி.பி.ஐ., உடனே ஓர் அவரசக் குழுவை அமைத்து இதுதொடர்பாக இருக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அழிக்கவிடாமல் பாதுகாத்துவிட்டு விசாரணையைத் தொடங்க வேண்டும். இதுதொடர்பான சில முக்கியமான ஆவணங்கள் ஏற்கெனவே சி.பி.ஐ-க்கு அனுப்பப்பட்டுவிட்டது. மேலும், சில ஆவணங்கள் அனுப்பப்பட இருக்கின்றன. மேனன் தொடர்ந்த பொதுநல வழக்கின் அடிப்படையில், அரசு ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களைச் சேர்க்குமாறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சேர்க்கை நடத்துவதற்கு முன்பே அரசு ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களைத் தனியார் கல்லூரிகள் நிரப்பிவிட்டதாகத் தோன்றுகிறது.

எனவே, தனியார் கல்லூரி நிர்வாகங்கள் நீதிமன்ற உத்தரவை மீறி அவமதித்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும் MCI-இன் வழிகாட்டுதல்படியும் அரசு நடத்தியக் கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கே இடங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அப்படித் தேர்வான மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் தற்போது அதிக அளவில் மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் மோசடி நடந்துவருகிறது. இந்நிலையில், சுயதீனமான மற்றும் உடனடியான விசாரணை மட்டுமே உண்மையைக் கண்டுபிடிக்க உதவும். அரசியல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் கூட்டுத் தோல்வியையே இந்த வழக்கு உணர்த்துகிறது. இதனால் பாதிக்கப்படுவது தகுதியான மாணவர்களும் பெற்றோர்களும்தான். அவர்களு நீதி தேவை. மேலும், அவர்களது ஓர் ஆண்டுக் கல்வியும் பாதுக்காக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், மாணவர்களைச் சேர்க்காத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off  To utilise the workforce efficiently, pre-clinical and para-clinical...