ஆங்கிலம் அறிவோமே 165: பொய்யாகப் புகழ்வதில் அவர் வல்லவர்!
ஜி. எஸ். எஸ்.
கேட்டாரே ஒரு கேள்வி
Deference என்ற வார்த்தையும், defiance என்ற வார்த்தையும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் கொண்டவையா?
**********************
An MLA என்று குறிப்பிடுகிறார்களே தவறல்லவா?
‘The MLA’ என்று குறிப்பிடும் அளவுக்கு அவர் சிறப்பாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்! சரி, அரசியலைவிட்டு ஆங்கிலத்துக்கு வருவோம்.
‘ஐந்து vowels-ஆன ‘a,e,i,o,u’ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைக்கு முன்புதானே ‘an’ வரும். (அதாவது an umbrella, an ink pen என்பதுபோல). அப்படி இருக்க MLA என்பது ‘M’ என்ற எழுத்தில் அல்லவா தொடங்குகிறது? அது ‘A MLA’ என்றல்லவா இருக்க வேண்டும்?” என்பது வாசகர் மனதில் எழுந்துள்ள கேள்வி.
சில ஆங்கில எழுத்துகள் vowels அல்ல என்றாலும் vowel ஒலியுடன் தொடங்குகின்றன. எடுத்துக்காட்டாக ‘m’ என்பதை ‘em’ என்றுதான் உச்சரிக்கிறோம். F, H, L, N, R, S, X போன்றவைகூட அப்படித்தான் (எடுத்துக்காட்டு - ‘f’ என்பதை ‘ef’ என்று உச்சரிக்கிறோம்). மேற்கூறிய ஆங்கில எழுத்துகளில் தொடங்கும் சுருக்கங்களுக்கு (abbreviations அல்லது acronyms) முன்னால் ‘an’ இடம்பெறுகிறது.
File an FIR.
He is an NCC cadet.
He is an S.P. in Police Department.
Take an X-ray.
கவனம் இருக்கட்டும் - சுருக்கங்களுக்குத்தான் இது பொருந்தும். அதாவது,
A man, an MLA
A Fan, An FIR
A stapler, An S.P.
**********************
“Pathos என்றால் என்ன, வருத்தமா? செளகார் ஜானகி pathos கதாபாத்திரங்களில் பின்னி எடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
Pathos என்பதை ‘பேதாஸ்’ என்று உச்சரிக்க வேண்டும். Pathos என்றால் இரக்கத்தையோ வருத்தத்தையோ தூண்டுகிற ஒரு தன்மை.
Pathos என்பது கிரேக்க வார்த்தை. இதற்குப் பொருள் துன்பத்தை அனுபவிப்பது. அந்த நாடகத்தில் நிறைய pathos காட்சிகள் இருந்தன என்றால் பார்வையாளர்களைச் சோகமாக்கும் காட்சிகள் இருந்தன என்று பொருள்.
கேட்டாரே ஒரு கேள்வியில் வந்துள்ள சொற்களை எதிர்ச்சொற்களாகக்கூடக் கருதலாம்.
Deference என்றால் அதீத மரியாதை, பணிவு. He approached the old lady with deference. Be mature. You need not show me undue deference.
In deference to என்ற phrase-ன் பொருள் ‘in consideration of’. In deference to his wishes, we spent one month in Goa.
Defiance என்றால் வெளிப்படையான எதிர்ப்பு, அடங்காமை.
The demonstration was held in defiance of warnings.
Students gathered in Marina beach in defiance of Government orders.
**********************
“Demonstrative pronouns-n பொருள் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
I, You, We, Day, He, She, It ஆகியவை pronouns என்று உங்களுக்குத் தெரியும். சில பொருட்களையோ நபர்களையோ சுட்டிக்காட்டும் pronoun-களை demonstrative pronouns என்பார்கள்.
This is Ragav’s laptop.
That is his chair.
Those are the people from Asia.
மேற்கூறிய வாக்கியங்களில் this, that, those ஆகியவை demonstrative pronouns.
**********************
Rigorous என்றால்?
ஒருவர் rigorous ஆகப் படிக்கிறார் என்றால் மிகவும் ஆழ்ந்து முழுமையாகப் படிக்கிறார் என்று பொருள். அதாவது very thorough. The Inspector studied the criminal in rigorous detail.
Rigorous imprisonment என்பதைக் கடுங்காவல் தண்டனை என்போம். அதாவது அந்தச் சிறைவாசத்தில் கடுமையான உழைப்பும் அளிக்கப்படவேண்டும். கடுமையான உழைப்பு என்பது என்ன? இதை இந்தியக் குற்றவியல் சட்டம் வரையறுக்கவில்லை. சிறைகள் தொடர்பான கையேடுகளும் இதைத் தெளிவுபடுத்துவதாக இல்லை. பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பாறைகளை உடைப்பது, சாலைகளை அமைப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது.
**********************
போட்டியில் கேட்டுவிட்டால்?
I did not believe in his statement but __________ events proved that he was right.
(a) final
(b) earlier
(c) latter
(d) subsequent
(e) trivial
அவர் சொன்னதை நான் நம்பவில்லை. ஆனால் _____ நடைபெற்ற நிகழ்வுகள் அவர் கூறியது சரிதான் என்று நிரூபித்தன. இப்படிக் கேள்வி வாக்கியத்தை மொழிபெயர்க்கலாம். அப்படியானால் ஆரம்ப என்ற பொருள்படும் earlier என்ற வார்த்தை இங்குப் பொருந்தாது.
Final என்ற வார்த்தைக்கு event என்ற வார்த்தை வந்தால் அதிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால், வாக்கியத்தில் பன்மை பொருள்படும் ‘events’ என்ற வார்த்தை உள்ளது.
Trivial என்பது சரியாக இருக்க முடியாது. ஏனென்றால் அற்ப நிகழ்ச்சிகள் என்பது அர்த்தம் அளிக்கவில்லை.
Later events அல்லது subsequent events இரண்டுமே பொருத்தமானவை. ஆனால் ஐந்து விடைகளில் ஒன்றாக அளிக்கப்பட்டிருப்பது latterதான் (Later அல்ல). எனவே subsequent என்பது சிறப்பாகப் பொருந்துகிறது.
I did not believe in his statement but subsequent events proved that he was right.
சிப்ஸ்
# Outsider என்றால் யார்?
வெளியாள்தான்! Stranger, Non-member, Visitor, Intruder என்ற பல அர்த்தங்கள் இதற்கு உண்டு.
# அவருக்கு Oily tongue என்றால்?
வழவழ கொழகொழவென்று பேசுவார் என்று அர்த்தமல்ல. பொய்யாகப் புகழ்வதில் (Flattery) அவர் வல்லவர்.
# Both Latha as well as Radha are beautiful. Both Latha and Radha are beautiful. இரண்டில் எது சரி?
இரண்டாவதுதான். Both வரும்போது as well as இடம்பெறுவது அநாவசியம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com