எஸ்.எஸ்.லெனின்
ரயில்களின் கூவல், பயணிகளின் கூப்பாடு என இரைச்சல் நிறைந்த ரயில்நிலையத்தில் எங்கிருந்தோ, இனிமையான கீதம் காற்றில் தவழ்ந்து வருகிறது. ‘ஏக் பியார் கா நக்மா ஹை...’ என்று லதா மங்கேஷ்கரை நகலெடுத்து யாரோ பாட, பயணிகளில் பலரும் ரயில்களை தவறவிட்டு, அந்த மதுரக் குரலில் மயங்கி நின்றனர். வயிற்றுப் பாட்டுக்காக நடைமேடையில் இரந்து பாடும் ரேணு என்ற அந்தப் பெண்ணின் குரல், சமூக ஊடகங்களிலும் வலம் வந்தது.
‘ஹேப்பி ஹர்டி அன்ட் ஹீர்’ திரைப்படத்தின் வாயிலாக ரேணு இன்று பாலிவுட்டின் பாடகியர் வரிசையில் இணைந்துவிட்டார். ஆகஸ்ட் இறுதியில் நடந்த உண்மைச் சம்பவம் இது.ரேணு போன்ற நகலுக்கே ரசிக மனம் இத்தனை வயப்படுத்துகிறது என்றால், அசலான லதா மங்கேஷ்கரின் குரலுக்கு இந்தியத் திரையிசை 75 ஆண்டுகளாகக் கட்டுண்டு கிடப்பதில் வியப்பேதும் இல்லை.
முன்னணிக்கு வந்த பின்னணிக் குரல்கள்
இந்திய சினிமாவின் ‘டாக்கீஸ்’ காலத்தை, வசனங்களைவிட பாடல்களே பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. முதன்மை நடிகர்களுக்குக் குரல்வளமே பிரதானம்; நடிப்பெல்லாம் இரண்டாம் பட்சம்தான். உலகப் போர்களின் உபயத்தில், ஏராளமான மின்னணு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்றான ‘மைக்ரோஃபோன்’ திரையிசைக்கு வரப்பிரசாதமானது.
இத்துடன் வெவ்வேறு தடங்களில் ஒலிகளைப் பதிவுசெய்யும் நுட்பங்களும் படிப்படியாக அறிமுகமாகி, திரையிசையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. கதைக்கும், காட்சிக்கும் உவப்பான குரலில் பதிவுசெய்யப்பட்ட இசைப் பாடலுக்கு நடிகர்கள் வாயசைத்தால் போதுமென்ற நிலை வந்தது. திரையில் நிழலாடிய நட்சத்திரங்களுக்கு நிகராகப் பின்னணியில் பாடும் குரல்களை ரசிகர்கள் கண்டுகொள்ளத் தொடங்கினர். இசைக்கும் குரலுக்கும் கட்டுண்ட ரசிக மனம் இங்கே கிளர்ந்தெழுந்தது.
1935-லேயே பின்னணியில் பாடும் உத்தி அறிமுகமானது. இருப்பினும், அப்போதைய பாடக நடிகர்களின் ஆக்கிரமிப்பு அது பரவலாவதைத் தாமதமாக்கியது. இந்திய மொழிகள் ஒலிக்கும் திசையெங்கும் தங்களது குரலால் ஆண்டு வரும் லதா மங்கேஷ்கர் – ஆஷா போஸ்லே இசைச் சகோதரிகள் கூட, சில மராத்தித் திரைப்படங்களின் பாடக நடிகையராகவே தங்களது கலை வாழ்வைத் தொடங்கினர்.
வெட்டப்பட்ட முதல் பாடல்
தீனாநத் மங்கேஷ்கர் என்ற நாடகக் குரலிசைக் கலைஞரின் ஐந்து குழந்தைகளின் தலைமகளாக மத்தியப் பிரதேசம் இந்தூரில் பிறந்தார் லதா. தந்தையுடன் சேர்ந்து நான்கு வயதிலேயே நாடக மேடைகளில் பாடத் தொடங்கிவிட்டார். தந்தையின் அகால இறப்பை அடுத்து, குடும்பச் சுமை, பள்ளிச் சிறுமியான லதாவின் முதுகில் ஏறியது.
பூனாவில் வசித்தபடி நாடக மேடைகளுக்கும், திரை நிறுவனங்களுக்குமாக வாய்ப்புத் தேடி அல்லாடினார். இளையராஜாவின் முதல் நாள் இசைக்கோப்பு மின்தடையின் ஆசிர்வாதத்துடன் தொடங்கியது போலவே, சினிமாவில் லதா மங்கேஷ்கரின் முதல் பாடலும் எடிட்டிங் மேசையில் வெட்டப்பட்ட விநோதம் நிகழ்ந்தது.
குரலுக்கு உலகம் அடிமையாகும்
அப்போதைய பாடகர்களின் பஞ்சாபிய பாவனையிலான குரலைவிட, லதாவின் குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. ‘சாஹித்’ திரைப்படத்தின்போது இது குறித்து இசையமைப்பாளர் குலாம் ஹைதரிடம் படத்தின் தயாரிப்பாளர் சஷாதர் முகர்ஜி புலம்பினார். அவருக்குப் பதிலளித்த குலாம் ஹைதர், “ஒரு நாள் லதாவின் குரலுக்காக உலகமே அவரது காலடியில் விழத்தான் போகிறது” என்று அடித்துச் சொன்னார்.
மஜ்பூர் படத்துக்காக ‘தில் மேரா தோடா’ பாடல் ஹைதரின் இசையில் வெளியானபோது பம்பாய் திரையுலகம் அதனை ஒத்துக்கொண்டது. அதே வருடத்தில் வெளியான ‘சந்தா ரே ஜா’, லதா பாடல்களின் ’ஹிட்ஸ்’ வரிசையைத் தொடங்கி வைத்தது. ‘அந்தாஸ்’, ‘பஸ்ராத்’ படங்கள் லதாவின் குரலுக்காகவே பேசப்பட்டன. ஐம்பதுகளின் திரையிசையை லதாவின் கந்தர்வக் குரல் ஆழ உழுதுவந்தபோது, அக்காவுக்குப் போட்டியாக ஆஷா போஸ்லேவும் பிரபலமானார். அடுத்துவந்த எழுபதாண்டுகளின் ஆரோக்கியமான போட்டியில் சுமார் ஐம்பதாயிரம் பாடல்களை இந்தியாவின் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருவரும் பாடிக் குவித்தார்கள்.
சிறகு விரித்த சகோதரக் குயில்
லதா மங்கேஷ்கர் என்ற ஆலமரத்தின் நிழலில் வளர்ந்ததில் ஆஷாவின் சுயமான முயற்சிகள் வெகுவாகத் தடுமாறின. தனது உச்சஸ்தாயிலான குரல் வளத்தைப் போலவே திரை வாய்ப்புகளிலும் லதா உச்சத்திலிருந்தார். அடுத்த இடத்திலிருந்த கீதா தத், சம்சாத்பேகம் போன்றவர்களுக்கு அப்பால்தான் ஆஷாவுக்கான வரிசை கிடைத்தது. முன்னணி நாயகியருக்கு அக்கா லதா பின்னணி பாட, ஏனைய பாடகியராலும் ஒதுக்கப்பட்ட கவர்ச்சி நடனமணிகளுக்கான ஒற்றைப் பாடல்களே தங்கை ஆஷாவுக்கு வாய்த்தன. ஆஷா அதிலும் முத்திரை பதித்தார்.
ஒரே கூட்டின் இரு குயில்களும் வெளியே வெடிக்காத புகைச்சலுடனே வலம் வந்தன. லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே சகோதரிகளுக்கு இடையில் அப்படியென்ன பிரச்சினை என்பதற்கு, பாலிவுட்டில் பல கதைகளைச் சொல்வார்கள். அப்படியான கதைகளில் ஒன்று, ஷபனா ஆஸ்மி, அருணா இரானி, ஷாகிர் ஹூசைன் நடிக்க ‘சாஸ்’(1998) என்ற திரைப்படம் வெளியானது.
லதா மங்கேஷ்கரின் தொடக்க கால உதவியாளராக இருந்த கண்பத் ராவ் போஸ்லே என்பவருடன், 16 வயது ஆஷா வீட்டைவிட்டு வெளியேறினார். இல்லறம் கசந்ததில் சில ஆண்டுகள் கழிந்து ஆஷா வீடு திரும்பியபோதும், அக்கா லதாவுக்கு வருத்தம் தீரவில்லை. பிற்பாடு பின்னணிப் பாடகிக்கான முயற்சிகளில் ஆஷா இறங்கியபோது, மூத்த சகோதரியாக லதா உதவவில்லை என்ற வருத்தமும் உறவை மேலும் பதம் பார்த்தது.
எஸ்.டி.பர்மன், ஓ.பி.நய்யார் என லதா மங்கேஷ்கருக்கு எதிர்முகாமாகச் செயல்பட்ட இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக ஆஷா போஷ்லே அமைந்தார். அப்படித்தான் ஆஷாவின் ஹிட் கணக்கு நய்யார் இசையமைத்த ‘நயா தௌர்’ படத்தின் வாயிலாகத் தொடங்கியது. எஸ்.டி.பர்மனைத் தொடர்ந்து அவருடைய மகன் ஆர்.டி.பர்மன் படங்களின் ஆஸ்தான குரலாகவும் ஆஷா மாறினார். ஆர்.டி.பர்மனின் மனைவியானபோது, பாலிவுட் பாடகியரில் லதாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருந்தார் ஆஷா. ‘நயா தௌர்’ வரிசையில் ‘தீஸ்ரி மன்ஸில்’, ‘உமரோவ் ஜான்’ எனப் பத்தாண்டுக்கு ஒரு முறை பாலிவுட்டின் இசை ரசனையைத் தீர்மானிக்கும் படங்கள் ஆஷாவின் பிரதான பங்களிப்புடன் வெளியாயின.
குரலால் ஆளும் சகோதரிகள்
1970-80களுக்கு இடையே இந்த இரு இசைச் சகோதரிகளின் ராஜ்ஜியமே பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தது. 80,90-களில் பின்னணி பாடுவதைவிட அயல் தேசங்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டினார் லதா மங்கேஷ்கர். அப்படியும் அவரது ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன்’, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே’ போன்ற படங்களின் பாடல்களுக்காக லதா இன்றளவும் கொண்டாடப்படுகிறார். ஆஷாவும் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் 90-களின் மத்தியில் ‘தன்ஹா தன்ஹா’, ‘ரங்கீலா ரே’ என ஒரே படத்தின் மூலம் உச்சம் தொட்டு அடுத்த சுற்றுக்குத் தயாரானார்.
‘பாரத் ரத்னா’ விருது லதா மங்கேஷ்கருக்கு சேர, கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியரானார் ஆஷா போஸ்லே. கின்னஸில் தொடங்கி, பால்கே, பத்ம விருதுகள் எனச் சகோதரிகள் இருவரும் முத்திரை பதித்தனர். பின்னணிப் பாடகியருக்கான தேசிய விருதுகளை ‘புதியவர்களுக்கு கொடுங்கள்’ என்று இருவருமே மறுத்திருக்கின்றனர்.
செப்டம்பரில் 90-ம் பிறந்த நாளைக் கொண்டாடிய லதா மங்கேஷ்கர், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் பாடுகிறார். மேற்கத்திய இசைத் தொகுப்புகளில் உத்வேகத்துடன் வலம் வரும் ஆஷா போஸ்லே தனது 86 வயதில் புத்தாண்டுக்கான புதிய ஆல்பத்தை வெளியிட உள்ளார்.
இசைக் குயில்கள் தமிழில் சிறப்பித்த பாடல்களில் சில.. லதா மங்கேஷ்கர்: ‘வளையோசை கலகலவென’ (சத்யா), ‘ஆராரோ ஆராரோ’ (ஆனந்த்), ‘எங்கிருந்தோ அழைக்கும்’ (என் ஜீவன் பாடுது), ஆஷா போஸ்லே: ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘நீ பார்த்த’ (ஹே ராம்), ‘ஓ பட்டர்ஃபிளை’ (மீரா), ‘எங்கெங்கே’ (நேருக்கு நேர்).