Sunday, November 10, 2019

43 மார்க்கிற்கு, 'அவுட் ஆப் சிலபஸ்' அண்ணா பல்கலை தேர்வில் குளறுபடி

Added : நவ 10, 2019 00:51

சென்னை:அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வில், மருத்துவ எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில், 43 மதிப்பெண்களுக்கு, 'அவுட் ஆப் சிலபஸ்' கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், ஒரு மாதம் முன்னதாக, நவம்பர், 6ல் துவங்கின. முதல் நாளிலேயே, வினாத்தாள், 'லீக்' ஆனதாக புகார் எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, 'பிற்பகல் தேர்வுக்கான வினாத்தாளை, ஒரு கல்லுாரியில் மாற்றி கொடுத்து விட்டனர். 'பின் தவறு சரி செய்யப்பட்டு, வேறு வினாத்தாள் வழங்கப்பட்டது' என, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், நேற்று காலையில், 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தின்படி, மருத்துவ எலக்ட்ரானிக்ஸ் தேர்வு நடந்தது. அதாவது, 2017ம் ஆண்டு பாட திட்ட கேள்விகளுக்கு பதிலாக, 2013ம் ஆண்டு பாட திட்ட கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டுள்ளன.வினாத்தாளில், 'ஏ, பி' பிரிவில், 15ம் எண்ணில், லேசர் மற்றும் தெர்மோகிராப் தொடர்பான கேள்விகள்; 9ம் எண்ணில் இடம் பெற்ற, லேசர் அறுவை சிகிச்சை குறித்த கேள்வி.மேலும், அறுவை சிகிச்சைக்கு பயன்படும் நுரையீரல் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் பாட திட்டத்தில் இல்லாதவை என, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த, 'அவுட் ஆப் சிலபஸ்' கேள்விகள் வந்ததால், கருணை மதிப்பெண்களாக, 43 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற பிரச்னை, வரும் தேர்வுகளில் வராத வகையில், வினாத்தாளை சரியாக அமைக்குமாறு, அண்ணா பல்கலைக்கு மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024