Sunday, November 10, 2019

படுக்கை இல்லாமல் வரண்டாவில் சிகிச்சைபெறும் உள் நோயாளிகள்: மதுரை அரசு மருத்துவமனையில் குளிரிலும், கொசுக்கடியிலும் தவிக்கும் பரிதாபம்


மதுரை  10.11.2019

மதுரை அரசு மருத்துவமனையில் போதிய ‘பெட்’ வசதியில்லாமல் உள்நோயாளிகள், இந்த குளிரிலும், மழையிலும் வரண்டாவில் சிகிச்சை பெறும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்து மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.

தினமும் 2,500 முதல் 2800 நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், நிரந்தரமாகவே 3,500 பேர் உள்நோயாளிகள் சிகிச்சைப்பெறுகின்றனர்.

மருத்துவமனையில் 3 ஆயிரம் ‘பெட்’கள் மட்டுமே உள்ளதால் நோயாளிகளுக்கு ‘பெட்’கள் கிடைப்பதில்லை. அதனால், சிகிச்சைப்பெறுகிற நோயாளிகளை சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளுக்காக, அவசரம் அவசமாகவே டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் நோயாளிகள், டெங்கு காய்ச்சல் நோயாளிகள், மற்ற உடல் நலகுறைவால் வரும் நோயாளிகள் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால், வார்டுகளில் போதிய ‘பெட்’ வசதியில்லை. அதற்காக நோயாளிகளை மருத்துவர்கள் திருப்பி அனுப்ப முடியாது என்பதால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனால், மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை ‘பெட்’களிலும், மற்ற நோயாளிகளை அந்தந்த வார்டுகள் முன் வரண்டாவில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்டுகளை வைக்க இடமில்லாமல்

சுவர்களில் கம்பியை அடித்து ‘ட்ரிப்ஸ்’ ஏற்றுகின்றனர். சிலருக்கு வரண்டாவிலே ஸ்டாண்டுகள் வைத்து ‘ட்ரிப்ஸ்’ ஏற்றுகின்றனர்.

முதியவர்கள், குழந்தைகள் கூட இந்த மழைக்காலத்தில் குளிர்காற்று வீசும் நேரத்தில் தரையில் படுத்து சிகிச்சைப்பெறுவதால் அவர்கள் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. ஏற்கெனவே மருத்துவமனையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதால் பலர், சிகிச்சையைத் தொடராமல் இடையிலே தனியார் மருத்தவமனைக்கு சென்றுவிடுகின்றனர். பண வசதி சுத்தமாக இல்லாத தனியார் மருத்துவமனைக்கு செல்ல வாய்ப்பே இல்லாத அடித்தட்டு ஏழை உள் நோயாளிகள் மட்டுமே அத்தனை சிரமங்களையும் தாங்கிக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, பழைய மருத்துவமனை கட்டிடம், அண்ணா பஸ்நிலையம் கட்டிடம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் உள்ளது.

பழைய மருத்துவ கட்டிடத்தில் செயல்படும் மருத்துவப்பிரிவுகளில் மட்டுமே இடநெருக்கடியும், போதிய ‘பெட்’ வசதியும் இல்லாமல் உள்ளது. அதேநேரத்தில், அண்ணாபஸ்நிலையம் மருத்துவமனை கட்டிடம், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடப்பிரிவுகளில் செயல்படும் வார்டுகளில் பயன்பாடில்லாமல் ‘பெட்’கள் உள்ளன.

மருத்துவமனை நிர்வாகப்பிரிவு மருத்துவ அதிகாரிகள், மருத்துவ சிகிச்சை, பணியாளர்கள் வருகையை மட்டுமே கண்காணிக்கின்றனர். நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், அவர்களுடைய பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்பதும் இல்லை.

மருத்துவமனை பணியாளர்கள் கூறுகையில், ‘‘எந்தளவுக்கு மருத்துவமனையில் இடநெருக்கடி, அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லையோ, அதே அளவுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கவனிக்கும் செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மருந்துகள் வழங்கும் மருந்தாளுநர்கள் வரை ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மருத்துவ மாணவர்களை வைத்தே மருத்துவமனையை அன்றாடம் சமாளிக்க வேண்டிய உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் நோயாளிகள் வருகை சதவீதத்தை தணிக்கை செய்து, அவர்களுக்கான ‘பெட்’ வசதியையும், உடைந்த ‘பெட்’களுக்குப் பதிலாக புதிய ‘பெட்’களை வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பல வார்டுகளில் உடைந்த ‘பெட்’களுக்கு செங்கல் கொடுத்து முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பெட் வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு சரியான திட்டமிடுதல் இல்லை. ‘பெட்’ பற்றாக்குறையை தற்காலிகமாக நோயாளிகளை வரண்டாவில் படுத்து சிகிச்சை பெறுவதை தவிர்க்க அண்ணா பஸ்நிலையம் விபத்து, காய சிகிச்சைப்பிரிவு, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் பழைய மருத்துவ கட்டிடப்பிரிவுகளில் சரிவிகிதமாக நோயாளிகள் பிரித்து, சிகிச்சை பெற வைக்கலாம்.

வார்டில் இடம் இல்லாமல் இடவசதியுள்ள கட்டிடங்களுக்கு அந்த சிகிச்சைப்பிரிவுகளை மாற்றலாம். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடப்பிரிவில் இன்னும் மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் முழுமையாக செல்லவில்லை. மருத்துவமனை ‘டீன்’ மற்றும் உயர் அதிகாரிகள் நிர்வாகப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நோயாளிகளுக்கான சிரமங்கள், அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த மருத்துவமனையில் உயர்மட்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

தேனி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவுகள் முழுஅளவில் மேம்படுத்தாமல் உள்ளது. அதனால், அந்த மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்கு நோயாளிகள் மதுரைக்கு அதிகளவு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதைத் தடுக்க, அங்கு ஸ்பெஷாலிட்டி சிகிச்சைப் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், ’’ என்றார்.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...