Thursday, January 24, 2019

மாநில செய்திகள்

சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக தொடங்கியது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு




சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

பதிவு: ஜனவரி 24, 2019 05:30 AM

சென்னை,

சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேலும் பெருக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10-ந் தேதிகளில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

3 ஆண்டு இடைவெளியில் தற்போது, 2-வது முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று காலை 10 மணிக்கு மாநாடு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறைக்கான தொழில் கொள்கை-2019-ஐ வெளியிட்டார். அதை அவரிடம் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்புரை ஆற்றினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து பேசினார். நிறைவாக, கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழில்துறை) ஞானதேசிகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

அதேபோல், பல்வேறு நாடுகளின் துணை தூதர்கள், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக தொழில் கண்காட்சியும் நடைபெற்றது. 250 அரங்குகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் விதவிதமான தயாரிப்பு பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த தொழில் கண்காட்சியை மாநாட்டு தொடக்க விழாவில் இருந்தபடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதேபோல், சென்னை சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனம் புதிதாக தொடங்கியுள்ள தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் வர்த்தக நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.

2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. காலை 10 மணி முதல் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறுகிறது. நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

நிறைவு விழா நிகழ்ச்சியில் முக்கியமாக தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 100 நிறுவனங்களுக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்றும் அரசு எதிர்பார்ப்பதுடன், இதன் மூலம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் என்றும் நம்புகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024