Sunday, January 6, 2019

42 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது பகல் நேர ரயில்; மதுரை- சென்னை இடையே அதிவேக புதிய ரயில்- வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது

Published : 04 Jan 2019 08:16 IST

என்.சன்னாசி





மதுரையில் இருந்து ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு ‘தேஜஸ்’ என்கிற அதிவேக ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 7 மணி நேரத்தில் சென்னையை சென்றடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தற்போது 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு ரயில் மூலம் செல்கின்றனர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு முதன் முதலாக 1977-ம் ஆண்டு பகல் நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதே சமயம் பல ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சென்னை செல்லும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வடமாநிலங்களைப் போன்று மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஒன்று இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் நலச் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர், எம்பிக்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

பிரதமர் தொடங்கி வைப்பார்இதை ஏற்று மதுரை- சென்னைக்கு பகல் நேர ‘தேஜஸ்’ அதி விரைவு ரயிலை தினமும் இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ரயிலின் முதல் பயணத்தை பிரதமர் மோடி மதுரையில் இருந்து தொடங்கி வைக்க உள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா ஜன.27-ல் நடைபெற உள்ளது. அப்போது பிரதமர் மோடி இந்த ரயிலை கொடியசைத்து தொடக்கி வைக்க திட்டமிட்டிருப்பதாக மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ரயில் என்ஜினுக்கு அருகிலும், பின் பகுதியிலும் கார்டுக்கு 2 பெட்டிகள் ஒதுக்கப்படுகின்றன. முதல் 4 எக்ஸ்கியூடிவ் பெட்டிகள். சொகுசு வசதிகள்விஐபிக்கள், முக்கிய அதிகாரிகள் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 பெட்டிகளில் சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் தலா 48 பேர் வரை பயணம் செய்யலாம். தரமான கேட்டரிங் வசதியும், தானியங்கி கதவுகளும், தொலைக்காட்சியும் பொருத்தப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை சேவையில்லைஇதுகுறித்து தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச் செயலர் கே. பத்மநாபன் கூறியதாவது:கோவா, ராஜஸ்தானில் ‘தேஜஸ்’ அதிக வேக ரயில்கள் ஏற்கெனவே ஓடுகின்றன. இதுபோன்ற ரயிலை மதுரை-சென்னை இடையே இயக்குவதற்குப் பல முறை கோரிக்கை வைத்தோம். தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு கிளம்பி இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடையும். வியாழக்கிழமை மட்டும் ரயில் சேவை இருக்காது. சுமார் 7 மணி நேரத்தில் சென்னை-மதுரை இடையே இயக்கத் திட்டமிட்டுள்ளதால் திருச்சி, விழுப்புரம் ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரயில் மூலம் பாண்டியன் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் பிற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் குறையும் என்றார்.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தேஜஸ் ரயிலை இயக்க கால அட்டவணை தயாரிக்கப்படுகிறது. கட்டண விவரம், ரயிலில் உள்ள வசதி, சலுகை விவரம் விரைவில் தெரியவரும். அதுகுறித்து ஆன்லைனில் வெளியிடப்படும். புதிய ரயிலை மதுரை வரும் பிரதமர் தொடங்கி வைக்கும் வகையில் திட்டமிடப்படுகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...